December 1, 2022

பணமில்லா தேசங்கள் எப்படி இயங்குகின்றன?

இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வர்றாங்க. மீடியாக்கள்லயும் சமூக வளைதளங்களிலும் இந்த செல்லா நோட்டுக்கள் புதிய நோட்டுக்கள் வழங்குவதில் குளறுபடி குறித்து அரசுக்கு எதிராக பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருது. நம்ம நாட்ல ஆரம்பத்திலிருந்தே பணம் கையில் வச்சகிட்டு பாங்க் பக்கமே போகாமலும், வங்கிலே கணக்கு இருந்தாலும், அத பேருக்கு வச்சுகிட்டு, எல்லா வசதிகளையும் வங்கியில் இருந்து வாங்கி வச்சுகிட்டு கரன்ட் பில், டெலிபோன் பில் கட்டனும்னாலும் மணிக்கணக்கில் க்யூல நின்னு கட்றததான் நம்மாளுங்க செய்யறாங்க. இப்படி வசதிகள் இருந்தாலும் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து கொள்ளாமல் 76 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இருந்துவிட்டபடியால், செல்லும் பணம் கையில் இல்லாமல் இந்த அரசின் செல்லா அறிவிப்பபையும், பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலையும் மிகப்பெரிதாக கருத வேண்டிய சூழல் ஏற்பட்டுப்போச்சு.

edit nov 19 a

உலகளவில் தற்போது 10 நாடுகளில், பணப் பரிவர்த்த னையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளாக விளங்கிவருகின்றது (cashless countries). இதுபோன்ற நாடுகளில் பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக அனைத்து வரிகளும், கட்டணங்களையும் கட்டுவதோடு தங்களின் அத்தியாவசியத் தேவைகளையும் கையில் பணமின்றியே வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளால் நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் அந்தந்த நாட்டு மக்கள் இதுபோன்ற செயல்பாட்டை எதிர்க்கத்தான் செய்தார்கள். ஆனால் பின்னாளில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இத்தகைய நாடுகளில், 80 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை மக்கள் பணப் பரிவர்த்தனையை கைவிட்டு, அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குகின்றனர். ஆரம்பகாலத்தில் கொள்ளையர்கள் வங்கிகள் பணம் எடுக்கச் சென்ற பொதுமக்களிடமும், பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற வாடிக்கை யாளர்களிடம் பணத்தைக் கொள்ளையடித்ததால், இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டதாக அந்தந்த நாட்டு அரசுகளால் கூறப்பட்டது. பின்பு, மக்களே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்து வதுதான் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதால், பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கின.

இருப்பினும் இந்தநாடுகளில் இன்னும் 20 சதவிகிதத் துக்கும் குறைவானவர்கள் வங்கிகளை நாடாமல் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களையும் கூடிய விரைவில் கேஷ்லெஸ் முறைக்கு (Cashless Method) மாற்றிவிடுவோம்’ என்கின்றன அந்த நாடுகள். எந்தெந்த நாடுகள் இப்படி இந்த திட்டத்தை கொண்டு வந்து அதனை வெற்றிகரமாக்கியுள்ளது என்ற பட்டியலைப்பார்ப்போம்..

பெல்ஜியம்

இங்கு முற்றிலும் பணப் பரிவர்த்தனை ஒழிக்கப்பட்டு, கேஷ்லெஸ் முறையை கொண்டுவந்திருக்காங்க. இந்த கேஷ்லெஸ் திட்டத்தை அதிகஅளவில் உலகளவில் செயல்படுத்திவரும் முதல்நாடாக பெல்ஜியம் இருக்கு. இங்கு 93 சதவிகித வர்த்தகப் பரிமாற்றங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தியே நடக்கின்றனவாம். பெல்ஜியத்தில் 86 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகின்றது. இந்த நாட்டில் 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஒருவர் செலவழிக்க விரும்பினால், அதை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகத்தான் செய்யமுயைும். இந்த விதியை மீறிட்டா அவங்க 2,25,000 யூரோக்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்தனுமாம். எம்ம்ம்மாடீடீடீ……

