ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க உத்தரவு: மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க உத்தரவு: மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

முன்னதாக வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளி யேறும் மாசு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்பு களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் 100வது நாளான 2018, மே 22ம் தேதி மக்கள் பேரணியாக சென்ற போது கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றம் அதிகரித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதானா என்பதை உறுதி செய்ய மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழு தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த பின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே ஆலையை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை குறித்து உண்மை கண்டறியும் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது.மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூறி வெளியான தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து நிதி வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் பழனிசாமி முடிவெடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று வழங்கிய தீர்ப்பின் முழு விபரம் அறிய  இங்கே க்ளிக் செய்யவும்

error: Content is protected !!