விண்வெளி சமாச்சாரங்கள் நமக்கு தர இருக்கும் பல்வேறு நல்ல செய்திகள்!

விண்வெளி சமாச்சாரங்கள் நமக்கு தர இருக்கும் பல்வேறு நல்ல செய்திகள்!

கடந்த வாரம் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் நடைபெற்றது. அதில் எல்லாத் தலைவர்களும் ஆன்லைனில் பங்கேற்றனர். வெளிப்படையாக மனம் விட்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழியில்லாது இருந்தது. என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஆதிக்கத்தை எதிர்ப்போம் என்று ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.

உக்ரைனில் போர் பதட்டம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ராணுவ திட்டமான ‘நாட்டோ’ ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் முன்பே ரஷ்யாவை வீழ்த்த பொருளாதார முற்றுகையை துவக்கி விட்டதை கண்டோம். ரஷ்யாவை உலக வர்த்தகத்தில் இருந்தும் வங்கி சேவைகளில் இருந்தும் வெளியேற்றியதை கண்டோம். ரஷ்யாவால் தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற அச்சக் கேள்விகளுக்கு இடையே நான்கு மாதங்கள் கடந்து விட்டது. ஆக ராணுவ தாக்குதல்களை விட வர்த்தக தொலைத் தொடர்புத் தாக்குதல்களும் அச்சம் தரும் பகுதிகளாக இருப்பதை உணர்வோம். முன்பு போல் பீரங்கி, விமானத்தில் இருந்து குண்டு மழை பொழிவதை விட மிக அச்சம் தரும் தாக்குதல்கள் வர்த்தகம், நிதி கையாளுதல் முதலியனவற்றை கட்டுப்படுத்துவது தான்!

இன்றைய இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்து விட்டால் செயலற்று போய் விடுவார்கள் அல்லவா? அது போன்று எதிரி நாடுகளை அடிபணிய வைக்க பொருளாதாரத் தாக்குதல்கள் வலிமையான ஆயுதமாகவே இருக்கிறது. அதாவது ‘நாட்டோ’ படை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு செய்வதுடன் நிறுத்தி இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் உத்தரவால் பொருளாதாரத் தடைகள் தான் மிகப்பெரிய வீரியம் கொண்ட தாக்குதலாக இருக்கிறது! போயிங், போபர் தரும் ராணுவ வலிமையை விட கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தொலைத் தொடர்பு சேவை உபகரணங்கள் கொண்டு இயங்கும் உலக வர்த்தகம் சக்தி வாய்ந்த ஆயுதங்களாக இருப்பதை அறிவோம்.

அடுத்த கட்டத்தில் விண்வெளி ஆதிக்கம் மிகப்பெரிய ஆயுத கருவியாக மாறிவிடப்போகிறது என்று வல்லுனர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள்.காரணம் நம் பூமியில் உள்ள பல்வேறு இயற்கை இடர்பாடுகளையும் எல்லை சச்சரவுகளையும் கடந்து ஆய்வுகள் நடத்தி புதிய விடைகளைப் பெற ஏதுவான சூழ்நிலை நம் பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடந்து தான் இருக்கிறது.

நாம் சந்திரயான், மங்கள்யான் சோதனைகளை வென்று வெற்றி செய்தியை அறிவித்தபோது எல்லாம் மனிதனை விண்ணுக்கு அனுப்பவே அடுத்த இலக்கு என்று அறிவித்தோம். இந்நிலையில் 60–க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்களை விமானப்படை அனுப்பியதில் 4 பேரைத் தேர்வு செய்து விசேஷ பயிற்சிகளை தந்து வருகிறோம். அவர்களில் ஒருவரோ, சிலரோ விரைவில் நமது விண்கலத்தில் விண்ணில் பறக்கப் போகிறார்கள். சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவும் மட்டுமே இதுவரை செய்துள்ள சாதனைகளை விரைவில் இந்தியாவும் செய்யக் காத்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த மே 25–ந் தேதி அன்று பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் குழுமத்தை உருவாக்கி உள்ளது. தற்போது சீனாவின் தலைமையில் இயங்கும் இந்த ‘Joint Committee on spare cooperation’ பற்றிய புது அறிவிப்பு நடந்து முடிந்த 14–வது உச்சி மாநாட்டில் ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் எந்த விவாதத்தையும் துவக்கவில்லை. ரகசியமாக பேசிக்கொள்கிறார்களா? என்றால் இது பெரிய ரகசியமான ஒன்றாகவும் தெரியவில்லை.

விண்வெளியில் முதல் ஆரம்பப்புள்ளி வைத்தவர்கள் சோவியத் ரஷ்யாவாகும். கடந்த 20 ஆண்டுகளில் சாதித்து வருபவர்கள் சீனாவும் இந்தியாவுமாகும். பிரேசில் விமான தயாரிப்பில் சாதித்து வருபவர்கள், எம்பரார் விமானங்கள் அதற்கு நல்ல சான்றாகும்.
தென் ஆப்பிரிக்காவும் தொலைநோக்கு விஞ்ஞானத்தில் முன்னணியில் இருப்பவர்கள். இப்படியாக ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தனிப்பட்ட விண்வெளி ஆய்வுகளின் பலனை விரைவில் இணைந்து செயல்பட ஓர் அற்புதமான திட்டம் உருவாகுவதில் எந்தத் தடையும் இருக்கவா போகிறது.

நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் ரஷ்ய விண்வெளி ஆய்வு உதவிகளை பெற்று பயன் அடைந்து வந்தது மறுக்க முடியாத உண்மை.
இனி வரும் காலத்தில் சீனாவும் இதர பிரிக்ஸ் அமைப்பு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் விண்வெளி ஆதிக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உலக வளர்ச்சி அடுத்த தடை கற்களை தாண்டி விண்வெளியில் சாதிக்க வழிவகுக்கும்.

விண்வெளி சமாச்சாரங்கள் நமக்கு தர இருக்கும் பல்வேறு நல்ல செய்திகளை தெரிந்து கொள்ள பல்வேறு சவால்களை சமாளித்தாக வேண்டும்.அதில் கவனம் செலுத்தினால் நம்மிடம் நிலவும் இன்றைய பல சிக்கல்கள் படு வீணான சண்டை சமாச்சாரமாக தெரிய ஆரம்பித்து நமது குடுமிபிடி சண்டைகளை நிறுத்திக் கொண்டு வரும் காலத்தில் அடுத்த தலைமுறைகள் சிறப்பான சூழலில் சுகமாய் வாழ வழிகளை உருவாக்கிட கவனம் செலுத்திடுவோம், செலுத்தியாக வேண்டிய கட்டாயமும் நமக்கு இருக்கிறது அல்லவா?

ஆர். முத்துக்குமார்

error: Content is protected !!