வீ சேகர் சிலை திருடினாரா? நம்ப மாட்டோம்.. உண்மையை கண்டு பிடிங்கப்பா! – தமிழ் திரையுலகம் வேண்டுகோள்

வீ சேகர் சிலை திருடினாரா? நம்ப மாட்டோம்.. உண்மையை கண்டு பிடிங்கப்பா! – தமிழ் திரையுலகம் வேண்டுகோள்

சென்னை தியாகராயநகரில் பாண்டிபஜார் பகுதியில் கடந்த மே மாதம் 14–ந் தேதி அன்று ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள 8 சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு போலீசார் மீட்டனர். அந்த 8 சாமி சிலைகளில், பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய சிலைகள் மட்டும் 6 இருந்தன. அவற்றில் 3 சிலைகள் வந்த வாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருடப்பட்டது என்று கண்டறியப்பட்டது. மேலும் உள்ள பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய 3 சிலைகள் வந்தவாசி அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவிலில் திருடப்பட்டது என்று தெரிய வந்தது.
v sekar aug 13
மீதி உள்ள சிவன், பார்வதி சிலைகள் இரண்டும், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமா னுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் திருடப்பட்டது ஆகும். 3 கோவில்களில் திருடப்பட்ட இந்த சிலைகளை விற்பதற்காக சென்னை தியாகராயநகருக்கு கொண்டு வந்தபோதுதான், சிலை திருட்டு தடுப்பு போலீசாரிடம் சிலைகள் சிக்கின. இந்த சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வீ.பிலிப், ஐ.ஜி. அசோக்குமார்தாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில், சிலை திருட்டு தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் நேரடி தலைமையின் கீழ், துணை சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, தமிழ்செல்வன், ஜனார்த்தனம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை தேடி வந்தனர். சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரும் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். பிரபல சினிமா டைரக்டர் வீ.சேகர் இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. சிலைகள் திருடுவது சம்பந்தமாக நடத்திய சதி திட்டத்தில் வீ.சேகருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் திருடப்பட்ட சிலைகளை டைரக்டர் வீ.சேகர் வசிக்கும் வீட்டில்தான் முதலில் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் வீ.சேகரை, சிலை திருட்டு தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் வீ.சேகர் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

3 கோவில்களிலும் மெயின் கதவு பூட்டை உடைத்து சிலைகளை திருடி இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், கைதான டைரக்டர் வீ.சேகர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்குகளில் மேலும் 10 பேருக்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் முந்தா நேற்று மாலை கோடம் பாக்கத்தில் உள்ள வீட்டில் கைதான வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புகழ் பெற்ற இயக்குனராக திகழ்ந்த அவர் சிலை கடத்தலில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பான தகவல் கிடைத்து உள்ளது. அவர் அளித்த வாக்குமூலம் இதுதானாம்:

குடும்ப பாங்கான படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கொள்கையுடன் திரையுலக்கு வந்து இதுவரை பல படங்களை இயக்கி உள்ளேன். தற்போது எனது மகனை வைத்து ‘சரவண பொய்கை’ என்ற படத்தை எடுத்து வருகிறேன். சினிமாவில் போதிய வருமானம் இல்லாததுதும் சிலை கடத்தலுக்கு என்னை இழுத்து வந்தது. கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் ஆசையில் என்னையும் அறியாமல் ஈடுபட்டு விட்டேன். சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் சிலர் மூலமாக எனக்கு சிலை கடத்தல் கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த 8 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் வெவ்வேறு கோவில்களில் கொள்ளையடிக்கப் பட்டதாகும். இந்த சிலைகள் சில மாதங்கள் எனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தன. நான் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வந்ததால் என் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

இந்த சிலைகளை விற்பதற்காக சிலை வாங்கி விற்கும் புரோக்கர்கள் கலந்து கொள்ளும் ரகசிய கலந்தாய்வு கூட்டமும் அடிக்கடி நடைபெறும்.இதில் நானும் பலமுறை பங்கேற்று உள்ளேன். இந்த சிலைகளை எப்படியாவது வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக அனுப்பி விற்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர்.என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று அவசரமாக பத்திரிகையாளர்களை அழைத்த தமிழ் திரையுலகினர் வழங்கிய அறிக்கை இது ”மதிப்புமிகு தமிழக காவல் துறைக்கு தமிழ்த் திரைப்படத் துறையினரின் அன்பான வேண்டுகோள் :தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் இயக்குநரான திரு. வீ.சேகர், ஒரு நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்குச் சொன்னவர். அதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது திடீரென்று சிலை கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பழி விழுந்திருக்கின்றது. இதைக் கேட்டவர்களும், படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்கள். இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது. மேலும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு. விக்ரமன் அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்களும் புழல் சிறைக்கு சென்று திரு. வீ.சேகர் அவர்களை சந்தித்த போது, “இந்தக் குற்றத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை…” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். மேலும் தான் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும், எழுத்து மூலமாகவோ, வாய் மூலமாகவோ யாரிடமும் அளிக்க வில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தயவு செய்து உண்மையை கண்டுபிடிக்கும்படி தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக ஸ்காட்லாணட் காவல் துறைக்கு இணையான நமது மதிப்பு மிகு தமிழக காவல் துறையை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு தமிழ்த் திரையுலகம்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

error: Content is protected !!