வலுவான ரூபாய் மதிப்பு ; நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்!

வலுவான ரூபாய் மதிப்பு ; நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்!

கொரோனா பெரும் தொற்றின் காரணமாக வந்த முழு ஊரடங்கு உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள், உயர்ந்துள்ள கச்சா எண்ணை விலை போன்ற பல காரணங்களால் உலக வர்த்தகம் பாதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக உலக பொருளாதாரம் சரிந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தனது டாலரை ஸ்திரப்படுத்திக் கொள்ள வங்கி வட்டிகளை உயர்த்தி விட்டது. கடன் வாங்கவும் வைப்பு தொகைகளுக்கும் வட்டி உயர்வால் டாலர் ஸ்திரமாகி வருகிறது. இதன் எதிரொலியாய் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியா உட்பட பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இருந்து முதலீடுகளைத் தங்கள் நாட்டு வைப்பு நிதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

இது வளரும் பொருளாதாரங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய தலைவலியாகும். இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்த ஆண்டில் மட்டும் 7 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து விட்டது. 2022 வருடப் பிறப்பன்று டாலர் மதிப்பு ரூபாய் 75 ஆக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.80.05 காசாக உயர்ந்துள்ளது.

அதாவது ஒரு டாலர் வாங்க இனி நாம் ரூ.80 தந்தாக வேண்டும். இப்படி ஒரு மாதங்களில் 7 சதவிகித வீழ்ச்சி என்றால் இந்தியப் பொருளாதாரம் தாங்குமா? ரூபாய் மதிப்பு ரூ.80 க்கு கீழ் வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை ஆகும். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு அதிகரிக்கும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வு ஆகிய 2 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி (வர்த்தக பற்றாக்குறை) அதிகரித்து இருப்பது இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 172 சதவீதம் உயர்ந்து 26.1 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி மிக அதிகமாக உள்ளது.ரூபாயின் வீழ்ச்சி உண்மையில் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தியாகும். அவர்கள் கைவசம் இருக்கும் டாலர் மதிப்பு கடந்த சில நாட்களில் திடீர் வளர்ச்சியைக் கண்டு வருவதால் அவர்களுக்கு ஆதாயமாகும்.

ஆனால் நாமோ அதிக ஏற்றுமதியாளர்களைக் கொண்ட நாடு கிடையாது. அதாவது டாலர் வர்த்தக வருவாய் குறைவாகும்.

அதாவது டாலர் வெளியேறுவதே அதிகமாக இருப்பதால் தான் இந்தியாவின் சமீபத்து தலைவலியான டாலர் விலைச் சரிவை சந்தித்து வருகிறது.

இது நமது பொருளாதாரத்தை பாதிக்குமா? நிச்சயம் உடனடி நிவாரணங்கள் தேவை. அதை மனதில் கொண்டு ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருவதை அறிவோம்.

மே மாதம் முதலே மாதாமாதம் ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக இவ்வாண்டு துவக்கத்தில் வீட்டு கடன் வட்டி விகிதம் தேசிய வங்கிகளில் 6.50 சதவிகிதத்தையும் விட குறைவாகவே இருந்ததல்லவா? அது ஜூலை மாதத்தில் அதாவது ஆறே மாதத்தில் 8.20 சதவிகிதமாக உயர்ந்து விட்டது.

இந்த நிலையில் நமது பொருளாதாரம் சரிந்து சிதறுமா? என்ற அச்சக் கேள்வியும் எழுகிறது.

நம்முன் இருக்கும் நம்பிக்கை தரும் செய்தி என்னவென்றால் ஜப்பானின் யென், யூரோ முதலிய இதர பன்னாட்டு கரன்சிகளும் அமெரிக்க டாலருக்கு இணையாக சரிவை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றின் சரிவு இந்திய ரூபாயை விட அதிகமாக இருக்கிறது.

அதாவது நமது ரூபாய், யூரோ, யென் போன்ற கரன்சிகளை விட வலுவாகவே இருக்கிறது. உடனடி லாபம் என்பதற்காக வெளியேறி அமெரிக்க டாலர் மீண்டும் நம் நாட்டிற்குள் முதலீடாக வரும் நாளில் நமது பொருளாதாரம் புது தெம்புடன் வெற்றி நடைபோடத் துவங்கும்.

அதை எதிர்பார்த்து ரிசர்வ் வங்கியும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து வருகிறது.

அன்னிய செலாவணி வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி என்ற அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வைப்பு நிதிகளில் முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள நல்ல ஈர்ப்பாகவே இருக்கும்.

மேலும் இறக்குமதி வர்த்தகத்தை ரூபாயில் பரிவர்த்தனை என்று மத்திய அரசு பல நாடுகளுக்கு அறிவுறுத்தி இருப்பதால் நமது டாலர் வெளியேற்றம் கணிசமாக குறையும்.

குறிப்பாக ரஷ்யாவிடம் நாம் வாங்கும் கச்சா எண்ணைக்கு டாலர் தர வேண்டியது இல்லை. ஆக நமது பொருளாதாரம் டாலர் விலை ஏற்றத்தால் எந்த பெரிய சிக்கலையும் சந்திக்காது என்று பல நிபுணர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஆம் .

வலுவான ரூபாய் மதிப்பு ;

நம்பிக்கையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்.

error: Content is protected !!