சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி!
சீனாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 2021ஆம் ஆண்டை விட 2022ல் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை சாலை விபத்துகளில் 2,357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சாலை விபத்தானது நன்சாங் கவுண்டியில் அதிகாலை 1 மணிக்கு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக நஞ்சாங் மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் கூறுகையில், ” மூடுபனி வானிரை காரணமாக இந்த விபத்து நடத்திருப்பதாக” தெரிவித்தனர். மூடுபனி அதிக அளவில் உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.