ஃபிரான்ஸ்

பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றும் நாடு ஃபிரான்ஸ்ன்னு சொல்லப்படுது. பெல்ஜியத்தைப் போன்றே ஃபிரான்ஸிலும் 3,000 யூரோவுக்கு மேல் ஒருவர் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், அரசு மூலம் அந்த நபருக்கு கடும் தண்டனைகள் கிடைக்குமாம். அத்துடன், அதிக அபராதமும் செலுத்த நேரிடுமாம். இங்க இருக்கிற மக்களில் 93 சதவிகித மக்கள் பணப் பரிவர்த்தனையைச் செய்வது கிடையாதாம். இவர்கள் இணைய வழியாகவே தங்களின் பரிவர்த்தனையைச் செஞ்சுக்கறாங்களாம். இந்த நாட்ல இருக்கிற 70 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் வங்கிப்பரிவர்த்தனைகள் மூலமே அனைத்தையும் செஞ்சுக்கறாங்களாம்.. கேஷ் லெஸ் சக்ஸஸ் ஆன நாடுகள்ல இந்த நாடும் ஒன்றாக இருக்கு.

கனடா

கேஷ்லெஸ் முறையைப் பயன்படுத்துவதில், தற்போது கனடா மூனாவது இடத்திலே இருக்கு. இங்க இருக்கிற மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதம், ஆன்லைன் வர்த்தகமாக இருக்கு. கனடாவில், 88 சதவிகிதம் மக்கள் டெபிபட், கிரடிட், நெட்பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தகத்தில் பல நடவடிக்கைகளைக் கொண்டுவந்த கனடா அரசு, கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நாணயங்கள் அச்சடிப்பதை நிறுத்தினதோடு, இருக்கிற நாணயத்தையும் புழக்கத்தில்விடுவதை முற்றிலுமா நிறுத்திடுச்சாம்.

இங்கிலாந்து

சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டுத் தனியாகப் பிரிந்துவந்தது இங்கிலாந்து. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிகிட்டு இருக்கு. இப்போது அதன் தரத்தை நிலைநாட்டிக் கொள்றதுக்காக ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியிருக்கு. இந்த நாட்டில் 90 சதவிகித மக்கள் கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்கிலாந்து மக்களில் சுமார் 89 சதவிகிதம் பேர் டெபிட் மற்றம் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனராம். இங்கு போக்குவரத்துக்காகப் பெறப்படும் கட்டணங்கள் எல்லாத்தையும் பணமாகப் பெறுவதை இங்கிலாந்து அரசு நிறுத்திடுச்சாம்.

சுவீடன்

முதன்முதலாக இந்த கேஷ்லெஸ் முறையைக் கையிலெடுத்தது சுவீடன்தான். ஏன் அப்படீன்னா, இங்க இருக்கற வங்கிகளில் இருந்த பணம், கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததாம். இதன் காரணமாக இந்த நாடு கேஷ்லெஸ் முறையைக் கொண்டு வந்துடுச்சாம். இங்க இருக்கற வங்கிகள், அரசு அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் போன்ற அனைத்துமே ஆன்லைன் வர்த்தகம் அல்லது கார்டு முறைகளைத்தான் பின்பற்றி வருகின்றனவாம். பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல மக்கள் பயன்படுத்தினா கொடுக்கிற டிக்கெட்டுக்கு ஒன்லி கார்டு ஸ்வைப்பிங் முறைதானாம். நோ கேஷ். இங்கு பெரும்பான்மையான மக்கள் கேஸ்லெஸ் முறையைப் பின்பற்றி வர்றாங்க. இங்க இருக்கிற நாலு வங்கிகள்ல ஒரு வங்கி மட்டும், பணப் பரிவர்த்தனையைச் செஞ்சுட்டு வருதாம். அதுவும் கூடிய விரைவில் நிறுத்திடும்ன்னு சுவீடன் அரசு அறிவித்துள்ளது. கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றிவரும் நாடுகளில் சுவீடன்
ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஏன் இது நம்மால் முடியாதா என்ன? வெளிநாடுகள்ல இருக்கிற கலாச்சாரத்துக்கு நாம உடனே தாவறோம், நம்ம நாட்டுக்கு பொருந்தாத வெளிநாட்டு உடைகள் உடுத்தத் தயாராகிவிடுகிறோம். அங்க இருக்கிற அலங்காரப்பொருட்கள், உணவுகள், கேட்ஜட்டுகள் இப்படி எல்லாத்தையும் நாம இங்கே உடனுக்குடன் கொண்டுவர முயற்சிக்கறோம். அவங்களோட எல்லா செயல்களுக்கும் நாமளும் ஒரு வகையில் அடாப்ட் பண்ணிக்க முயற்சிக்கிறோம். ஆனா எதிலெல்லாம் அவங்க முக்கியத்துவம் கொடுக்கறாங்களோ அத ஃபாலோ பண்றதுக்கு மட்டும் நாம தயக்கம் காட்றோம். அதுல குறிப்பா சொல்லனும்னா செல்ஃப் டிசிப்ளைன், டிராஃபிக் ரெகுலேஷன்ஸ் இதெல்லாம் நாம பெரும்பாலும் கண்டுக்கறதே இல்ல.. அதுல நாம மாறனும் இல்லையா? அதபோலத்தான் இந்த கேஷ்லெஸ் பரிமாற்றங்களும். இன்னைக்கு நகர்ப்புறங் கள்ல வேலைக்கு போறவங்கள் முதற்கொண்டு சுய தொழில் செய்யறவங்க பெரும்பாலும் சேவிங்க்ஸ் அக்கவுன்ட் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் வச்சிருக்கவங்களா இருக்காங்க.

