June 14, 2021

சென்னை: சென்னை எழும்பூர் டூ கோடம்பாக்கத்துக்கு இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில் – வீடியோ!

சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே, 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.

இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த ரயில்களில் ஒன்றான இஐஆர் 21 என்ற நீராவி இன்ஜின் ரயில் சுமார் 55 ஆண்டு காலம் இந்திய ரயில்வேயில் போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்தப்பட்டது. இந்த ரயில் என்ஜின் 1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்டது. இது உலகின் புகழ்பெற்ற நீராவி என்ஜின் ‘பெய்ரி குயீன் இ.ஐ.ஆர்.21’ ரகத்தை சேர்ந்தது. 164 ஆண்டு பழமைவாய்ந்த இந்த என்ஜின் கிழக்கு ரயில்வேயில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடியது. பின்னர், 1909-ம் ஆண்டு முதல் இந்த என்ஜின் தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

பின்னர் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலும், ஜமல்பூர் பணிமனையில் உள்ள அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து பின்னர், கடந்த 2010-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரயில் என்ஜின் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு, பழுதுநீக்கப்பட்டு தற்போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்தப்படுகிறது.

அதன் படி 40 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த நீராவி ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இன்று இயக்கப்பட்டது.

இந்த பாரம்பரிய இன்ஜின் ரயிலில் ஒருமுறை பயணம் செய்ய சிறுவர்களுக்கு ரூ.300, பெரியவர் களுக்கு ரூ.500 எனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.1,000 எனவும் கட்டணம் வசூலிக்கப் பட்டது. அதோடு பயணிகளுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள், சிறுவர் சிறுமியர் உள்ளிட்டோர் உற்சாகமாக பயணம் செய்தனர்.