October 19, 2021

ஷூட்டிங்கின் போது ஹெலிகாப்டரிலிருந்து குதித்த 2 நடிகர்கள் பலி:

கன்னட நடிகர் துனியா விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் மஸ்தி குடி. இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. துனியா விஜய் ஹெலிகாப்டரில் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியன்றை பெங்களூரு அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் படமாக்க  திட்டமிட்டனர். இதற்காக மாலை 2 மணிக்கு ஏரி அருகில் படக்குழுவினர் திரண்டார்கள் ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டது. துனியா விஜய் மற்றும் வில்லன் நடிகர்கள் உதய், அனில் ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் ஏறினார்கள். ஹெலிகாப்டர் ஏரியின் நடுவே உயரத்தில் பறக்க கேமராவில் சண்டை காட்சி படமானது.
cine nov 7 a
3 பேரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் பின்னர் அவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் குதிப்பது போன்றும் அந்த காட்சி படமாக்கப்பட்டது. 100 அடி உயரத்தில் இருந்து அவர்கள் குதித்தார்கள். அவர்களில் விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். உதய், அனில் இருவரும் நீண்ட நேரமாகியும் கரைக்கு வரவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. நீருக்குள் மூழ்கி மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் படபிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஏரியில் பாதுகாப்பு அபாயங்களை அளவிடவும் முன்னதாக எந்தஒரு ஒத்திகை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாயமான இரு நடிகர்களுக்கும் போதுமான அளவு நீச்சல் தெரியாது என்றும் கூறப்படுகிறது. ஏரியில் சூட்டிங் நடந்த போது அங்கு ஆம்புலன்ஸ் கூட நிறுத்திவைக்கப்படவில்லை என்று தெரியவந்து உள்ளது.