ஹெல்மெட் அணிவது கட்டாயம்: போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு!

ஹெல்மெட் அணிவது கட்டாயம்: போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு!

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில போலீசாருக்கு டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் முதல் முறையாக சிக்குவோரிடம் மென்மையாக அறிவுறுத்தவும் அடுத்தடுத்த முறையில் அபராத தொகையை அதிகரிக்கவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
wear helmet
தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் விபத்துகளில் பலியாவோர் பற்றி ஆராய்ந்தால் தலையில் அடிபட்டு இறப்போரே அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க ஹெல்மெட் அணிந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியபோதும், வாகன ஓட்டிகள் அதனை தலைச்சுமையாக கருதி கண்டு கொள்வது இல்லை.இதனை கட்டாயப்படுத்தி உயிர்ப் பலியை தடுக்க வேண்டும் என கடந்த 2007–ம் ஆண்டே ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என 2007 பிப்ரவரி மாதத்திலேயே உத்தரவிட்டது.

இந்த உத்தரவு சிலகாலம் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் செல்வோரை முதலில் கண்டித்தும், பின்னர் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் நாளடைவில் அதனை குறையாக பின்பற்றாமல் விட்டுவிட்டனர்.இதனால் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க இருசக்கர வாகன ஓட்டுனர்கள், ஹெல்மெட் இல்லாமல் பறந்தனர். விதிமுறை மீறல், அதிவேகம் போன்றவை விபத்தை ஏற்படுத்த பலரும் தலைக்காயம் அடைந்து பலியானார்கள். இதனை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் என்பதால் அதனை அணிவதை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜனவரி 22–ம் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வாகன தணிக்கைகளை அதிகரித்து ஹெல்மெட் அணியாதவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி அபராதம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!