வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை!

வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை!

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் அது போன்றதொரு வாக்குறுதியை அளித்திருக்கிறது. கடந்த தேர்தலின்போதும், அதற்கு முந்தைய தேர்தல்களின் போதும் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றே காங்கிரஸூம், பாரதிய ஜனதாவும் வாக்குறுதி அளித்திருந்தன.அரசுகள் மாறின, வாக்குறுதியின் வார்த்தைகள் மாறினவே தவிர, சாராம்சம் மாறவேயில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரதான அரசியல் கட்சிகள், அரசுகள், செய்தித் தொடர்பாளர்கள் 10 கோடி வேலை வாய்ப்பு என்ற அதே மந்திரத்தையே சலிக்காமல் ஜெபித்து வருகின்றனர்.
india political leaders faces
“முன்னேற்றம், நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் 2004இல் வெளியிடப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (பாஜக) தேர்தல் அறிக்கையைப் பார்ப்போம்: “ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி கூடுதல் வேலைவாய்ப்பு, சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று 1999இல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியிருந்தோம் அந்த உறுதி தொடர்கிறது’.அதேபோன்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2011இல் வெளியிட்ட தேசிய உற்பத்தி கொள்கை அறிவிப்பில், மற்ற விஷயங்களுடன், அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அறிவித்தது.

நாடு முழுவதும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் சலிக்காமல் கூறப்படுகிறது. ஓர் உதாரணத்துக்கு, 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில், திட்ட காலகட்டத்தில் 5.8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது. 10ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கு என்ன தெரியுமா? “திட்ட காலகட்டத்தில் மொத்தம் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது’.வளர்ச்சிக்கான வேகத்தை அதிகப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும் பட்சத்தில், 2007ஆம் ஆண்டுக்குள் வேலை வாய்ப்பு இலக்கை அடைவது என்பது சாத்தியமற்றதல்ல என்று 9ஆவது ஐந்தாண்டுத் திட்டம் பறைசாற்றியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 5.6 சதவீதமாக இருக்கும் நிலையில், வேலை வாய்ப்பும் ஆண்டுக்கு 2.6 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 95 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் 8ஆவது ஐந்தாண்டுத் திட்டம் நம்பிக்கை தெரிவித்தது. இதன் மூலம் வேலை வாய்ப்பின்மை என்பது 2002இல் முழுமையாக அகற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

முழு வேலை வாய்ப்பை உருவாக்கவே எல்லா திட்டங்களும் வகுக்கப்பட்டன. ஆனால், நடைமுறை அனுபவம் கூறுவது என்னவென்றால், கடந்த 63 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களால் வேலை வாய்ப்பின்மையை அறவே நீக்க முடியவில்லை என்பதுதான். அதனால்தான், அதே வாக்குறுதி ஒவ்வொரு தேர்தலின்போதும் மீண்டும் மீண்டும் முளைக்கிறது.

பல விஷயங்களை பொதுமக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பதில்லை. மற்றவர்களைவிட அரசியல்வாதிகள் இதை நன்கு அறிந்து வைத்திருப்பதால் அதே வாக்குறுதிகளையே மீண்டும் மீண்டும் அளிக்கிறார்கள்.தங்களுடைய திட்டங்கள் மூலம் 10 கோடி வேலை வாய்ப்பு சாத்தியப்படாது என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்ததுதான். இருப்பினும், இந்த வாக்குறுதி சாத்தியமானதுதான் என்றும், வேலை வாய்ப்பை உருவாக்க பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்றும் பொது மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கின்றனர். பொருளாதார வளர்ச்சி சீரான முறையில் உள்ளதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் அண்மையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் எனவும், 2ஆவது ஐந்தாண்டு கால ஆட்சியில் 6.6 சதவீதம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 6.2 சதவீதமாகவே இருந்துள்ளது. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகவே உள்ளது.இந்தப் பொருளாதார வளர்ச்சி உண்மையிலேயே பயன் அளித்திருந்தால், வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் ஒழிந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும், அறிக்கைகளும் இதையே நிரூபிக்கின்றன.

12ஆவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், “வேலை வாய்ப்பு நீட்சித்தன்மை 1999-2000 முதல் 2004-2005 வரையிலான காலகட்டத்தில் 0.44 சதவீதம் ஆக இருந்தது. அது 2004-2005 முதல் 2009-2010 வரையிலான காலகட்டத்தில் 0.01 சதவீதம் ஆக குறைந்துவிட்டது’.வளர்ச்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு பெருகுவதோ, குறைவதோதான் நீட்சித்தன்மையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு சதவீதம் அதிகரித்த நிலையில், 0.44 சதவீதத்திலிருந்து குறைந்து வெறும் 0.01 சதவீதம்தான் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

“இதேபோன்றதொரு நிலைதான் விவசாயம், சேவை, உற்பத்திப் பிரிவுகளிலும் உள்ளது. 2004-05 முதல் 2009-10 வரையிலான காலகட்டத்தில் விவசாயம், உற்பத்திப் பிரிவில் வேலை வாய்ப்பு நீட்சித்தன்மை எதிர்மறையாகவே உள்ளது.மற்ற துறைகளில் ஊதியம் அதிகமாகக் கிடைப்பதால் விவசாயத்தைக் கைவிடுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, தொழிலாளர்கள் ஊதியம் அதிகம் கிடைக்கும் இதுபோன்ற துறைகளுக்கு மாறுவது தேவையானதுதான். ஆனால், 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தித் துறையில் 6.8 சதவீதம் வளர்ச்சி இருந்தும் வேலை வாய்ப்பு நீட்சித்தன்மை அதற்கேற்ப இல்லாததுடன் எதிர்மறையாக இருப்பது கவலைதரக் கூடியதாகும்’ என்று 12ஆவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை கூறுகிறது.

வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்த அளவாக (3% – கிராமப்புறங்களில் 2%, நகர்ப்புறங்களில் 4%) உள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் ஆய்வறிக்கை (என்.எஸ்.எஸ். தேசிய மாதிரி ஆய்வு 2011-12) தெரிவிக்கிறது. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தோமானால் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 2010 ஜனவரி 1ஆம் தேதி 98 லட்சத்தில் இருந்து 2012 ஜனவரி 1ஆம் தேதி 1 கோடியே 8 லட்சமாக உயர்ந்துள்ளது.இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டாலும், அவ்வேலை வாய்ப்பு கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியத்தை அளிக்கக் கூடியதாக பெரும்பான்மையானவர்களுக்கு அமையவில்லை.

2009-10இல் மொத்த வேலை வாய்ப்பான 46 கோடியில் அமைப்பு சார்ந்த துறைகளில் 3 கோடி பேர் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என 12ஆவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இது 1999-2000 ஆண்டின் அளவை ஒப்பிடும்போது 29.6 லட்சம் குறைவாகும்.சதவீத அளவில் பார்த்தோமானால், கடந்த 10 ஆண்டுகளில் தரமான வேலை வாய்ப்பைப் பெறுவோர் எண்ணிக்கை 8.49 சதவீதத்தில் இருந்து 6.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2013இல் அமைப்புசார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பைப் பெறுவோர் எண்ணிக்கை மேலும் 2.89 கோடி குறைந்துள்ளது என்று தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

சிறந்த வேலை வாய்ப்பாகக் கருதப்படும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை 1999இல் 1.9 கோடியில் இருந்து 2011இல் 1.75 கோடியாகக் குறைந்துள்ளது.வேளாண் துறை மூலம் 2009-10இல் 53.2 சதவீதம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால், 1993-94இல் வேளாண் துறை மூலம் 64.75 சதவீதம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் துறையில் 11 சதவீதத்தினரும், சேவைத் துறைகளில் 25.3 சதவீதத்தினரும், கட்டுமான துறையில் 10.5 சதவீதத்தினரும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். வேளாண் துறையிலும், அமைப்புசாரா தொழில் துறையிலும் ஊதியம் என்பது மிகமிகக் குறைவு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வேலை வாய்ப்பின்மை என்பது குறையவில்லை. கிடைக்கும் வேலை வாய்ப்பும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற ஊதியத்தை வழங்குவதாக இல்லை. இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும் வேலை வாய்ப்பின்மையை அகற்றுவதாக இல்லை.10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அளிக்கப்படும் வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை. தரமான கல்வியையும், சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களையுமே மக்கள் எதிர் பார்க்கின்றனர்.தகுந்த உடல் உறுதி உள்ள அனைவருக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வளர்ச்சி மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும். அந்த வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

பி.எஸ்.எம். ராவ்

error: Content is protected !!