August 3, 2021

மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

நடப்பாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாள் மருத்துவத் துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தொடர்ந்து பிற துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன.