மோடியும் 300 எம்.பி.-களும் By கதிர்

மோடியும் 300  எம்.பி.-களும் By கதிர்

‘முன்னூறு எம்.பி.க்கள் என் பின்னால் அணிவகுக்க வேண்டும்’ என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைக் கேட்டு ஆடிப் போயிருக்கின்றன. பிஜேபியில் உள்ள தலைவர்களோ அசந்து போயிருக்கிறார்கள்.எதற்கு குறி வைக்கிறார் மோடி?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அரசியலில் உண்டு. ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்தியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒற்றைக் கல்லை வீசியெறிந்து ஒரு தோட்டத்தையே கைவசப் படுத்த விரும்பும் அரசியல்வாதியை இந்த நாடு இப்போதுதான் சந்திக்கிறது.
narendra_modi_caricature
‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 273 எம்.பி.க்கள் போதும். அது பெரிய விஷயமல்ல. 300 பேராவது என் பின்னால் அணிவகுக்க வேண்டும். அப்போது என் பேச்சை இந்த உலகமே கேட்கும்!’ என்கிறார் மோடி.

இந்த வார்த்தைகளை வேறு எந்த தலைவர் பேசியிருந்தாலும் அவரது கட்சிக்காரர்கள் ஆரவாரமாக கைதட்டி இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் கேலி செய்திருக்கும். ஆனால், மோடி விஷயத்தில் பாருங்கள், இரு தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

மோடி விளையாட்டுப் பிள்ளை அல்ல. விவரம் தெரியாத அரசியல்வாதியும் அல்ல. இந்திய நாடாளுமன்றத்தில் தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது முடிந்துபோன கதை என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் உள்ளத்தில் இருப்பதை கொட்டிவிட்டார்.

பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் கலவரம் வெடித்து நாடெங்கும் பதட்டம் நிலவியது. உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததுதான் கடைசி மெஜாரிடி. 414 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக ராஜிவ் காந்தி மாற்றியமைப்பார் என நாடு எதிர்பார்த்தது. அசுரப் பெரும்பான்மை என்று வர்ணிக்கப்பட்ட பெரும் பலம் இருந்ததால் அவர் எது நினைத்தாலும் செய்திருக்கலாம். ஆனால், அரசியல் அனுபவம் இல்லாததால் தான் நினைத்தவாறு அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்த அவரால் இயலாமல் போனது வேறு விஷயம். அதன் பின்னர் இன்றுவரை எந்த தேர்தலிலும் ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை பெறவே இல்லை. ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின்னணியில் நடந்த தேர்தலில்கூட அக்கட்சி பெற முடிந்த இடங்கள் மெஜாரிடிக்கு 30 சீட் குறைவுதான்.
கூட்டணி யுகம் உதயமாயிற்று. அது வளர்ந்து வலுவடைந்து, பிராந்தியக் கட்சிகளின் தயவு இல்லாமல் மத்தியில் எந்த தேசியக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்பது இன்று நடைமுறையாகி விட்டது. இந்த நிலையில் மோடி 300+ என்ற அசாத்தியமான நம்பரை குறி வைப்பது ஏன்?

முதல் காரணம், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையை அவர் தவிர்க்க விரும்புகிறார். எந்த இலாகாவை விட்டுக் கொடுப்பது என்பதில் தொடங்கி, கிடைத்த இலாகாவை பயன்படுத்தி முடிந்தவரையில் பொதுச் சொத்துகளை கபளீகரம் செய்வதுவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்தாலும் தடுக்க முடியாமல் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தனக்கு நேரக்கூடாது என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார். சுற்றிலும் திருடர்களை வைத்துக் கொண்டு ’நான் நேர்மையாகத்தானே செயல்படுகிறேன்’ என்று நெஞ்சைத் தொட்டுப் பார்த்து திருப்தி அடைய அவரொன்றும் மெத்தப் படித்த மேதை மன்மோகன் அல்லவே.

இரண்டாவது காரணம், பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்களோ அல்லது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளோ ஆலோசனை என்ற பெயரில் குறுக்கீடு செய்வதையும் மோடியால் ஜீரணிக்க முடியாது. சீனியர்கள் என்ற ஒரே தகுதியில் கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் அடிக்கடி குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த தேர்தலோடு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட முதிய தலைவர்களுக்கு விடை கொடுக்க அவர் முடிவு செய்துவிட்டார். அதில் அவரிடம் தயக்கமோ ஒளிவு மறைவோ கிடையாது. வெற்றி பெற்று பழக்கப்பட்ட தொகுதிகளுக்கு மாறாக தோல்வி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை சீனியர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மோடி காட்டிய வைராக்கியம் கட்சிப் பிரமுகர்களால் பிரமிப்புடன் அலசப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லாமல் பிஜேபி இயங்குவது கடினம் என்று பலர் நம்புகிறார்கள். அது உண்மைதான். இந்த தேர்தலில் வென்று அக்கட்சி ஆட்சி அமைக்கும்போது, வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த் குமார், நிதின் கட்கரி, சிவராஜ் சவுகான் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள். அப்போது கட்சியை நடத்திச் செல்ல தலைவர்களுக்கு தட்டுப்பாடு வரும். அதை சமாளிக்க ஆர்.எஸ்.எஸ் இப்போதே இரண்டாயிரம் பேரை தயார் செய்துவிட்டது. அந்த அமைப்பில் பிரசாரக் என்று குறிப்பிடப்படும் இவர்கள், கட்சி நிர்வாகம் குறித்த பாடங்கள், பயிற்சிகளை முடித்துவிட்டு கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். இல. கணேசன், கோவிந்தாச்சார்யா, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் அவ்வாறுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிஜேபிக்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்காக இருந்த நரேந்திர மோடியே டெபுடேஷனில் பிஜேபிக்கு வந்தவர்தான்.

