2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு

2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு

அனைவருமே தேர்தல் பற்றி கருத்துக் கணிப்புகளை மட்டுமே வெளியிடுவார்கள். நான் சற்று வேறுபட்ட முயற்சியாக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறக் கூடிய சில வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளேன். என் நட்பு வட்டத்தில் பல அரசியல் கட்சி உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உண்டு. இந்தப் பட்டியலைக் கண்டு உங்களது கருத்துக்களை எதிரொலித்தால் பயனுள்ள ஒரு விவாதமாக இருக்கும். அரசியல் கட்சி அன்பர்கள் இதில் சிலவற்றை வாக்குறுதிகளாகவே மாற்றினால் இந்திய சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
parliament-feb 26
1) விவசாயிகளை தங்களது உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிப்பது.

2) கட்டாயக் கொள்முதலைத் தடுப்பது. நாட்டின் எப்பகுதியிலும் உற்பத்தியான பொருட்களை விற்க அனுமதிப்பது.

3) ஒவ்வொரு மாநிலத்திலும் மண்டல அளவில் மட்டும் அரசு உணவுக் கிடங்குகளை அமைப்பது. ஒவ்வொரு கிடங்கையும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் விளக்கு வசதி, குளிர்பதன வசதி போன்றவற்றை செய்துத் தருவது. கிடங்குகளில் சேமிக்கப்படும் உணவுப் பொருட்களை தட்டுப்பாடு நிலவும் காலங்களில் மட்டும் வெளியே விநியோகம் செய்ய வழங்க அனுமதிப்பது.

4) இராசயன உரங்கள் போன்ற நவீன விவசாய இடுபொருட்களுக்கான மானியத்தை அறவே நீக்கி அம்மானியத்தை இயற்கை விவசாய இடுபொருட்களுக்கு வழங்குவது.

5) ஒவ்வொரு கிராமங்களிலும் கூட்டுறவு அடிப்படையில் உணவுக் கிடங்குகள், விதை சேமிப்பு நிலையங்களை அமைப்பது. இதன் மூலம் இடைத் தரகர்களிடம் குறைந்த விலைக்கு விவசாயப் பொருட்களை விற்கும் கட்டாயத்தை விவசாயிகளிடமிருந்து அகற்றலாம்.

6) ஒவ்வொரு கிராமத்திலும் ஒருங்கிணைந்த சமூக சூரிய ஒளி மின் உற்பத்தி அலகுகளை அமைப்பது. இதன் மூலம் கிராமத்தின் பொது மின்சாரத் தேவைகளை நிறைவேற்றுவது.

7) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தொழிற்பயிற்சி மையங்களை நிறுவுவது. சுய தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் அறியச் செய்ய தகவல் மையங்களையும் திறப்பது.

8) அரசு நியாய விலைக்கடைகளில் நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் விற்கச் செய்வது. இப்பொருட்கள் வரி விதிப்பிலிருந்து விலக்கம் செய்யப்பட்டு விற்கப்படும்.

9) விளை நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்பது தடை செய்யப்படும்.

10) விவசாயத்திற்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும். நியாயமான கட்டணத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட ஆவண செய்யப்படும்.

11) எரிபொருட்கள் பொருளாதார இயக்கத்திற்கு உயிர்நாடியானவை. இவற்றின் விலையேற்றம் பொருளாதார வளர்ச்சியைச் சுருக்குகிறது. இதனால் எரிபொருட்கள் மீதான வரி, மான்யம் இரண்டையும் அடியோடு நீக்குவது. பொது போக்குவரத்து கழகங்களுக்கு மட்டும் மானியம் தொடரப்படும்.

12) பெருகி வரும் வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டி அவற்றின் மீதான உற்பத்தி வரி, விற்பனை வரி ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இவற்றோடு மாசு வரி என்ற புதிய வரியையும் அறிமுகப்படுத்தப்படும்.

13) நீண்ட காலக் கொள்கையாக சுழற்சி முறையில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவது பற்றி சிந்திக்கப்படும். இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.

14) நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம். துவக்கப்பள்ளி வரை கட்டாய தாய்மொழிக் கல்வி. உயர் கல்விக்கு மட்டும் ஆங்கிலம். உயர் கல்வியையும் தாய்மொழியில் கற்பிக்க வழிவகை காணப்படும்.

15) உள் நாட்டு நீர் வழிகளை ஏற்படுத்தி நீர் வழிப் போக்குவரத்த் மேம்படுத்தப்படும்.

16) அனைத்து மாநில (பிராந்திய) மொழிகளும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்படும்.

17) தனி நபர் வருமான வரி வரம்பு ரூ. 5 இலட்சம் வரையில் உயர்த்தப்பட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சம் வரையிலுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே அரசு உதவிகள்/ திட்டங்கள் பொருந்தும்படி சலுகை வரம்புகளைச் சுருக்க வேண்டும். நிறுவன வருமான வரி 40% நிர்ணயிக்கப்பட வேண்டும். மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரிகளை எளிமைப்படுத்தி கண்டிப்புடன் வசூலிக்க வழிவகை காணப்படும்.

18) சுற்றுச் சூழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும்

19) பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் பெருமளவில் குறைத்துக் கொள்ளப்படும். நடுத்தர மற்றும் குடிசைத் தொழில்களுக்கு அதிக வரிச் சலுகைகள் அளிக்கப்படும்.

20) வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவது தேச விரோத செயலாக அறிவிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். ஏற்கனவே பதுக்கப்பட்டுள்ளவற்றை மீட்டெடுப்பது மட்டுமின்றி அவற்றை வெளிநாட்டு சொத்துக்களில் முதலீடு செய்ய வழி காணப்படும்.

21) உண்மையான மக்களாட்சியைக் கொடுக்கத் தேவையான நிர்வாக, தேர்தல் சீர்திருத்தங்களை நாடு முழுவதும் விவாதத்திற்கு முன் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

K Ramesh Babu

error: Content is protected !!