இந்த கார்டுகள் மூலம் இவங்க அத்தனை வர்த்தகங் களையும் செய்ய ஆரம்பிக்கட்டுமே. ஆன்லைனில் ப்ளைட், ட்ரெய்ன், பஸ், சினிமா, காட்டேஜ் ரிசர்வ் பண்ண தெரிஞ்ச பலருக்கு ஆன்லைன் மூலம் டெபிட் கார்டுகள் மூலம் வீட்டிற்கு தேவையான அத்தனை பொருட்க ளையும் வாங்கிக்கலாமே. சில்லறை தட்டுப்பாடு குறையும். வர்த்தகர்கள் அனைவருமே ஸ்வைப்பிங் மெஷின்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கார்டுகளிலி ருந்து பணத்தை பெற்றுக்கொள்ளவும், கொள்முதல் செய்யும்போது கார்டுகள் மூலம்கொள்முதல் பண்ணலாமே.. தமிழ்நாட்டில் அண்ணாச்சிகள் கேஷ்லெஸ் முறைக்கு முதல்ல மாறனும்..

நம்நாட்டிலும் 32 சதவீதம் பேர் இந்த திட்டத்திற்கு மாறியுள்ளனர் என்பது பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால் இன்னமும் ம‍ெத்தப்படித்தவர்கள், தொழிலதி பர்கள், நிரந்தர வருமான உள்ளவர்கள், சுயதொழில் செய்பவர்கள், கான்ட்ராக்டர்கள், ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்கள், வாடகைக்கு வீடுகள் விடும் வீட்டு உரிமையாளர்கள் என அத்தனை பேரும் முதலில் இந்த கேஷ்லெஸ் திட்டத்திற்கு மாறவேண்டும்.

பல இடங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்லி கேஷ் என்றிருக்கும் நிலை மாறி இனி வருங்காலத்தில் நோ கேஷ்பேமென்ட், டெபிட்/கிரடிட் கார்டு பேமென்ட் ஒன்லி என்ற நிலை ஏற்படவேண்டும்.. கருப்புப்பணம் ஒழியனும், பதுக்கல் ஓழியனும், கள்ளநோட்டுக்கள் ஒழியனும்னு நாம அரசுக்கு எதிரா கோஷம் போடறதால எந்த பிரயோஜனமும் இல்ல. நாம நம்மள முதல்ல மாத்திக்க முயற்சி செய்யனும். பதுக்கல், கள்ளநோட்டு, கருப்புப்பணம் ஒழியவேண்டும் என்றால் அதற்கான ஆரம்பப் புள்ளியானது நம்மிடமிருந்து துவங்கட்டுமே…

உதயகுமார்