October 16, 2021

தூக்கில் போடும் வேலைக்கு 100 பேர் தயார்!- இலங்கை தகவல்

இலங்கையில், கைதிகளை துாக்கில் போடுவோருக்கான இரண்டு பணியிடங்களுக்கு, 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில், துாக்கு தண்டனை சட்டபூர்வமாக இருந்தாலும், 1976ல், இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை குற்றங்கள் அதிகரித்ததையடுத்து, 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துாக்கு தண்டனை, மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.அடுத்த இரண்டு மாதங்களில் நடை முறைக்கு வருவதாக, இலங்கை அதிபர் சிறிசேனா, சமீபத்தில் அறிவித்தார்.

முதல் கட்டமாக, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளோருக்கு, துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.தற்போது, இலங்கை சிறைகளில், துாக்கு தண்டனை கைதிகள், 48 பேர் உள்ளனர். இவர்களில், 30 பேர், மரண தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்துள்ளனர். மீதமுள்ள, 18 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

இதையடுத்து, சிறையில், கைதிகளை துாக்கில் போடுபவருக்கான இரண்டு காலி பணியிடங்களை நீதித்துறை அறிவித்தது. இந்த இரண்டு பணியிடங்களுக்கு, ஒரு அமெரிக்கர் உட்பட, 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, நேர்காணல் நடக்கும் தேதி குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.