September 18, 2021

புத்தகம் சாகாவரம் பெற்றவை!.

“இ-புத்தகங்கள் வந்துவிட்டன. அதனால் காகிதப் புத்தகங்கள் செத்துவிட்டன. புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூலகங்கள் கிடங்குகளாகி விட்டன. புத்தகங்கள் அச்சிட மரங்கள் வெட்டப்பட்ட காடுகள் தப்பித்துக் கொண்டு விட்டன’ என்று ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், கனடாவிலும் சொல்லவும், எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
ebook-empty-bookshelf
மாணவர்கள் அச்சிட்டப் புத்தகங்களைப் பள்ளிகளுக்குத் தூக்கிக் கொண்டு போவதை விட்டுவிட்டார்கள். பல்கலைக்கழக நூலகங்கள் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டு வருகின்றன. செய்தித்தாள்கள், பத்திரிகைகள் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தவர்கள் கணினியில் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கதைப் புத்தகங்கள், கவிதைகள் படித்துக் கொண்டு இருந்தவர்கள் ஐ பேட், அமெஸôன் கெண்டிலில் படிக்கிறார்கள். எனவே, காகிதப் புத்தகங்கள் வேகமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

படிப்பு என்பதே இ-புத்தகம் என்றாகிவிட்டது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் இ-புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் வைத்துக் கொண்டு கற்கிறார்கள். அது கற்றல் என்பதின் அடிப்படை அம்சத்தையே மாற்றி விட்டது.

கம்ப்யூட்டரில் தகவல் களஞ்சியமாக இருந்த விக்கிபீடியாவைத் தாண்டி பல மொழிகளிலும் எழுதப் பட்டப் புத்தகங்களை ஆங்கில மொழியிலும், சில ஐரோப்பிய மொழிகளிலும் சீன, ஜப்பானிய மொழிகளிலும், தமிழ், வங்காளம், இந்தி உள்பட சில இந்திய மொழிகளிலும் படிக்க முடிகிறது.

படிப்பு என்பது நாடு, மொழி என்பதையெல்லாம் கடந்து இருக்கிறது. பழைய புத்தகம் – புதிய புத்தகம் என்ற பாகுபாட்டையும் தாண்டியிருக்கிறது.

எனவேதான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அக்காட்டன் மொழியில் எழுதப்பட்ட கில்காமெஷ் காப்பியம், சுமேரிய மன்னனின் 282 சட்ட நீதி விதிகள், ஹோமர் காப்பியங்கள், பிளாட்டோவின் குடியரசு, சாக்ரடீஸ் தத்துவங்கள், புத்தரின் தம்மபதம், சீன தத்துவ ஞானியான கன்பியூஷியஸ் சிந்தனைகள், இந்திய இதிகாசமான ராமாயணம், மகாபாரதம், தமிழ் திருக்குறள், பைபிள், குர்-ஆன், மார்கோ போலோ பயண குறிப்புகள், ஜப்பானிய நாவலாசிரியை லேடி முரஸôகி செஞ்சிக் கதைகள், மீகையில் செர்வாண்டீஸ் டான் குவின் செட் நாவல், பெஞ்சமின் பிராங்க்ளின் சுய சரித்திரம், டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, போரும் வாழ்வும், மகாத்மா காந்தியின் சத்திய சோதனை எல்லாம் இ-புத்தகமாகப் படிக்கக் கிடைக்கின்றன.

இ-புத்தகம் படிக்க கம்ப்யூட்டர், ஐ பேட், அமெஸôன் கெண்டில் உள்பட சில நிறுவனங்களின் கருவிகள் வேண்டும். இணையதள வசதி இருக்க வேண்டும்.

இவையெல்லாம் பணச் செலவுதான். ஒரு புத்தகம் வாங்குவதைவிட அதிகமான செலவுதான். ஆனால், கம்ப்யூட்டர், இணையதள வசதி என்பது பன்முக சேவைகள் பெறுவதாக இருக்கிறது. எனவே, அவற்றுக்கான செலவு என்பது அவசியமானதாகி விடுகிறது.

இ-புத்தகங்களை கண்களால் பார்க்கத்தான் முடிகிறது. புத்தகம் போல் கைகளால் தொட்டு ஸ்பரிசிக்க முடியவில்லை என்பது ஒரு குறையாகச் சொல்லப்படுகிறது. ஆனால், புத்தகம் என்பது படிப்பதற்கானது. அதாவது, படிப்பதற்காகவே புத்தகங்கள் எழுதப்படுகின்றன.

