December 1, 2022

அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு!

க்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் ரெயில்களுக்குத் தீ வைக்கப்பட்டன. நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் ஆகி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் இளைஞர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது என ஆளும் தரப்பில் விளக்கமளித்தபோதிலும், போராட்டங்களிலிருந்து இளைஞர்கள் பின்வாங்கவில்லை.

இந்த நிலையில், மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தை சற்று தணிக்கவே மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.