ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த அவசரம் தேவையில்லை!

ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த அவசரம் தேவையில்லை!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓரிரு நாளில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம். இருப்பினும், தேர்தல் ஆணையம் தனது முடிவை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.ஒரு தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இறந்தாலோ, பதவி விலக நேரிட்டாலோ அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையம் கடந்த 60 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் நெறிமுறை.
srirangam_mla_off
ஆனால், ஒரு தொகுதியின் உறுப்பினருக்கு குற்றவழக்கில் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் ஆறு மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்திருப்பின், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்கின்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த நடைமுறை.

சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றால், அந்த நாள் முதலாகவே அவர் பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிடுகிறார்.அவர் தண்டனை அனுபவித்து முடித்த நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற விதிமுறை அண்மையில் உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தால் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

தற்போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏற்பட்டுள்ள காலியிடம் என்பது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மனதொப்பி பதவி விலகியதால் ஏற்பட்டது அல்ல.அவர் மீதான வழக்கில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதால் அவர் அன்றே பதவியை இழக்க நேரிட்டது. தற்போது இந்த வழக்கின் மேல் முறையீடு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடக் கூறியிருப்பதால், கர்நாடக உயர்நீதிமன்றம் நாள்தோறும் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவிருக்கிறது.வழக்கின் இறுதி முடிவு மூன்று மாதங்களில் தெரிந்துவிடும். அதுவரை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைப்பதுதான் சரியான அணுமுறையாக இருக்கும்.

அரசு ஊழியர்கள் சில குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பதவி இழந்தாலும், மேல் முறையீட்டில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தால், விடுதலை பெற்றால், மீண்டும் பதவி வகிக்க முடியும்.ஆனால், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான வழக்கில் பதவிக்கு தகுதியுடையவர் என்ற நிலை மேல் முறையீட்டில் வருமானால், பதவி இழந்த அந்த எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கான தகுதியைப் பெறும்போது, அவர் போட்டியிட்ட அதே சட்டப்பேரவை அல்லது மக்களவை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவரது நிலை என்ன?

ஒரு சட்டப்பேரவைத் தொகுதி அல்லது மக்களவைத் தொகுதியில் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றுதான் ஒருவர் வெற்றி பெற முடிகிறது. இதற்கு ஏற்படும் செலவு கட்சிக்கும், அரசுக்கும் அதிகம். மக்களும் மீண்டும் வாக்களிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து, வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதுவரை தேர்தல் ஆணையம் சந்தித்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் அனைத்தும் இறப்பு அல்லது பதவி விலகல் காரணமாக நடத்தப்பட்டவையே.இரண்டு ஆண்டுக்கு மேலாகத் தண்டனை பெற்றவர், அதே நாளில் தகுதி இழக்கிறார் என்ற புதிய நடைமுறையில் பதவியை இழந்தவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ் தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. ஏனென்றால், அடுத்த இரண்டு மாதங்களிலேயே மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2016-ஆம் ஆண்டில்தான் நடைபெறவுள்ளது. ஒருவேளை, கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டால் அல்லது அவருக்கு இரண்டு ஆண்டுக்கும் குறைவான தண்டனை அமையுமானால், ஜெயலலிதா பதவி வகிக்கும் தகுதியடையவராகிறார். அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்யும்?
jaya
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்று பதவியை உடனே இழந்து, மீண்டும் மேல் முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டு தகுதி பெறும்போது, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி இன்னொருவர் தேர்வு செய்யப்பட்டிருந்தால் சட்டச் சிக்கலை ஏற்படுத்தாதா?

மேல் முறையீட்டில் விடுதலை பெற்றால், குறைந்தபட்சம், அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் உரிமையையாவது அவருக்கு அளிப்பதுதானே சரியாக இருக்கும்?தேர்தல் ஆணையம் இதுவரை சந்தித்திராத விநோதம் இது. ஓர் உறுப்பினர் இறந்தார், பதவி விலகினார் என்றால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தலாம்.

ஒரு வழக்கில் தகுதியிழப்பால் காலி இடம் ஏற்பட்டால், அந்த வழக்கு மேல் முறையீடுக்கு ஏற்கப்பட்டால், எத்தனைக் காலத்துக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறுவதே சிறந்த நெறிமுறையாக இருக்கும்.ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொருத்தவரை இன்னும் மூன்று மாத காலம் பொறுத்திருக்கலாம். அவசரம் தேவையில்லை.

இரா சோமசுந்தரம்

error: Content is protected !!