அதனால் அவருக்கு தாய்க்கழகத்தின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அத்துபடி. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் செய்த தவறை தானும் செய்ய மோடி தயாரில்லை. பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் உயர்ந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ் வளையத்தில் இருந்து விடுபட்ட சுதந்திர தலைவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் இருவரும் முயற்சி செய்தனர். பாரதத்தின் வரலாற்று நாயகனாக வாஜ்பாய், அவரது வெல்ல முடியாத தளபதியாக அத்வானி ஆகியோரை சித்திரப் படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா, என்ன? புறக் கண்களுக்கு புலப்படாத விஸ்தாரமான கட்டமைப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புறக்கணிப்பால் அந்த தலைவர்களின் முயற்சிகள் எடுபடவில்லை. அதை அருகிலிருந்து பார்த்தவர் மோடி. எனவே, புத்திசாலித்தனமாக வேறு வழியை தேர்ந்தெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் இணக்கமாக நடந்துகொண்டே, மெல்ல மெல்ல தன் பாணிக்கு அதை திருப்புவது அவர் திட்டம்.

ஒரு நிகழ்ச்சி உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் ஆணைப்படி பிஜேபி தலைவராக்கப்பட்ட நிதின் கட்கரியிடம் மோடி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ’பிரதமர் ஆகக்கூடிய தகுதி படைத்தவர்கள் என் கட்சியில் ஆறேழு பேர் இருக்கிறார்கள்; மோடி எட்டாமவர்’ என்று பதில் அளித்திருந்தார். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் முகத்தில் கடுப்பு காட்டியோ, ட்விட்டரில் பதிவிட்டோ, வெளிநடப்பு செய்தோ தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பார்கள். மோடி அவ்வாறு தன் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு நன்றாகவே தெரியும், டெல்லி சிம்மாசனம் மீது கண் வைக்கும் தனக்கு செக் வைக்க ஆர்.எஸ்.எஸ் ஏற்பாட்டில் தலைவரானவர்தான் கட்கரி என்பது. ஆகவே செய்தியாளர்கள் துருவித் துருவி கேட்டும்கூட, ‘எட்டாவது குழந்தை என்ன செய்தது என்பது புராணங்களை படித்தவர்களுக்கு புரியும்’ என்று பூடகமாக குறிப்பிட்டார். அசுரன் கம்சனை வதம் செய்த பகவான் கிருஷ்ணன் எட்டாவது குழந்தை என்பது தெரியும்தானே. விரைவிலேயே கட்கரி பதவியை பறிகொடுத்தார். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தவர் ராஜ்நாத் சிங். யாரும் எதிர்பாராத வகையில், ‘மோடியை விட்டால் இந்தியாவுக்கு நாதியில்லை’ என்று முதல் முழக்கம் செய்தார். குஜராத் முதல்வரின் காய் நகர்த்தும் சாமர்த்தியத்துக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு. கட்கரி பினாமி பெயர்களில் நிறைய கம்பெனிகள் நடத்தி வந்த விவகாரம் குஜராத்தில் இருந்துதான் வெளிச்சத்துக்கு வந்தது என்பதை சொல்லிக் காட்ட தேவையில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொருத்தவரை சில அசைக்க முடியாத நியதிகள் உண்டு. தனி மனிதனைவிட கட்சி பெரிது. கட்சியைவிட லட்சியம் பெரிது. தனிநபர் துதி தவறானது. கூட்டுத் தலைமை சிறப்பானது. இப்படியாக. ஆனால், மோடி இதற்கு நேர்மாறான தடத்தில் பயணம் செய்பவர். இந்தியர்களுக்கு ஹீரோ ஒர்ஷிப் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பதுபோல் காங்கிரஸ்காரர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஹீரோ எப்படி இருக்க வேண்டும்? பலசாலியாக, எதற்கும் அஞ்சாதவனாக, எதிரிகளை இல்லாமல் ஆக்குபவனாக இருக்க வேண்டும்; எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லோரும் அவனது துதி பாட வேண்டும். அதைத்தான் சாதித்திருக்கிறார் மோடி. பத்தாண்டுகளுக்கு மேலாக சந்தடியில்லாமல் குஜராத்தில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்றை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ் மூலமாகவே அதற்கு பயிற்சியும் அளித்து, தேசபக்தி என்ற தலைப்பில் அதற்கு அரசியல் உத்திகளை கற்றுக் கொடுத்து, அந்த மாநிலத்தை தனக்கான ஏவுதளமாக நிர்மாணித்திருக்கிறார் அவர்.

