September 29, 2021

1988ல் தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள்!

இன்று (19.02.2017) சற்று நேரத்திற்கு முன்னாள் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் கைபேசியில் பேசும் போது மறைந்த வி.என். ஜானகி அவர்கள் 28.01.1988 அன்று தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது நடந்த கலவரத்தை குறித்தெல்லாம் விவாதித்தார். அப்போது அவரோடு நானும் ராஜ் பவனுக்கு அன்றைய ஆளுனர் குரானாவை சந்திக்கச் சென்றோம் என்பதை அவரே நினைவுப்படுத்தினார்.

edit feb 19a

அந்த கால கட்டத்தில் நெடுமாறனின் தமிழ் நாடு காங்கிரசின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். பி.எச். பாண்டியன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசாமியின் ஜூனியர். என்னுடைய சீனியர் ஆர். காந்தியும் ராமசாமியின் ஜூனியர். 1970 – 80 களில் பி.எச். பாண்டியன் வழக்கறிஞராக இருக்கும் பொழுது மிகவும் நெருக்கமாக பழகியதுண்டு. பல வழக்குகள் சேர்ந்தும் நடத்தியதுண்டு. இந்த நெருக்கத்தின் காரணமாக சட்ட ரீதியாக கலந்தாலோசிக்க வேண்டுமென்று 28.01.1988 அன்று அவரோடு உடனிருக்க வேண்டினார். எனவே வி.என். ஜானகி நம்பிக்கை கோரும் அன்றைய சட்டமன்ற நிகழ்வை நேரடியாக பார்க்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. உடன் என்னுடைய சக வழக்கறிஞர் பி. சந்திரசேகரனை அழைத்துச் சென்றேன். இன்று அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் அன்று வந்த பொழுது கலவரம் வெடித்தது. பேரவைத் தலைவராக இருந்த பி.எச். பாண்டியனின் மேஜையும் மைக்கும் இதே போல தள்ளப்பட்ட்து. அவருடைய கண்களில் அடியும் பட்டது. இரண்டு தடவை சபை ஒத்தி வைக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேறியது. காங்கிரஸ் வி.என். ஜானகிக்கு ஆதரவு தருகிறோம் என்று சொல்லியும் ஆதரவு தரவில்லை. அன்றைக்கு மூப்பனார் தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்ற எண்ணமும் காங்கிரசிற்கு இருந்தது. காங்கிரஸ் உறுப்பினர் சிவராமன் பேரவைத் தலைவரின் மேஜைக்கு அருகே சென்று தாக்க முற்பட்டார் என்ற செய்தியும் குற்றச்சாட்டாக எழுந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்வைப் போல கோஷம் போட்ட்தும் மேசைகளும் உடைபட்ட்ட்து. சட்ட மன்ற ஆவணங்கள் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன. கைகலப்புகள் என கட்டுக்கு மீறி பெரும் போராட்டமாக இருந்தது. நான் பேரவைத் தலைவர் அறையிலிருந்து அறிக்கையின் குறிப்புகளை தயாரிக்க முடியாமல் சட்டமன்ற வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் இருந்து குறிப்புகளை எடுக்கச் சென்ற போது இதையெல்லாம் கண்டேன். அன்றைக்கு சட்டமன்ற வாயில்கள் அடைக்கப்படவில்லை.ஜெ அணியில் அன்றைக்கு நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இருந்தனர்.

ஆர்.எம். வீரப்பன், கே.ஏ.கிருஷ்ணசாமி, காளிமுத்து போன்றவர்கள் ஜானகி அணியிலும் இருந்தனர். இப்படி கலவரம் ஏற்பட்ட பின் சட்டமன்றத்தில் இருந்த மைக்குகளை பிடுங்கி எடுத்துக் கொண்டு ஜெ அணி சட்ட மன்ற உறுப்பினர்கள் கையில் தடி வைத்திருப்பது போல சட்டமன்றதுக்கு வெளியே உலா வந்த்தெல்லாம் பத்திரிக்கையில் புகைப்படங்களாக வந்தன. இதை குறித்து முழுமையான நிகழ்வுகளை கவர்னருக்கு அறிக்கை தயாரிக்க பேரவைத் தலைவருடைய தனிச் செயலாளர் வெங்கட்ராமனுடன் இணைந்து தயாரித்ததெல்லாம் நினைவுபடுத்தினார்.அன்று இரவு 7 மணி அளவில் கவர்னர் குரானாவிடம் அறிக்கை அளிக்க சென்ற போது பி.எச். பாண்டியன் என்னை அழைத்தார். நான் தயங்கினேன். கட்டாயப்படுத்தி தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். அப்போது சட்ட்த்துறை அமைச்சராக இருந்த பொன்னையனும் உடன் வந்திருந்தார். கவர்னரிடம் அறிக்கையை அளித்து ந்டந்தவற்றையும் சட்ட நெறிமுறைகளையும் எடுத்துச் சொன்ன பொழுது உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை நான் எடுத்துக் கொடுத்த்தெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

அன்று ராஜஸ்தான் மாநில வழக்கும், ஜனதா ஆட்சி காலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைத்த்து குறித்தும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஜனதா மாநில ஆட்சிகளை கலைத்த்தை குறித்தான உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையெல்லாம் எடுத்துக் கொடுத்தேன் என நினைவுப் படுத்தினார்.
அதற்கு பின் தான் எஸ். ஆர். பொம்மை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இப்படியெல்லாம் பங்களிப்புகளை பழகியவர்கள் நினைவுப் படுத்தும் போது சற்று மகிழ்ச்சியாக உள்ளது.அப்போது எல்லாம் இம்மாதிரி தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாத காலம்.அன்றைக்கு இந்த நிகழ்வை தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தியில் காட்டப்பட்டது. சில தினசரிகளில் செய்திகளும் படங்களும் வெளியாகின..

29 ஆண்டுகள் கழிந்த விட்டன. காலச் சக்கரங்கள் வேகமாக ஓடுகின்றது. இந்த நிகழ்வுகள் மட்டும் திரு. பாண்டியன் அவர்கள் சொல்லும்போது கடமையாற்றினோம் என்ற உணர்வு. இந்த நிகழ்வை சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். இது குறித்து நூலாக வெளிவரும் ”என்னுடைய நினைவுகளில்” விரிவாக பதிவு செய்து வருகிறேன்.

கே. எஸ். ராதாகிருஷ்ணன்