September 27, 2021

12-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்(தான்) நடைபெறும் – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

வரும் மார்ச்- ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் முழுமையாக நடக்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது.இதையொட்டி தொடக்க கட்ட போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில் பல்வேறு ஆலோசனைப் பின்னர் இந்த ஐ.பி.எல். போட்டியை இந்தியாவிலேயே நடத்துவது என்றும், போட்டியை மார்ச் 23-ந்தேதி தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து உள்ளது. 2019 வருடம் ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் நடக்க உள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் தொடர் “மே” மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் வரும் மே மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் “ஐபிஎல் 12” சீசன் வழக்கத்தைவிட  கொஞ்சம் முன்னதாகவே தொடங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில்,12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது சம்பந்தமாக அரசு தரப்பு, போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷனிடமும் கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில்  இந்த வருட ஐபில் போட்டி (சீசன் 12) இந்தியாவில் தான் நடைபெறும் எனவும், தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆனாலும் இந்தியாவில் மக்களவை தேர்தல் வர இருப்பதால், அதற்க்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 12 வது சீசனுக்கான போட்டி ஆரம்ப தேதி அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.