படிப்பின் நோக்கம் அறிவு பெறுதல், மகிழ்ச்சி அடைதல், தன்னிலைத் தெரிதல், மனக் கசடுகளை அகற்றிக் கொள்ளுதல் என்று பல காரணங்களைச் சார்ந்திருக்கிறது என்றாலும், அறிந்து கொண்டதை விட அறியாமல் பெற்றதுதான் அதிகம் என்பது படிப்பின் வழியாகத் தெரிகிறது.

வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கொடுக்கும் புத்தகங்கள் நெடுங்காலமாக கற்தூண்களிலும், களிமண் சிலேட்டுக்களிலும், மரப்பட்டைகளிலும், பனைவோலைகளிலும், பட்டுத் துணிகளிலும் எழுதப்பட்டு வந்தன.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் காகிதத்தில் மை கொண்டு புத்தகம் அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொழில் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், படிப்பின் மீதான ஆவல் ஆகியவற்றால் பல நாடுகளுக்கும் பரவியது.

மொழி, எழுத்து என்பவை போல, புத்தகம் என்பதும் மனித அறிவால் கண்டறியப்பட்டது. மனித அறிவு, ஞானம் கொண்டு பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்டிருக்கும் எல்லா புத்தகங்களுமே அசலான புத்தகங்கள் என்று சொல்லிவிட முடியாது.

சரியாகச் சொல்லப்பட்ட புத்தகங்கள் இருப்பது போலவே சாரமற்ற புத்தகங்களும் இருக்கின்றன. எழுதப்பட்டவை எல்லாம் அரிய புத்தகங்கள் இல்லை. தரம் அறிந்து படிக்க ஒரு தெளிவு வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மனிதர்கள் பூரணமாக அறிந்தும் அறியாமலும், தன் மேதமையால் எழுதியிருக்கும் புத்தகங்களை எல்லோருக்கும் கொண்டு செல்ல பிரதியெடுத்தும் மொழிபெயர்த்தும் வந்தார்கள். பிரதி எடுப்பதில் உள்ள இடர்பாட்டை களைய ஒவ்வொரு தலைமுறையிலும் முயற்சி செய்து வந்தார்கள்.

அதில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியில் பிறந்த ஜோனான் கூடன்பர்க் என்பவர் லத்தீன் எழுத்துக்களைத் தனித்தனியாக செய்து, பசை கொண்ட மையில் 1455-ஆம் ஆண்டில் பைபிள் நூலை அச்சிட்டார். ஒரு பக்கத்திற்கு 42 வரிகள்.

நேர்த்தியான அழகான பதிப்பை எடுத்துக் கொண்டு, கிறிஸ்துவ பாதிரிகள் சமயப் பிரசாரத்திற்குச் சென்றார்கள். அவர்களில் சிலர் கூடன்பர்க் அச்சிட்ட முறையைப் பின்பற்றி தாங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாட்டு மொழியில் புத்தகம் அச்சிட ஆரம்பித்தார்கள்.

1578-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்டிறிக்ஸ் என்ற போர்த்துக்கீசிய பாதிரியார் “தம்பிரான் வணக்கம்’ என்ற நூலை தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிட்டார்.

அது அவரின் சக கிறிஸ்துவ ஊழியரான செயிண்ட் பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய வழிபாட்டு நூல். அதுதான் தமிழின் முதல் அச்சுப் புத்தகம். அக்கால வழக்கப்படி மெய்யெழுத்து மீது புள்ளி இல்லாமல் அச்சிடப்பட்டது.

படிப்பு என்பது எழுத்து வழியாகவே நிகழ்கிறது. எனவே, படிப்பு என்பதற்கு எழுதப்பட்ட புத்தகங்கள் ஆதாரமாக இருக்கின்றன. படிப்பு என்பது இளம் பருவத்தில் தொடங்கி விடுகிறது.

பள்ளிக்கூடங்களுக்குச் சிறுவர்கள் ஏராளமாகப் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாதித்தது. சிறுவர்களின் சுமையைக் குறைக்க என்ன செய்யலாம் என்று பலரும் சிந்தனை செய்தார்கள்.

1949-ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான ஆங்கிலா ரூஷ் ரூபலஸ் ஓராண்டிற்கான எல்லா பாடப் புத்தகங்களையும் ஒரு எலக்ட்ரானிக் கருவியில் பதிவு செய்து புத்தகமாக்கினார்.

அதற்குக் காப்புரிமை பெற்றார். அதுதான் இ-புத்தகம் என்பதன் முதல் படி. அறிவியல் வளர்ச்சியில் கம்ப்யூட்டர், இணையதளம் வந்ததால் இ-புத்தகம் வெகுவேகமாகப் பரவியது.

