வோட்டர் லிஸ்டில் பெயர் சேர்க்காதவங்க ஏப்ரல் 15–ந் தேதிக்குள் சேர்க்க வாய்ப்பு!

வோட்டர் லிஸ்டில் பெயர் சேர்க்காதவங்க ஏப்ரல் 15–ந் தேதிக்குள் சேர்க்க வாய்ப்பு!

சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம்–தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிபுரியும் பகுதி நேர நிருபர்களுக்கு, தேர்தல் விதிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள வானொலி நிலைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவு இயக்குனர் (சென்னை) வி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். செய்திப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் ஆர்.என்.மிஸ்ரா, தென்மண்டல ஆலோசகர் ஆர்.வெங்கடேஷ்வரலு, பத்திரிகை தகவல் மையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
tn ele mar 10
வானொலி நிலையத்தின் பொறியாளர் பிரிவு துணை இயக்குனர் பி.பி.பேபி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்துகொண்டு பேசும்போது, ‘ஊடகங்கள் இடையே தற்போது போட்டி அதிகமாக உள்ளது. செய்தியை யார் முதலில் வெளியிடுவது என்ற அவசரத்தில் தவறான தகவலை வெளியிட வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையம் கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொல்லை இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. பள்ளியில் குழந்தைகள் 99 மதிப்பெண்கள் வாங்கினாலும், 100 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோன்று தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும்’ என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில், ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் இலக்கு. வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் செய்யலாம். ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம் tnelectionplaystore என்ற ‘ஆப்’பை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

புதிய முயற்சியாக எளிய முறையில் வாக்காளர் அட்டை பெற வாக்காளர் சேவை மையம் என்ற மையத்தை வரும் 14–ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து தொடங்க இருக்கிறோம்.இந்த மையம் அனைத்து மாவட்டங் களிலும் உள்ள தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), கலெக்டர் அலுவலகம் ஆகிய 363 இடங்களில் தனி அறையில் செயல்படும்.

ஒவ்வொரு மையத்திலும் இரண்டு அலுவலர்கள் இருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பழைய அட்டை யை மாற்றுதல் போன்ற தேவைகளுக்கு இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும் என்றால் அந்த நபரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ வரவேண்டும். புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும். அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆன்லைனில் அட்டைக்காக விண்ணப்பித்து அதை வாக்காளர்கள் பெறுவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் ரூ.25–ம், அதோடு சேர்த்து ரூ.40–ம் செலுத்த வேண்டும். ரூ.65 செலுத்தியவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அந்த அட்டை அவர் களின் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் :

கேள்வி:– தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை வாகன சோதனையில் எவ்வளவு பணம் சிக்கி உள்ளது?

பதில்:– ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. எந்த பணமாக இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

கேள்வி:– தேர்தல் விதிமுறைகள் குறித்து எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

பதில்:– 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13 ஆயிரம் உள்பட தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரின் 70 ஆயிரம் சுவரொட்டி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அழிக்கும் பணி நடந்து வருகிறது.

கேள்வி:– தமிழகத்தில் எத்தனை வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது?

பதில்:– 28 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் ‘வெப் கேமரா’ பொறுத்தப்பட உள்ளது. 10 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

கேள்வி:– தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:– இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் வந்த பின்னர் முடிவு செய்யப்படும்.

கேள்வி:– அரசியல் கட்சியினர் செய்யும் தேர்தல் செலவு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?

பதில்:– அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டம், விழாக்கள் ‘வீடியோ’ மூலம் பதிவு செய்யப்படுகின்றன. பத்திரிகை, ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

இறுதியில் அரசியல் கட்சியினர் அளிக்கும் தேர்தல் செலவுடன், அவைகள் ஒப்பீட்டு கணக்கு சரி பார்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தலைமை செயலகத்தில் ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “வேலூர் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரப்பட்டுள்ளது. அதில் இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யும்படி மனு கொடுத்துள்ளார்கள். அதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளேன். தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.தாம்பரம் பகுதியில் 263 போலி வாக்காளர்களை தி.மு.க.வினர் சேர்த்ததாகவும், அந்த பெயர்களை நீக்க வேண்டும் என்றும் கோரி அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மனு கொடுத்துள்ளார். அதுபற்றி விசாரிப்போம்.

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின்போது பணம் சிக்குவதைப் போல வேறு சில கடத்தல் பொருட்களும் சிக்குகின்றன. அந்த வகையில் 110 கிலோ கஞ்சா, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளது.பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் பணத்தை உரிய நபர்கள் திரும்பப்பெறுவதற்கு வசதியாக அப்பீல் முறையை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளோம். தற்போது, அதை மேலும் ஒருபடி மேம்படுத்தியுள்ளோம்.அதன்படி, இந்த பணத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக தனிக்குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கருவூல அலுவலர், தேர்தல் செலவுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் இருப்பார்கள்.இவர்கள் அந்த பணத்தின் ஆதாரம் பற்றிய விசாரணையில் இறங்குவார்கள். அது தேர்தல் தொடர்புடைய பணம் அல்ல என்பது உண்மை என்றால் அதை உடனே திருப்பித்தந்துவிடுவார்கள்.

1950 இலவச தொலைபேசி எண் மூலம் தினமும் சுமார் 3 ஆயிரம் புகார்கள் பெறப்படுகின்றன. இவற்றில், பேனர் வைக்கப்பட்டுள்ளதாக 31 சதவீதமும், வாக்காளர் அடையாள அட்டை, பெயர் சேர்ப்பு போன்றவற்றில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக 31 சதவீதமும், சுவர் விளம்பரம் தொடர்பாக 8 சதவீதமும், கட்சி கொடிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 சதவீத புகார்களும் அடங்கும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் மூலம் தினமும் 30 புகார்கள் பெறப்படுகின்றன.

இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 4 மாதிரி வாக்குச்சாவடிகளை அமைக்க இருக்கிறோம். அந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்துவிடுவோம். எனவே அவர்கள் வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.அழைப்பு வரும் வரை அங்கிருக்கும் நிழல் பகுதியில் போடப்பட்டிருக்கும் சேரில் அமர்ந்திருக்கலாம். கடந்த தேர்தல்களில் 7.5 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு என்பதுதான் இந்திய தேர்தல் கமிஷனின் நோக்கம்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!