October 2, 2022

வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

ம் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் ஒரு கனவு நகரம் மும்பை. நாமும் மும்பை சென்றால் அம்பானியாகி விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் மும்பையில் வாழும் 20 இலட்சம் தமிழர்களில் பெருவாரியானவர்கள் தென் தமிழக பகுதியில் இருந்து போய் வாழ்பவர்களே!அந்த லிஸ்டில் அடிசினலாக இணைந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை போராட்டமே வெந்து தணிந்தது காடு.

அதாவது வாழ போராடிக் கொண்டிருந்த திருச்செந்தூர் அருகில் இருக்கும் நடுவக்குறிச்சிவாசி சிம்பு மும்பைக்கு பிழைப்பு தேடி சென்று அங்கு ஒரு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். அந்த புரோட்டா கடையின் முதலாளி ஒரு தாதா. கடையில் வேலை செய்யும் தமிழர்களை கூலிப்படையாக உபயோகப்படுத்தி வருகிறார். முதலாளி சொன்ன இடத்துக்கு போய் ஏன் என்று கேட்காமல் பலரை போட்டு தள்ளுவதும் என இருக்கும் தொழிலாளிகளுக்கு மத்தியில் சிம்புவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூலிபடையில் ஒருவராக மாறுகிறார். அப்படி சாதாரண அடியாளாக தொடங்கிய சிம்பு கேங்ஸ்டர் ஆகிறார் என்பதே மேற்படி படத்தின் முதல் பார்ட் ஸ்டோரி.

ஹீரோ சிம்பு வழக்கமான ஆர்ப்பாட்டம், தெனாவெட்டு இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி தன் உடல் பொருள் ஆவி என சகலத்தையும் கொடுத்து முத்துவீரன் கேரக்டருக்கு தனி அந்தஸ்து கொடுத்து இருக்கிறார் நாயகன் சிம்பு. முன்பு எப்பொழுதும் பார்த்திராத ஒரு புது சிம்புவை இப்படத்தில் காணலாம். முந்தைய படங்களின் சாயல்கள் பெரும்பாலும் எங்குமே தெரியாத அளவுக்கு உடல்வாகுக்கு ஏற்றுவாறு உடலை உருக்குலைத்து மெனக்கெட்டுள்ளார். வழக்கமான மாஸ், ஆக்‌ஷன், பஞ்ச், டூயட் இல்லாத முற்றிலும் வித்தியாசமான, புதுமையான சிம்புவாக ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

ஹீரோவின் அம்மாவாக வரும் ராதிகா ஏழை கிராமத்து தாய்மார்களை அப்படியே கண்முன் நிறுத்தி பார்ப்பவர்களை கலங்க செய்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் இவரின் கதாபாத்திரம் மனதில் பதியும்படி அமைந்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி சில காட்சிகளே வந்தாலும் தான் ஒரு புதுமுகம் என்ற உணர்வை கொடுக்காமல் ஆழமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி சென்றுள்ளார் (ஆனால் டப்பிங் வாய்ஸ் ஒட்டவில்லை). காதல் காட்சிகளில் இவருக்கும் சிம்புவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. சிம்புவின் நண்பராக வரும் அப்புகுட்டி தனக்கு கொடுத்த வேலையை அழகாக செய்துள்ளார். மற்றபடி படத்தின் வில்லன்களாக நடித்திருக்கும் நடிகர்கள் வழக்கமான கௌதம் மேனன் வில்லன்களைப் போலவே மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

முதல் பாதி காதல், பிரச்சினைகள் எனச் சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் தான் சிலம்பரசன் எப்படி மும்பையின் தாதாவாக மாறுகிறார் என்பது வருகிறது. ஆனால் வழக்கமான கேங்ஸ்டர் பட லிஸ்டில் அதாவது நாயகன், பாட்ஷா, வடசென்னை போன்ற படங்கள் வரிசையில் ஒன்றாகி விட்டது படத்திற்கு மிகப்பெரிய மைனசாக உள்ளது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஏஆர் ரஹ்மான் பாடல் மற்றும் இசை படத்திற்கு நல்ல வலுவை சேர்த்துள்ளது ,ஆனால் இடையே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைப்பது போல உள்ளது.வழக்கமாக உள்ள கவுதம் மேனன் படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.படத்திற்கு வாய்ஸ் ஓவர் இல்லாதது படத்திற்கு கூடுதல் பலத்தினை சேர்த்துள்ளது

தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தூத்துக்குடியின் மண் மணம் மாறாத வட்டார மொழியுடன், நல்ல வசனங்களும் கவனம் பெறுகிறது.

அப்படி இப்படி எப்படியோ மிகவும் யதார்த்தமாக சென்ற முதல் பாதி போல், இரண்டாம் பாதியையும் தெளிவான டீடெயிலிங் உடன் சொல்ல வந்தவையை கச்சிதமாக சொல்லியிருக்கலாம். ஆனால் அடுத்த பாகத்தை மனதில் வைத்து முதல் பாகத்தை சிதைத்து விட்டார் டைரக்டர் கவுதம் மேனன்

மொத்தத்தில் – சிம்புவுக்காக மட்டுமே ஒரு தடவைப் பார்க்கத் தகுந்த படமாகி விட்டது.

மார்க் 3/5