2021ஆம் நிதியாண்டில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள்!

2021ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையான 9 மாதங்களில் சுமார் 35,000 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், 2021ஆம் நிதியாண்டில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு ரெயில்வே துறை அளித்துள்ள பதிலில், “கடந்த 2021 – 2022ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பராமரிப்புப் பணிகளுக்காக 20,941 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த காலாண்டில் 7,117 ரயில்கள், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 6,869 ரயில்கள் என மொத்தம் 35,026 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதே காலக்கட்டத்தில் 41,483 ரயில்கள் திட்டமிட்ட நேரத்தைக் கடந்து தாமதமாக வந்துள்ளன. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 15,199 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாகின. மேலும், 26,284 பயணிகள் ரெயிலும் தாமதமாக இயக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை ரயில்வே தெரிவிக்கவில்லை. அதுபோன்று, கொரோனா மூன்றாம் அலை காரணமாக ரயில்களில் வார நாட்களில் பயணிப்போர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.