ரபேல் : டாக்குமெண்டை திருடிப்புட்டாங்க! – தி இந்து நாளிதழ் மீது மத்திய அரசு புகார்!

ரபேல் : டாக்குமெண்டை திருடிப்புட்டாங்க! – தி இந்து நாளிதழ் மீது மத்திய அரசு புகார்!

நம் நாட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்படும் விவகாரமான ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இன்று தெரிவித்தார்.

ரபேல் போர் விமான கொள்முதலில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், ரபேல் விமான கொள்முதலில் வழக்கமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதால் இதில் விசாரணை தேவை இல்லை என கருதுவதாக கோர்ட் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இதை ஏற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரபேல் போர் விமான பேரம் தொடர்பான முக்கிய அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் அவை மறைக்கப்பட்டு இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டதாக கூறினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. எனவே, திருடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்திருக்கும் சில குறிப்புகளை இந்த நீதிமன்றம் ஏற்கக்கூடாது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் குறித்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அட்டர்னி ஜெனரல் அந்த ஆவணங்கள் கிளாசிபைடு ஆவணங்கள், ரகசிய ஆவணங்களாகும், ஆகவே அவற்றை வெளியிடுவது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறும் செயலாகும். “ஆகவே அந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுபவர்கள் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள், மேலும் நீதிமன்ற அவமதிப்பும் இதில் அடங்கும்” என்று தெரிவித்தார்.

குறிப்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ரபேல் ஒப்பந்தம் பற்றிய கட்டுரை சுப்ரீம் கோர்ட் விசாரணையின்மீது செல்வாக்கு செலுத்துவதாகும். அதுவே நீதிமன்ற அவமதிப்புக்கு உரியதாகும் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி,”வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கை விசாரிப்பதால் அவர் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த விசாரணை அமையும் என நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது” என குறிப்பிட்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,”ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அதிமுக்கிய ரகசிய கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன?” என்பது தொடர்பாக உணவு இடைவேளைக்கு பின்னர் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

ரபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டு தொடர்பாக விசாரணைக்காக இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இதை அடுத்து வழக்கு விசாரணை மார்ச் மாதம் 14ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தது சுப்ரீம் கோர்ட்.

Related Posts

error: Content is protected !!