ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் ஆஹா.. ஓஹோ..! – கருணாநிதி பெருமிதம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில்
கேள்வி:-அ.தி.மு.க.வை விட அதிகமாக எதிர்க்கட்சித்தலைவர்களில் சிலர், மு.க. ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்தைப் பற்றி மிக அதிகமாக திட்டுகிறார்களே?
mk stalin oct 8
பதில்:-அவர்கள் தாக்கிப் பேசுவதில் இருந்தே, அந்தப்பயணத்தின் வெற்றி எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? காழ்ப்புணர்வு, வயிற்றெரிச்சல் காரணமாக அவர்கள் அப்படித் திட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துத்தான் அண்ணா அப்போதே “வாழ்க வசவாளர்கள்” என்று கூறினார். அவர்கள் வசை பாடுவதிலிருந்தே ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணத்திற்கான வரவேற்பு பொதுமக்களிடையே பெருகி வருகிறது என்பது புரிகிறதல்லவா?

கேள்வி:டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் எதிர்பாராத மறைவில் ஏன் இத்தனை குழப்பங்கள்?

பதில்:-முதலில் விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தில் ஒரு சில பக்கங்களைக் காணவில்லை என்றார்கள்; பிறகு அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்தே அவருடையது அல்ல என்றார்கள்; கடிதமே அவரால் எழுதப்பட்டது அல்ல என்றார்கள்; அவருடைய முக்கியமான காமரா காணப்படவில்லை என்றார்கள்; அவர் தூக்கு மாட்டிக் கொண்டதாகக் கூறப்பட்ட இடம் பற்றியும், அவருடைய கால்கள் கீழே தரையிலே இருந்தன என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

விஷ்ணுபிரியா விசாரித்து வந்த கொலை வழக்கில் முக்கியமாக தமிழக காவல் துறையினரால் தேடப்படும் யுவராஜ் என்பவர் அன்றாடம் ஊடகங்களில் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் தமிழகக்காவல் துறையினரால் அவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. ஆறு மாத காலமாக அவரை தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!

கேள்வி:தஞ்சையில் 12 மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்ததாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-உண்மைதான்; கருகும் சம்பா பயிரைக்காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்புப்படி கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற்றுத் தர மாநில அரசை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் தஞ்சையில் 3-10-2015 அன்று உண்ணாவிரதம் நடைபெற்றிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பம்ப் செட் மூலம் குறைந்த அளவில் குறுவை சாகுபடி செய்தனர். அதிலே அறுவடையான நெல்லை விற்க, அரசு கொள் முதல் நிலையங்களுக்குச் சென்றால், அங்கே உள்ள அதிகாரிகள் அந்த நெல்லைக் கொள்முதல் செய்ய மறுக்கிறார்களாம். போதிய அளவுக்கு கொள்முதல் செய்ய பணம் கையிருப்பிலே இல்லை என்று சாக்குபோக்கு சொல்கிறார்களாம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!