ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களுக்கு கெளரவ பதக்கம்!

ஐ.நா அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த அமைதிப்படைக்கு அதிகமான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு சூடானில் உள்ள ஐநா அமைதிப்படையில் பணியாற்றும் 150 இந்திய வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் கெளரவ பதக்கம் வழங்கப்பட்டது.

2011ம் ஆண்டில் சூடானில் இருந்து தெற்கு சூடான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது அதை தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் கொடூரமான சிவில் யுத்தம் தொடங்கியது. இதில் நான்கு லட்சம் மக்கள் மடிந்து போனார்கள் . அப்படியாப்பட்ட தெற்கு சூடானின் மலக்கல் நகரில் இந்திய வீரர் களுக்கு கவுரவ பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வீரர்கள் பதக்கம் பெரும் புகைப்படங்களை ஐநா ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

பதக்கம் பெற்றவர்களில் ஒருவரான கலோனல் அமித் குப்தா கூறுகையில்  ‘‘தெற்கு சூடான் மக்கள் மனதில் நேர்மறையான நினைவுகளை விட்டு செல்ல நினைக்கிறேன். அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

அதாவது சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு தெற்கு சூடான் புதிய நாடாக உருவாக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் உள்ள தெற்கு சூடானில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஐநா பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கலோனல் அமித் குப்தா தலைமையின் கீழ் உள்ள 850 வீரர்கள் மலக்கல்லில் விலங்குகளுக்கான மருத்துவ மனையை உருவாக்கியுள்ளனர். பல இடங்களில் விலங்குகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளனர். மற்றொரு நகரமான கோடோக்கில் இரண்டாவது விலங்குகள் மருத்துவ மனையை கட்டி வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் அதற்கான பணி நிறைவடையும் என கூறப்படுகிறது. தெற்கு சூடானில் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்கான உதவிகளையும் ஐநா அமைதி படையினர் செய்து வருகிறார்கள்.