விவசாயி – விமர்சனம்!

விவசாயி – விமர்சனம்!

ம் தமிழ் சினிமா எத்தனையோ களங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது. குடும்பப்பாசம் தொடங்கி, அன்பு, காதல், வன்மம், குரோதம், பீதி என்ற பலத் தரப்பட்ட களங்களுக்கிடையே அவ்வப்போது விவசாய வாழ்க்கையை மையப்படுத்தியும் சில பல சினிமாக்கள் வந்து இருக்கிறதுதான். அதே சமயம் விவசாயிகள் என்றாலே கடன் பிரச்னை என்பது மட்டுமே என பல படங்களில் நினைக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் மண் மீதான பாசம், நம் உழைப்பின் அருமை, விளைபொருளுக்கு விலை கிடைக்காதது, தண்ணீர்ப் பிரச்னை, அரசு உதவிகள் கிடைக்காதது, இடைத்தரகர்கள், இடுபொருள் விலையேற்றம், ரியல் எஸ்டேட்… எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்னைகளையும் ஒத்தைக் கேரக்டர் மூலம் இரண்டரை மணி நேரத்தில் இயல்பான பாணியில் சொல்லி இருப்பது இந்த கடைசி விவசாயி படம்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

கதை என்னவென்றால் கிராமம் ஒன்றில் தக்கணூண்டு வயல்வெளி ஒன்றை வைத்துக் கொண்டு அல்லாடும் வயதான விவசாயி ஒருவருக்கு நேரும் இக்கட்டுகளின் அடுக்குகளே. . இத்தனைக்கும் இந்த முதியவர் விவசாயம்தான் என் உயிர் மூச்சு என்றெல்லாம் வசன பேசாமல் இந்த நிலமும் இல்லாவிட்டால் எனக்கு செய்ய என்ன வேலை இருக்கும்? என்று கேட்பவர். அப்பேர்ப்பட்டவரின் காணி நிலத்தை அபகரிக்க நடக்க சூழ்சிகளும், அதையொட்டிய விளைவுகளையும் வைத்து விவசாயியின் வாழ்வியலை நுணுக்கமாகக் காண்பித்துள்ளார் இயக்குநர்.

நல்லாண்டி என்ற முதியவர்தான் டைட்டில் ரோலில் வரும் ஹீரோ.. வீடு படத்தின் பாகவதர் கேரக்டர் மாதிரி இந்த விவசாயி மாயாண்டி ரோல் பிரமாதம்.. தன்னை கைது செய்ய வந்திருக்கும் போலீசை மின் ஊழியர் என்று நினைத்து பேசுவதில ஆகட்டும்., கோர்ட்டில் மயிலை கொன்ற குற்றம் குறித்து நடக்கும் விசாரணையின் போக்கு தெரியாமல் தன் வயல் தண்ணீர் இல்லாமல் வாடி விடும் என்று கவலைபடுவதாகட்டும் – கொஞ்சம் கூட மிகையில்லா நடிப்பில் அசர வைத்து விடுகிறார் .

விஜய்சேதுபதி & யோகிபாபு போன்றோர் இல்லாவிட்டாலும் இப்படம் பலரை ஈர்க்கும் .. அதே சமயம் படம் பார்க்கும்போது நாம் நிஜமாகவே ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றி .. இதற்குக் காரணம் இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு என்பதால் இருக்கலாம். மேலும் படத்தில் நடித்த பெரும்பாலானோர் அந்த கிராமத்தை சார்ந்த மனிதர்கள் என்பதால் அவர்களது போக்கும், பேச்சும் மிகவும் எதார்த்தமாக இருப்பது பெரிய பலம். நம் நாட்டில் விவசாயம் என்பது எப்படி இருந்தது? காலப்போக்கில் எப்படி அது செயற்கை ரசாயன உரங்களுக்கு அடிமையானது? என்பது தொடங்கி, பாரம்பரிய விவசாயத்தை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அது எப்படி இருக்கும் உள்ளிட்டவையெல்லாம் காட்சிப்படுத்தியதில் ஸ்கோர் செய்திருகிறார்.

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஏழை விவசாயியின் வாழ்க்கைப் போக்கை மிகவும் இயல்பாக நாம் ஒவ்வொருவரும் புரியும்படி மிக அழகாக உணர்த்தியிருக்கிறார் மணிகண்டன். அதனால் அனைவருக்கும் பிடித்தமான படமாகவே இருக்கும் என்று சந்தேகமில்லை

மார்க் 3.75/5

error: Content is protected !!