February 7, 2023

2021 தமிழகத் தேர்தல் களம்:மூன்று முதல்வர் வேட்பாளர்கள் தயார்!

தி.மு.க.வைப் பொருத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர். அ.தி.மு.க.வில்தான் இ..பி.எஸ். – ஓ.பி.எஸ். போட்டாபோட்டி நடந்தது போலத் தோன்றியது. இருதரப்பு ஆதரவாளர்களும் நள்ளிரவிலும் கார்களில் வேகமாகச் செல்லும் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டின. ஏதோ நடக்கப்போகிறது என்று ஒரு எண்ணம் பரவிய நிலையில், இரதரப்பினரும் கைகோர்த்து ஒருமனதாக இப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்கள்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுமே பெரும் கட்டமைப்பும் தொண்டர் பலமும் கொண்ட கட்சிகள். களத்தில் பிரதானப் போட்டி என்பது இவ்விரு கட்சிகளுக்கு அல்லது அவை சார்ந்த அணிகளுக்கிடையில்தான். இவர்கள் இருவர் தவிர, மூன்றாவது முதல்வர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவிக்கப் பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கமல் – ரஜினி கூட்டணி பற்றி (அதாவது ரஜினி தொடங்கவிருக்கும் புதிய கட்சியுடன்) பேச்சு வந்தபோதே, ம.நீ.ம. உயர்நிலைக்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீப்ரியா“அப்படியென்றால் முதல்வர் வேட்பாளர் கமல்தான்” என்றார். கடந்த வாரம் நடந்த ம.நீ.ம. செயற்குழு மற்றும் நிர்வாகக்குழுக் கூட்டத்துக்குப் பிறகுதான், கமல் முதல்வர் வேட்பாளர் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிவித்தார். தலைமையின் விழைவை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே ஸ்ரீப்ரியா சூசகமாக உணர்த்தியிருக்கிறார் என்று கருதலாம்.

ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரியில் அல்லது தேர்தலுக்கு நெருக்கமாக என்று பலவாறாக எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் முன்பே அவர் தெளிவு படுத்திவிட்டார். “என்னால் முதல்வர் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் கட்சித் தலைவர்தான். ஆட்சித் தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவரை, நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்” என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பரபரப்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். “மீன்குழம்பு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடப்பதும் இருக்கும்” என்ற பிரபலமான, சூடாக விவாதிக்கப்பட்ட கருத்தையும் அதே சந்திப்பில்தான் தெரிவித்தார்.

ரஜினி முதல்வராக்க விரும்பும் அந்த “அன்பு கொண்ட, பாசம் கொண்ட, நிர்வாகத் திறமை கொண்டவர்” யார் என்பது தெரியாதவரை, கமல்தான் அவரோ என்ற ஊகம் அல்லது நம்பிக்கை நீடிக்கலாம். ஏனெனில், ரஜினி அல்லாமல், வேறு கட்சியுடன் கமல் கைகோர்த்தால் அவர்கள் கமலை முதல்வர் வேட்பாளராக ஏற்பார்களா என்ற கேள்வி எழும். ஆக, இப்போதைய நிலவரப்படி தமிழகத் தேர்தல் களத்தில் மூன்று அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். தவிர, துணை முதல்வர் வேட்பாளர் ஒருவரும் களத்தில் எட்டிப்பார்ப்பது தெரிகிறது.

அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் அறிகுறியாகத் தெரிய வந்திருக்கிறது. பா.ம.க. இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்தான் அவர். பா.ம.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், “அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களை ஆட்சி செய்தவர். அவருக்கு தமிழக முதல்வராக வரக்கூட ஏராளமான தகுதிகள் உள்ளன. அந்த இலக்கை நோக்கித்தான் பா.ம.க.வை கட்டமைத்து வருகிறோம். அப்படி இருக்கும் போது அவருக்கு ஆட்சியில் துணை முதல்வர் பதவி கேட்பதில் தவறொன்றுமில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி, பா.ம.க. (கூட்டணியில்) சேரும் என்று எதிர்பார்க்கப்படும் அ.தி.மு.க.வின் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “கட்சித் தொண்டர்களை நம்பிக்கையுடன் கட்டுக்கோப்பாக வைப்பதற்கு அப்படிச் சொல்லியிருப்பார்” என்று முடித்துக்கொண்டார்.

தீரன் கூறியிருக்கும் இன்னொரு கருத்தும் கவனத்திற்குரியது. “தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் பா.ம.க. இருப்பதை விரும்புகின்றன” என்று கூறியிருக்கிறார். இரண்டு பக்கமும் கதவைத் திறந்து வையுங்கள், பேசிக்கொள்ளலாம் என்பதற்கான முன்னறிவிப்பா என்று தெரியவில்லை. ஆக, கூடுதல் நிலவரப்படி, மூன்று அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர்கள், அதிகாரப்பூர்வமற்ற ஒரு துணை முதல்வர் – தமிழகத் தேர்தல் களத்தில். நா.த.க (நாம் தமிழர் கட்சி) வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அதன் தலைவர் சீமான் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். “மக்களுடன் மட்டும்தான் கூட்டணி” என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த தேர்தல்களின் அடிப்படையில், வாக்கு வங்கி கணக்கில், நா.த.க.வை விட மிகப் பின்தள்ளியிருக்கும் ம.நீ.ம. அதன் தலைவர் கமலை அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கும்போது, நா.த.க. அதன் தலைவர் சீமானை அவ்வாறு ஏன் அறிவிக்கவில்லை? இத்தனைக்கும் அரசியலில் கமல், ரஜினியைவிட தான் சீனியர் என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். சீனியர் தயங்குகிறாரா? தெரியவில்லை.

தேர்தல் நெருங்க, நெருங்க மேலும் சிலர் முதல்வர் வேட்பாளராக களத்தில் இணையலாம். ஆனால், மூன்றாமவர் உள்பட அவர்களெல்லாம் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு “கடுமை” கொடுப்பவர்களாக (அதாவது “Tough” என்று சொல்கிறார்களே…) இருப்பார்களா..?

அங்கேதான் நிற்கிறான், வாக்காளன்!

இளையபெருமாள் சுகதேவ்