September 18, 2021

வயசானவங்களுக்கு யூத் ப்ளட் _ அமெரிக்காவின் நியூ ட்ரீட்மெண்ட்!

ஒருவர் 80 வயதின் போது, 50 வயது போல தோற்றம் அளிப்பார்; 40 வயது உள்ளவர், 70 வயது உள்ளவர் போல தோற்றம் அளிப்பார். இந்த மாற்றத்தை தருவது, நமது உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் தான். ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் தான், நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையி லிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன. கண்ணுக்கு புலம்படாத பல லட்ச நுண்ரத்தக் குழாய்கள் உடலில் உள்ளன. இதயத்தின் இடது பகுதியில் துவங்கும் ரத்தக் குழாய், மகா தமனியாக வெளியே வந்து, உடலுடன் எல்லா உறுப்புகளுக்கும் பிரிவுகளாக சென்று ரத்தம் கொடுத்து, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது. இது ஆரோக்கியமாக இருந்தால், மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும் எனபதெல்லாம் தெரிந்த தகவல்தான். ஆனால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக்கொண்டால் இளமையுடன் தோற்றமளிக்கலாம் என்று அறிவித்துள்ளதும் இதில் விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர்களைக் கொடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்து பெரும் சலசலப்பை கிளப்பியுதும் தெரியுமா?.

ஆம்.. அந்தச் சிகிச்சை வயதானவர்களுக்கான புத்துணர்ச்சி ஏற்படுவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டதாம். இளைஞர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா மனித ரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவம் மட்டும் செலுத்தப்படுகிறது. இதில் 60 வயது உடையவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்று அரிவித்திருந்தார்கள்..

இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளது என ஸ்டாம்போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும், யு.எஸ். மருத்துவமனையின் நிறுவனருமான ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார். அதாவது தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இந்த சிகிச்சை உதவும். ஏனெனில் இவைதான் வயதானால் ஏற்படக்கூடிய பிரச்னைகளில் முக்கியமான ஒன்று எனக் கூறினார்.

இந்தப் புதிய மருத்துவமுறையானது ஸ்டாம்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்துவந்த ஆய்விலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.