சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்!

சர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்!

ர்வதேச அளவில் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் இந்திய பல்கலைக்கழகங்களில் எதுவும் இடம் பெறவில்லை என்றாலும், சிறந்த 1000 இடங்களில் விஐடி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.

சீன நாட்டைச் சேர்ந்த “ஷாங்காய் ரேங்கிங் கன்சல்டன்சி” என்ற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக, உலகின் சிறந்த 1000 பல்கலைக் கழகங்களின் நம்பகமான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலகில் உள்ள 32,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களில் 2500 சிறந்த பல்கலைக்கழங்களை தரவரிசைப்படுத்தி, அதில் 2022 ஆம் ஆண்டுக்கான உலகின் 1000 தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

இந்நிறுவனம், உலகப் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்த ஆறு புறநிலை குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது. இதில் நோபல் பரிசுகள் மற்றும் பீல்ட்ஸ் மெடல்களை வென்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை, இயற்கை மற்றும் அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை, அறிவியலில் அட்டவணைப்படுத்தப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை அடக்கம்.

அதன்படி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளது. 3 வது இடத்தில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகமும் 4 வது இடத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் 5 வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகமும் இடம் பெற்றுள்ளது. தலைசிறந்த முதல் 15 இடங்களில் அமெரிக்க பல்கலைக்கழங்கள் 13 இடம் பெற்றுள்ளது. 7 வது இடத்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்பட, இங்கிலாந்து 2 இடங்களை பெற்றுள்ளது.

தலை சிறந்த 100 பல்கலைக்கழங்களில் இந்தியாவின் எந்த பல்கலைக்கழமும் இடம்பெறவில்லை என்றாலும் முதல் 1000 இடங்களில் இந்தியாவின் 14 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் ஐஐஎஸ் பெங்களூரு முதலிடத்திலும் டெல்லி பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்திலும் விஐடி 3 வது இடத்திலும் ஐஐடி சென்னை 5 வது இடத்திலும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகம் 7 வது இடத்திலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 9 வது இடத்திலும் கல்கத்தா பல்கலைக்கழகம் 14 வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவில் இடம்பிடித்த 14 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், டெல்லிக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 உயர்கல்வி நிறுவனங்கள் தான் இடம்பிடித்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவை உலகின் 1000 சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் 1000 சிறந்த பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 196 பல்கலைக்கழகங்களும் சீனாவைச் சேர்ந்த 186 பல்கலைக்கழங்களும் ஜெர்மனியின் 47 பல்கலைக்கழகங்களும் இத்தாலி நாட்டின் 46 பல்கலைக்கழகங்களும் ஸ்பெயின் நாட்டின் 40 பல்கலைக்கழகங்களும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 பல்கலைக்கழகங்களும் ஜப்பான் நாட்டின் 32 பல்கலைக்கழகங்களும் இடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் 28 பல்கலைக்கழகங்களும் பிரிட்டனின் 23 பல்கலைக்கழகங்களும் தைவானின் 14 பல்கலைக்கழகங்களும், ரஷ்யாவின் 10 பல்கலைக்கழகங்களும் சுவிட்சர்லாந்தின் 9 பல்கலைக்கழகங்களும் பாகிஸ்தானின் 7 பல்கலைக்கழகங்களும் இடம்பிடித்துள்ளது.

error: Content is protected !!