September 29, 2021

12.12.1950 – டிரைலர் ரிலீஸ்!

இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘12.12.1950’  திரையுலக புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமிது.

ஆம். தற்போதைய சூழலில் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் ரஜினியின் பிறந்த நாளை பல்வேறுவிதமாகக் கொண்டாடிவரும் சூழலில் அவரது பிறந்த தேதியான 12.12.1950 என்பதையே படத்தின் தலைப்பாக வைத்து ரஜினி ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் விருந்து படைக்கவுள்ளார் செல்வா. தீவிர ரஜினி ரசிகரான இவர், இப்படத்துக்காக தன்னுடைய பெயரையும் கபாலி செல்வா என மாற்றியுள்ளார். இந்தப் படத்தை ரஜினி ரசிகர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கதையாக உருவாக்கி வருகிறார். அண்மை யில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ட்ரெய்லரை விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) மாலை வெளியிட்டார்.

இப்படத்தில் ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் ஆகிய நான்கு பேரும் ரஜினி ரசிகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆதித்யா – சூர்யா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் கதையையும், தலைப்பையும் ரஜினியிடம் காட்டி ஆசீர்வாதம் பெற்ற பிறகே படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் செல்வா. கபாலி செல்வா எனத் தன் பெயரை மாற்றி வைத்ததோடு, கபாலி படத்தின் ரஜினி தோற்றத்தை இப்படத்தில் செல்வா ஏற்று நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மிக விரைவில்  படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடிசினல் ரிப்போர்ட்!

42 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் செல்வா, இப்படத்துடன் ரஜினிக்காக வேறு ஒரு நல்ல விஷயத்தையும் செய்யப் போகிறார். அதாவது ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் பல இளைஞர்கள் அப்பழக்கத்திற்கு ஆளானார்கள், என்ற குற்றச்சாட்டு இறுக்கிறது. அதை மாற்றும் வகையில், இனி யாரும் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாதவாறு ஒரு கையெழுத்து முகாமை கபாலி செல்வா நடத்த இருக்கிறார்.

ஆனால், இது புகை பழக்கம் உள்ள இளைஞர்களுக்கான கையெழுத்து வேட்டையல்ல, இளைஞர்களான பிறகு இந்த புகை பழக்கத்திற்கு உள்ளாகமல் இருக்க, இப்போது சிறுவர்களாக இருக்கும் நாளைய இளைஞர்களிடம் நடத்தப்பட இருக்கும் கையெழுத்து வேட்டையாகும். ஒரு லட்சம் குழந்தைகளிடம், தாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு, எந்த நேரத்திலும் சிகரெட் புகைக்க மாட்டோம், என்ற உறுதிமொழியில் கையெழுத்து வாங்கப் போகிறாராம். அப்படி வாங்கும் குழந்தைகளின் ஒரு லட்சம் உறுதி மொழி சான்றிதழ்களை ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று அவரது பிறந்தநாள் பரிசாகவும் தர கபாலி செல்வா முடிவு செய்திருக்கிறாரம்.இந்த கையெழுத்து வேட்டை குறித்து கபாலி செல்வா ரஜினிகாந்திடம் கூறிய போது, “நல்ல விஷயம், பண்ணுங்க” என்று ஊக்கம் அளித்து உற்சாகமும் படுத்தியுள்ளார்.