வீட்ல விசேஷம்- விமர்சனம்!

வீட்ல விசேஷம்- விமர்சனம்!

வாழ்க்கையில் உரிய வயதில் உரிய இடைவேளையில் அனைத்துமே சீராக நடக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அண்மைகாலமாக குடும்ப பொருளாதாரம், கடமை, பொறுப்பு என்று ஆண்கள் தட்டிக்கழிப்பதை போன்று பெண்களும் குடும்ப பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். இதனால் தான் உரிய வயது தாண்டி பலரும் குழந்தைபெற்றுகொள்கிறார்கள். கொஞ்சமோ அதிகமாகவோ சிரமத்தையும் சந்திக்கிறார்கள். அதே சமயம் வயதான காலத்தில் கர்ப்பம் ஆனால் ”ஒரு பொண்ணு 25 வயசுக்கு முன்னாடி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தப்பா பேசுவார்கள்; 50 வயதுக்கு பின்னால் குழந்தை பெற்றுக்கொண்டாலும் தவறாக பேசுவார்கள்”, ”50 வயசுல மனைவிய கர்ப்பமாக்கின ஆண்களை ஆம்பள சிங்கம் என்றும், பெண்களை உனக்கு அறிவில்லையா, குடும்ப கௌரவம் என்னாவது” என்ற வசவுகளுடன் நிலவும் போக்கில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்து அலச முயல்கிறது ‘வீட்ல வீசேஷம்’படம்!

அதாவது ரயில்வே டிடிஆராக இருக்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் தாயின் கர்ப்பத்தை ஆர்.ஜே.பாலாஜி ஏற்றுக் கொண்டாரா? காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஹீரோ ஆர்ஜே பாலாஜி தனக்கே உரிய காமெடி, கிண்டல் பாணியில் இயல்பாக நடித்துள்ளார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்துள்ளார், நாயகியாக வரும் அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளார். நடிப்பில் ஸ்கோர் செய்தே பேர் வாங்கிய ஊர்வசி அம்மாவாக – அதுவும் முதுமையிலும் இளமை கொப்பளிக்க கூடவே கர்ப்ப சோர்வைக் கூட வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார். கூடவே அப்பாவாக வரும் சத்யராஜ் இப்படத்திலும் வழக்கம்போல தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அதேபோல், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

50 வயதில் கர்ப்பம் அடைவது, வேற நோக்கத்தில் பார்க்கபட்டாலும், அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன். பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டுகள். ஆனால் பல காட்சிகள் டிவி சீரியல்தனமாக இருந்ததைக் கவனித்து சரி செய்ய தவறி விட்டார்கள்..

மொத்தத்தில் வீட்ல விசேஷம் — பக்காவான பொழுதுபோக்கு

மார்க் 3.25/5

error: Content is protected !!