மீகையில் எஸ். ஹார்ட் என்ற இல்லியனாஸ் பல்கலைக்கழக பேராசிரியர், கம்ப்யூட்டரில் இ-புத்தகம் என்ற கனவை மெய்ப்பட வைத்தார். அவர் 1971, ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தாமஸ் ஜெர்பர்ஸன் எழுதிய அமெரிக்க அரசியல் சாசனம் முழுவதையும், அதிலிருந்த ஐம்பத்தாறு பேர்களின் கையொப்பத்தோடு பதிவேற்றம் செய்தார்.

அச்சு புத்தகம் என்பதைச் சாத்தியமாக்கிய கூடன்பர்க்கை கெüரவிக்கும் விதமாக தன் இ-புத்தக திட்டத்திற்கு, “கூடன்பர்க்’ திட்டம் என்று பெயரிட்டார். பதிப்புரிமை இல்லாத 313 புத்தகங்களை தானே கம்ப்யூட்டரில் அச்சடித்தார். பிழை திருத்தம் செய்தார். தரமான பதிப்புகளையே இ-புத்தகத்திற்கு எடுத்துக் கொண்டார்.

பதிப்புரிமை இல்லாத 35,000 புத்தகங்களை, அறுபது மொழிகளில் பதிவேற்றினார். அவற்றைப் படிக்க யாரும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. எல்லோரும் படிக்க வேண்டும். புத்தகம் என்பது எல்லோருக்குமானது என்பது அவர் கோட்பாடாக இருந்தது.

பல தன்னார்வ ஊழியர்கள் அவரோடு சேர்ந்து உழைத்தார்கள். கூடன்பர்க் திட்டத்தில் பல்துறை நூல்களை ஒருவர் இ-புத்தகம் வழியாகப் படிக்க முடியும்.

1999-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பெரிய நூலகங்கள் தங்களிடம் உள்ள அரிய நூல்களை இ-புத்தகமாக வெளியிட அனுமதி கொடுத்தன. அதுபோல, காப்புரிமை பெற்றிருந்த பல பதிப்பகங்கள் தங்கள் நூல்களை கம்ப்யூட்டரில் ஏற்றி பரவலான மக்கள் படிக்கக் கொடுக்க முன் வந்தன.

அதன் காரணமாக, பல முன்னணி படைப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக, கலாசார விற்பன்னர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் எல்லாம் இ-புத்தகங்களாகின. தற்போது பல மொழிகளிலும், பலரும் இ-புத்தகம் கொண்டு வருகிறார்கள்.

இ-புத்தகம் என்பது எழுதப்பட்ட புத்தகத்தைப் படிக்க வசதி செய்து கொடுப்பதுதான். அது அறிவியல் வளர்ச்சி. படிப்பு என்பது எழுத்து என்பதை அடிப்படையாகக் கொண்டது. மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே எழுத்தில் அச்சிடப்பட்டதைப் படிக்க முடியும்.

படிப்பு என்பது காகிதப் புத்தகம் சார்ந்ததா, இ-புத்தகம் சார்ந்ததா என்பது கேள்வியே இல்லை. எதன் வழியாகப் படித்தாலும், படித்ததின் வழியாகப் பெற்றது என்ன என்பதுதான் கேள்வி.

புத்தகங்கள் மனித அறிவால், மனிதர்களுக்காகவே எழுதப்படுகின்றன. அதில் எழுதப்பட்ட ஞானமும் இருக்கிறது; எழுதப்படாத மேதைமையும் இருக்கிறது என்பதுதான் சிறப்பு.

எத்தனையெத்தனையோ எழுதப்பட்டிருந்தாலும் மனிதர்களிடம் எழுத இன்னும் ஏராளமாக இருக்கின்றன என்பது எழுதப்பட்ட புத்தகங்கள் வழியாகத் தெரிகிறது.

இ-புத்தகங்கள் படிப்பை அருகில் கொண்டு வந்து இருக்கின்றன. கூடன்பர்க் திட்டத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவின்போது (2021-இல்) 100 கோடி புத்தகங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதனால், அச்சு புத்தகம் அருகிவிட்டது என்பது இல்லை.

புத்தகம் என்பது அதன் பெüதீக தோற்றமில்லை. அதன் உள்ளே இருக்கும் சாரமே அதன் இருப்பை நிலை நாட்டுகிறது. அதுவே இ-புத்தகத்திலும் இருக்கிறது. எனவே, எப்போதும் புத்தகம் சாகாவரம் பெற்றவை.

சா. கந்தசாமி