December 1, 2021

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்!

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 8) நடைபெற்றது.

இதில், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 10 பேருக்கு பத்ம பூஷன் விருது, 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது என 119 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. அவர்களின் உறவினர்கள் விருதினை பெற்றுக்கொண்டனர்.

பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும், கர்நாடகா ஹஜப்பா, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹாக்கி வீராங்கனை ராணி உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.