வாடகைத்தாய் விவகாரம்! – மத்திய அரசு விளக்கம்!

வாடகைத்தாய் விவகாரம்! – மத்திய அரசு விளக்கம்!

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜெயஸ்ரீ வாட் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவர், “இந்தியா தற்போது வெளிநாட்டவர்களுக்கு குழந்தைகளை பெற்றுத்தரும் தொழிற்சாலையாக மாறி வருகிறது. வெளிநாட்டில் இருந்து பல தம்பதிகள் தங்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தருவதற்காக வாடகைத் தாய்களை தேடி இந்தியாவுக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.இந்தியாவில் வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த சில பெண்மணிகள் வணிகரீதியாக வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகளை பெற்றுத்தரும் வாடகைத்தாய்களாக உள்ளனர். இது இந்தியாவில் பெண்மையை வணிக ரீதியாக தவறாக பயன்படுத்தும் போக்கை அதிகரித்து வருகிறது.
vadakai thai oct 29
இந்தியத்தாய்களின் கருமுட்டையை சில மருத்துவ மையங்கள் மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பும் செயலும் இந்தியாவில் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே இந்தியாவில் பெண்மையின் மாண்பை காக்கும் பொருட்டு சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கும், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கும் தடை விதிக்கவேண்டும்”என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்காக நோட்டீசு அனுப்பியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், “வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெறுவதற்கு இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். வெளிநாட்டினர் வாடகைத்தாய் மூலம் இந்தியாவில் குழந்தை பெறுவதற்கு தடை விதிக்கப்படும், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை மத்திய அரசு எந்த வகையிலும் ஆதரிக்காது. வெளிநாட்டினர் யாரும் இந்தியாவில் வாடகைத்தாய் முறை வழியாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியாத வகையில் விதிமுறைகள் உருவாக்கப்படும்.

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே இந்தியாவில் இருந்து கருமுட்டைகள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். வணிக ரீதியாக வெளிநாட்டவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வகையில் கருமுட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும். வாடகைத்தாய் மூலமாக பிரசவிக்கும் குழந்தைகள், உடல்நலக்குறைபாடு களுடன் பிறந்தால் ஏற்றுக் கொள்ள மறுக்கும் தம்பதியருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வரைவு மசோதா ஒன்றின் மீது அனைத்து மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. வாடகைத் தாய்மாரின் சட்ட ரீதியிலான உரிமைகளை காப்பதற்கு விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது”என்று மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 24–ந் தேதி நடக்கிறது.

error: Content is protected !!