வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு நோ: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு நோ: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. பல்வேறு பார் கவுன்சில்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் மேற்கண்ட அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. வக்கீலாக பதிவு செய்ய உச்சபட்ச வயது வரம்பு ஏதும் நாடாளுமன்றம் நிர்ணயிக்கவில்லை என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
Supreme-court-nov 12
சட்டப்படிப்பு படித்தவர்கள் வக்கீல் தொழில் மேற்கொள்வதற்கு பார் கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே வக்கீல் தொழிலை மேற்கொள்ள முடியும். சட்டப்படிப்பை எந்த வயதில் படித்து முடித்தாலும், எந்த வயதிலும் பார் கவுன்சிலில் வக்கீல் தொழில் செய்வதற்காக பதிவு செய்யலாம் என்ற நிலைமை இருந்து வந்தது.
ஆனால் தற்போது பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் வயது நிர்ணயம் செய்தது. பார் கவுன்சில் விதிமுறையில் 8(ஏ) திருத்தம் கொண்டுவரப்பட்டு 45 வயதுக்குள் பதிவு செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து ரெயில்வே துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த எம்.ரமணி (வயது 51) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில்,”45 வயதுக்குள் வக்கீல் தொழிலில் ஈடுபட பதிவு செய்யவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் அரசியல் சட்டம் 14, 16 பிரிவுகளுக்கு எதிரானது. அடிப்படை உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. எந்த வயதிலும் படிப்பை படிக்கலாம் எந்த வயதிலும் தொழிலை மேற்கொள்ளலாம் என்ற அடிப்படை உரிமை இருக்கும்போது வயது வரம்பு நிர்ணயித்தது தவறு.
law nov12
ஏற்கனவே 1993-ல் இதுபோன்று வயது வரம்பு கொண்டுவரப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. ஆனால் இப்போது மீண்டும் அதே அடிப்படையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்யவேண்டும். இல்லையேல் வக்கீல் தொழிலை படித்துவிட்டு வக்கீலாக பதிவு செய்ய என்னை போன்றவர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடும்.”என்று மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் இந்த மனுவை விசாரித்தார். 1993-ம் ஆண்டில் வயது வரம்புக்காக கொண்டுவரப்பட்ட விதிமுறையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்திருப்பதாலும் அதே விதிமுறையை புகுத்தி இப்போது வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்த வயது வரம்பு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு எதையும் பார்லிமென்ட் நிர்ணயிக்கவில்லை என்றும் பார் கவுன்சில்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எச்.எல்.தத்து அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

error: Content is protected !!