December 4, 2021

உலகமெங்கும் எர்த் அவர் ; ஒரு மணி நேரம் விளக்குகள் அணைப்பு.

உலகம் முழுவதும் புவி வெப்பத்தால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் கணக்கிலடங்காது. மேலும் உலகில் உள்ள எல்லா பாகங்களிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எங்கும் தொழில் மயம் ,அதன் மூலம் நாட்டை வளப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ,மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி,பெருகி வரும் மோட்டார் வாகனங்கள், இரயில்கள், விமானங்கள் இவற்றிற்கு பயன்படுத்தும் பெட்ரோல் ,டீசல் வெளியிடும் புகை, சமையல் எரிவாயு, ரசாயன உரங்கள், குளிர்சாதனப் பெட்டி வெளியிடும் வாயுக்கள் இவை அனைத்தும் வளிமண்டலத்தில் நுழைந்து,அதன் மூலம் பூமியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பம் மிக அதிகமாக உயர தொடங்கிவிட்டது. இதைக் கவனத்தில் கொண்டு சர்வதேச அளவில் நேற்று எர்த் ஹவர் என்ற புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1

இதை ஒட்டி எல்லா நாடுகளிலும் தங்கள் உள்ளூர் நேரத்தின்படி, இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சார பயன்பாட்டை நிறுத்தி வைத்து ஆற்றல் சேமிப்பு குறித்தும், பருவ நிலை மாற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. கடந்த 2007ம் ஆண்டு முதன் முதலாக ஆஸ்திரேயாவின் சிட்னி நகரில் இந்த புவி நேரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் இதை கடைபிடிக்கத் தொடங்கின. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று இந்த புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைக்கும் பிரசாரமாகத் தொடங்கிய இது, இந்த முறை “மாற்று எரிசக்திக்கு மாறுங்கள்” என்ற பிரச்சாரமாக வளர்ந்துள்ளது. சூரியசக்தி, காற்றாலை, தாவர-உயிர்க்கழிவு எரிசக்தி, நீர்மின் சக்தி உள்ளிட்டவை புதுப்பிக்கத் தக்க அல்லது மாற்று எரிசக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சாரப் பயன்பாட்டுக்கான செலவும் குறையும்.

unnamed
2009 முதல் விளக்கை அணைக்கும் இந்த எர்த் அவர் பிரசாரம் இந்தியாவிலும் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு 58 நகரங்களில், 50 லட்சம் பேர் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றனர். 2012 இல் 150 நகரங்களுக்கு இந்தப் பிரச்சாரம் விரிவடைந்தது.2013 – 14 -ல் மேலும் பல நகரங்களில் பரவியது.சச்சின் டெண்டுல்கர், வித்யா பாலன், ஆமிர் கான், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் ஆகியோர் இதுவரை இதன் தேசியப் பிரச்சாரத் தூதர்களாகச் செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் படி நேற்று இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி, குடியரசு தலைவர் மாளிகை, கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையில் ஆகிய பல இடங்களில் நேற்று இரவு 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மின் விளக்குள் அணைக்கப்பட்டன. இதே போன்று சென்னையிலும் ஜேப்பியார் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநரான டாக்டர் ரெஜின் முரளி தலைமையில் பிரமாண்டமான விழிப்புணர்வுடன் எர்த் அவர் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.