அமெரிக்காவில் பரவிக் கிடக்கும் பணக்கார குஜராத்திகளும், இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்களும் எதிர்காலக் கனவுகளுடன் அந்த தளத்திலிருந்து மோடியை டெல்லி தர்பாரில் கொண்டு சேர்க்கும் அரசியல் ராக்கெட்டுக்கு எரிபொருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

’இந்தியாவை பலமான நாடாக மாற்றி, இந்துக்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிற உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற இதைவிட அருமையான சந்தர்ப்பம் வாய்க்காது; அதை நிறைவேற்றித்தர என்னைவிட பொருத்தமான ஆளை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைமையை நம்பவைத்தது மோடியின் விடாமுயற்சிக்கு கிட்டிய பெரும் வெற்றி.

வலிமை என்பது ஆர்.எஸ்.எஸ் அபரிமிதமாக நேசிக்கும் இரண்டாவது வார்த்தை. பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை மனமார பாராட்டியது. இந்தியாவை ஆளவும், இந்து தர்மங்களை காப்பாற்றவும் வலிமையான தலைவரால்தான் முடியும் என அது நம்புகிறது. எத்தனை தடுத்தும் எழுந்து நிற்கும் மோடியை அது இப்போது அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது. இரு தரப்பும் அவரவர் லட்சியங்களை பரஸ்பரம் பூர்த்தி செய்ய எழுதப்படாத உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது வெளிப்படையான தொடர்புகள் தெரியவில்லை என்றாலும், ஓட்டுப்பதிவு நேரத்தில் கிளைமாக்சாக என்ன நடக்குமோ என்ற சிந்தனையை அவை கிளறி விடுகின்றன.

’இந்திய மண் மீது ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்’ என்று சீனாவுக்கு மோடி எச்சரிக்கை விடுக்கிறார். ’சீனாவிடம் அடைந்த தோல்விக்கு நேருதான் காரணம்’ என்று ஹெண்டர்சன் ப்ரூக்ஸ் அறிக்கையை ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பத்திரிகையாளர் அம்பலப்படுத்துகிறார். ’கிரீமியாவை ரஷ்யா பிடித்ததுபோல அருணாசல் பிரதேசத்தை சீனப்படைகள் வசப்படுத்தும்’ என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. ’விபரீதமாக எதையாவது செய்து தொலைக்காதே’ என்று சீனாவை எச்சரிக்கிறது அமெரிக்கா.

’பாபர் மசூதி இடிக்கப்பட்டது உணர்ச்சிவசப்பட்ட இந்து தொண்டர்களால் அல்ல; அது அத்வானி, கல்யாண் சிங் ஆகியோர் ஒரு மாதம் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும்’ என்று கோப்ராபோஸ்ட் ஒரு ரகசிய தொகுப்பை ஒளிபரப்புகிறது. ‘நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல’ என்று விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு மூத்த பிஜேபி தலைவர்களும் காங்கிரசும் தள்ளப்படுகின்றனர்.

’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம். இந்தியாவில் பிறந்த எவரும் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ள முடியாது. மதத்தின் பேரால் அரசு சலுகைகள் வழங்கக்கூடாது. உணவுக்காக பசுவை கொல்லக்கூடாது. இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது ஹிந்துஸ்தான் என திருத்த வேண்டும்… என்று சர்ச்சைக்குரிய பல கோஷங்களை பிஜேபியும் அதன் சார்பு அமைப்புகளும் எழுப்பி வருகின்றன. இவை குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நான்கைந்து தேசிய சிறுபான்மை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதுவரை மோடி பதிலளிக்கவில்லை. அவரது முன்னூறு எம்.பி.க்கள் பேச்சு குறித்து மற்ற கட்சிகள் அதிர்ச்சி அடைய காரணம் இதுதான்: ‘இந்தியாவின் அடித்தளத்தையே மாற்றியமைக்க மோடி திட்டமிடுகிறாரோ?’

அங்கொரு மாற்றம், இங்கொரு மாற்றம் என்பது மோடிக்கு பிடிக்காது. அடியோடு மாற்ற வேண்டும் என்பது அவரது இலக்கு. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால்தான் அரசியல் சாசனத்தில் கைவைக்க முடியும். அவர் ஆசைப்படுவது போல பிஜேபிக்கு 300 தொகுதிகள் கிடைத்துவிட்டால், அடிப்படைகளை மாற்றுவதற்கு தோழமைக் கட்சிகளை சம்மதிக்க வைக்கலாம் என்று நம்புகிறார்.

அப்படி நடந்தால் உலகம் திரும்பிப் பார்க்காமல் என்ன செய்யும்?

(கதிர் in இழு தள்ளு 18 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 13.04.2014)

error: Content is protected !!