விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி பி சி ஐ டி விசாரிக்கிறது!

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி பி சி ஐ டி விசாரிக்கிறது!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு விஷ்ணுபிரியா எழுதி வைத்திருந்த 9 பக்கங்கள் கொண்ட கடிதம் அவருடைய வீட்டில் இருந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர்.
dsp sep 20
துணை போலீஸ் சூப்பிரண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு பிரியாதான் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தாலும், இதுவரை முக்கிய குற்ற வாளி யான யுவராஜை கைது செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக விஷ்ணு பிரியாவை, உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டித்து வந்ததாகவும், இதனால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, விஷ்ணுபிரியாவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பயிற்சியை ஒன்றாக மேற் கொண்டவரும், தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான மகேஸ்வரி சேலத்துக்கு விரைந்து வந்தார். விஷ்ணு பிரியாவின் உடலை கண்டு கதறி அழுத அவர் சில அதிர்ச்சியான தகவல்களையும் வெளியிட்டார்.

நிருபர்களுக்கு பேட்டியளித்த மகேஸ்வரி, “தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விஷ்ணு பிரியா கோழை இல்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்களை உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என்று விஷ்ணுபிரியாவை நிர்ப்பந்தம் செய்தனர். உண்மை யில் கோகுல்ராஜ் கொலை வழக்கை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை. இதைச் சொல்வதால் என்னுடைய வேலை பறிபோகலாம். அதற்காக கவலைப்படவில்லை. இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் செய்த துன்புறுத்தலால்தான், விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

இதனால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அரசியல் தலைவர்கள், இந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை வேண்டும், சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வெளியிட்டனர். இந்த சம்பவம் குறித்து நாளை (திங்கட்கிழமை) சட்டசபையில் பேசவும் அரசியல் கட்சிகள் தயாராயின.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழக டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று மாலையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கையும், கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சி.பி.சி. ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு இருந்தது.இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ் குமார் அகர்வால், நேற்று சென்னையில் இருந்து திருச்செங்கோட்டிற்கு உடனடியாக புறப்பட்டு சென்று விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து விசாரித்து வருகிறார்

error: Content is protected !!