2021-2025: உலக அரசியலில் இந்தியா லிட்டில் சூப்பர் பவர்?

2021-2025: உலக அரசியலில் இந்தியா லிட்டில் சூப்பர் பவர்?

பைடனின் பதவிக் காலத்தில் இந்தியாவிற்கு உலகளவில் நிறையப் பணிகள் காத்திருக்கும் போல. அமெரிக்க புதிய அதிபர் பைடனின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகப்போகும் ஆண்டனி பிளிங்கன் சென்ற ஆகஸ்ட் மாதம் இந்திய விடுதலை நாள் கூட்டம் ஒன்றில் பேசுகையில் இந்தியாவை கூட்டாளி நாடாக்க ஒபாமா ஆட்சிக்காலத்திலேயே முயற்சிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார்.

இப்போது பைடன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவைச் சீனாவின் ஏகபோக செல்வாக்கிற்கு எதிராக நிலைநிறுத்தப் போவதாக கூறப்படுகிறது. இராணுவ ரீதியாக இந்தியாவிற்கு உதவிகள் செய்து சீனாவிற்கு எதிரான தெற்காசிய சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்பதையும் ஒபாமா காலத்திலேயே சொல்லி விட்டார்கள். இப்போது அதை நிறைவேற்றலாம். இந்தியாவிற்கும் அது போன்ற உதவித் தேவை.

அமெரிக்க-இந்தியப்  பொருளாதாரங்களில் தேக்க நிலையில் நீடிப்பதையும் உடைக்க வேண்டும். இரு தரப்பிலும் அதற்கான முயற்சிகள் துவங்கும். குறிப்பாக விவசாயம், கதிரவ ஆற்றல், மென் பொருள் போன்ற துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க கூட்டணி சேருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலை நாடுகளின் மீது இந்தியா வைக்கும் பெரிய குற்றச்சாட்டு அவை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்துக் கொள்வதில்லை என்பது. இப்போது ஐரோப்பாவுடனேயே வர்த்தகக் கூட்டணியை இந்தியா விரும்புகிறது. எனவே அமெரிக்கா மோஸ்ட் ஃபேவர்ட் நேஷன் அந்தஸ்தை இந்தியாவிற்கு உறுதி செய்யும்.

உலக அரங்கில் குறிப்பாக ஆசியா, தெற்காசியாவில் பாகிஸ்தான், ஈரான், வட கொரியா, சீனா ஆகிய நாடுகளின் சேட்டையை சமாளிக்க இந்தியா தேவை. இந்தியா- ஈரான் இடையேயான வர்த்தகத்தை, துறைமுக திட்டத்தைத் தொடர புதிய அரசு அனுமதிக்கும். ஏனெனில் ஈரானி னுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவேன் என்று பைடன் சொல்கிறார். ஒபாமாவின் ஒப்பந்தம் அது. வட கொரியாவுடன் தென் கொரியாவும் அமெரிக்காவும் பேசலாம். சீனாவுடனான வர்த்தக மோதல்தான் சர்ச்சைக்கு உட்பட்டது. காங்கிரசில் பைடனுக்கு சமரசத்திற்கு சம்மதம் கிடைப்பது கடினம். செனட்டில் குடியரசுக் கட்சிக்கு பலம் அதிகம். எனவே இந்தியாவை ஆதரித்து சீனாவை வழிக்கு கொண்டு வர வேண்டும். இதற்குத்தான் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்கிறார்கள். கமலா ஹாரிஸ் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டிப்புடன் நடந்துக் கொள்வார் என்பதை இந்திய அரசு சமாளித்து விடும். டிரம்ப்பின் ஆட்சியில் நடக்காத மனித உரிமை மீறல்களா?

அடுத்த நான்காண்டுகளுக்கு வெளியுறவு விவகாரங்களில் மோடி அரசிற்கு சாதகமானச் சூழ்நிலையே நிலவுகிறது. ஏறக்குறைய லிட்டில் சூப்பர் பவர் எனும் செல்லப் பெயருடன் வலம் வரும் பாக்கியம்; ஆனாலும் இந்தியா அதற்கு தகுதியானதுதானே?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!