லாரி ஸ்ட்ரைக் வாபஸானது!

லாரி ஸ்ட்ரைக் வாபஸானது!

நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்; ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரவேண்டும்; டி.டி.எஸ். பிடித்தம் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும் லாரிகள் ஓடவில்லை.இந்த வேலை நிறுத்தம் நேற்று 5–வது நாளாக நீடித்தது. இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து முடங்கியது. சரக்குகள் ஆங்காங்கே தேங்கின. நாமக்கல்லில் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்கின.
lorroes oct 6
இதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது. காய்கறிகளுக்கும் சில பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தால் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ் தான், பஞ்சாப் போன்ற வடமாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் கோரிக்கை களை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, லாரி அதிபர்களின் சங்கமான அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகளை நேற்று மாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.

அப்போது,சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து 8 பேர் கொண்ட குழு அமைப்பது என்றும், அந்த குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை டிசம்பர் 15–ந் தேதிக்குள் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. டி.டி.எஸ். பிடித்தம் மற்றும் டீசல் மீதான சேவை வரி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், பழைய லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் ஆனது. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்த போராட்டத் தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பேச்சுவார்த்தைக்கு பின்னர் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் பீம் வாத்வா நிருபர்களிடம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சுங்க சாவடி பிரச்சினை பற்றி ஆய்வு செய்ய போக்குவரத்து துறை செயலாளர் விஜய் சிப்பர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 8 பேர் கொண்ட குழுவில் லாரி உரிமையாளர்கள் தரப்பில் 4 பேர் இடம் பெறுவார்கள் என்றும், இந்த குழு டிசம்பர் 15–ந் தேதிக்குள் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!