March 27, 2023

நேஷனல் ஜியோகிராபிக் பரிசு பெற்ற நம்ம கார்த்திக்

நேஷனல் ஜியாகிராபிக் சார்பிலான ஆண்டின் சிறந்த புகைப்படம் போட்டியில் இந்திய வம்சாவளியில் வந்த கார்த்திக் சுப்ரமணியம் என்பவர் எடுத்த ’வெண்டலைக் கழுகுகளின் நடனம்’ புகைப்படம் விருது பெற்றிருக்கிறது.

நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார். காட்டுயிர்களைப் படம் பிடிப்பதில் வல்லுநரான இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் (Bald Eagles) புகைப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை, மக்கள், இடங்கள் மற்றும் விலங்குகள் என்ற நான்கு வகைகளில் கிட்டத்தட்ட 5,000 படங்கள் இந்தப் பரிசுக்கான பரிசீலனைக்கு வந்துள்ளன. அவற்றில் இருந்து கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த படம் சிறந்ததாகத் தேர்வாகியுள்ளது. அலாஸ்காவின் சில்காட் பால்ட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் நான்கு வெண்தலைக் கழுகுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய பின்புலத்தை கொண்ட கார்த்திக், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இவர் அலாஸ்காவின் வெண்டலைக் கழுகளுகள் சரணாலயத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த எடுத்த புகைப்படங்கள் தற்போது விருது அங்கீகாரம் பெற்றுள்ளன. இவர் எடுத்தது உட்பட பரிசுக்குரிய பல்வேறு புகைப்படங்கள் நேஷனல் ஜியோகிராபிக் இதழின் மே பதிப்பில் வெளியாக உள்ளன.

வெண்டலைக் கழுகு(Bald eagle) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு கழுகு இனங்களில் முக்கியமானது. இதன் தலை வெள்ளை நிறத்துடனும், வளைந்த அலகு மஞ்சள் நிறத்துடனும், உடல் கரும் பழுப்பு நிறத்திலும் இருக்கும். அமெரிக்காவின் தேசியப் பறவையாகவும் இந்த கழுகு சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.