September 24, 2021

110-வது விதியின் கீழ் முதல்வர் சொன்னதோ கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்: கருணாநிதி

உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முழு உடல் பரிசோதனையை ஏழை, எளிய மக்களும் செய்துகொள்ளும் வகையில், முன்னோடி திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.இதனிடையே 110-வது விதியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களுக்கு 12.09 சதவீத தொகையே செலவு செய்யப்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
karuna vs jayaa
இது குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவை தொடங்கிவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விடுவார். 2011-ம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார். அந்த 19 அறிக்கைகளிலும் 54 அறிவிப்புகள் இருந்தன. 2012-ம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார். இந்த 61 அறிக்கைகளில் 99 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

2013-ம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 46 அறிக்கைகளில் 189 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 2014-ம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதல்-அமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 39 அறிக்கைகளில் 235 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆக மொத்தம், 110-வது விதியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 165 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். ஒவ்வொரு அறிக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை செய்திருப்பதால், 165 அறிக்கைகளிலும், மொத்தம் 577 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்திருக்கிறார்.

இந்த 577 அறிவிப்புகளில் எத்தனை அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முடிந்து முழுமை பெற்றுள்ளன?. எத்தனை திட்டங்கள் பாதியிலே நின்று கொண்டுள்ளன?. எத்தனை திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன?. என்ன காரணத்தால்? என்பது பற்றிய விளக்கங்களை அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அது அரசின் கடமையும் கூட. ஏனென்றால் பேரவையிலே முதல்வராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் 2013-2014-ம் ஆண்டு விதி 110-ன் கீழ் ஜெயலலிதா 235 திட்டங்களை அறிவித்ததாகவும், அதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். நான் அப்போதே எஞ்சிய 120 திட்டங்களுக்கு அரசாணை ஏன் பிறப்பிக்கப்படவில்லை என்றே கேட்டிருந்தேன்.

2014-ம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 42 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் செலவு செய்யப்பட்டது என்னவோ 271.92 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்குத்தான். அதாவது 1.18 சதவீதம் தான். ட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், முதல்-அமைச்சர் 110-வது விதியின் கீழ்படித்த அறிவிப்புகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய் தான். 12.09 சதவீதம் தான். 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.