April 2, 2023

கோலிவுட் என்றழைக்கப்படும் இன்றைய தமிழ் சினிமாக்களில் பன்னெடுங்காலமாக ஏதாவது கதை இருக்கிறதோ இல்லையோ.. காதல் மட்டும் கட்டாயம் இடம் பிடித்து விடும். ஆமாம் படம் பார்போருக்கு அன்பு, பிரியம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம், பைத்தியம், பாசம் என்று பல்வேறு உணர்வுகளை ஊட்டும் இந்த காதல் என்ற மூன்றெழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு வருடத்திற்கும் 100 தமிழ் படங்களாவது வெளி வந்து வந்து விடுகிறது. அந்த லிஸ்டில் சேருவதுதான் 100% காதல். காதல் என்றாலே அன்பை விட அகங்காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமல்லவா? அதை மையப்படுத்திய குஷி படமிது.

சில வருஷங்களுக்கு முன் தெலுங்கில் இதே “100% லவ்” என்ற தலைப்பில் வெளியான படத்தை தான் சந்திரமௌலி தமிழில் டைட்டில் தொடங்கி அச்சு பிசகாய் ரீமேக் செய்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் காலேஜ் ஸ்டூடண்டாக வருகிறார். இவரின் மாமன் மகளாக வரும் ஷாலினி பாண்டேக் கும் ஹீரோவுக்குமிடையே ஏற்படும் அன்பும், நான்தான் என்கிற அகங்காரத்தின் பிடிவாதத்தால் நிகழும் குடும்பப் போக்குதான் கதை. அதாவது சதா புத்தகபுழுவாக படிப்பு படிப்பு என இருக்கும் ஜி.வி. 10ம் வகுப்பு,12ம் வகுப்பு என்று எல்லாவற்றிலும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி தன் பாதையில் போய் கொண்டு இருக்கிறார். அதே சமயம் தான்தான் நம்பர் 1 என்பது இவருக்கு ஒரு மமதையாகி விடுகிறது. கல்லூரியிலும் இவர்தான் முதலிடம். இவருக்கு போட்டியாக யாரும் இல்லை என்று கர்வமாக இருக்கும் போது. கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகள் ஷாலினி பாண்டே தன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி பயின்று இருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு ஆங்கில வழி கல்லூரி படிப்பில் திணருகிறார். இவருக்கு உதவியாக ஜி.வி. இருக்க ஜி.வியை முந்திக்கொண்டு ஷாலினி முதல் இடத்தை பிடிக்கிறார். இதனால் ஷாலினி மீது வெறுப்பாகும் நாயகன். போட்டிப்போட்டுக்கொண்டு மீண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பல வேலைகளை செய்கிறார். இதற்கிடையில் இன்னொரு மாணவன் (அஜய்) ஃபர்ஸ்ட் ரேங்க வந்து விட அதனால் வெறுத்து போன இந்த ஜோடி போட்டிப் போட்டுக்கொண்டு அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள். இதனால் ஷாலினி பாண்டே அந்த மாணவரை காதலிப்பதாக நடிக்கிறார். ஆனால் ஜி.வியை உண்மையாக காதலிக்கிறர். ஒரு வழியாக மீண்டும் ஜி.வி.முதலிடம் வர இருவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை கடந்து இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் இந்த குஷிக் காதல் கதை.

நாயகன் ஜிவி பிரகாஷூக்கு இந்தப் படத்திற்கு பேசிய சம்பளம் வரவில்லை போலும். படம் முழுக்க அரை வேக்காட்டுத்தனமாய் நடித்திருக்கிறார். வசனங்களுக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் கரும்பலகை போல் படம் முழுக்க முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். ஷாலினி பாண்டேயும் டைரக்டர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்திருகிறார்.. இயக்குநரும் கூட போதிய திட்டமிடல் செய்யாமல் வந்து தான் தோன்றி தனமாக ஷூட் செய்து ஒப்பேற்றி இருக்கிறார். இன்னும் அது சரியில்லை, இது சரியில்லை என்று எக்கச்சக்கமான விஷயங்கள் உள்ள இந்த படத்தில் நிறை என்பது 1% கூட இல்லை என்பதுதான் சோகம்..

மொத்தத்தில் இந்த 100% படத்தை டி வி-யில் போடும் போது கூட பார்க்க நேரம் ஒதுக்க வேண்டாம்.

மார்க் 2 / 5