மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்!

மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்!

தி.மு.க. கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளரான மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.வருகிற 30–ந்தேதி பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் அழகிரி மீது பாய்ந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை தி மு க வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
jan 24 _KARUNANIDH_WITH ALAKIRI
மு க அழகிரியின் பிறந்த நாள் வரும் 30ம் தேதி வருகிறது. வருடா வருடம் அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரையை கலக்கி விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். கிட்டத்தட்ட மதுரை தி மு க-வினருக்கு அன்றுதான் சித்திரைத் திருவிழா போல. இந்த கோலாக்லத்தையொட்டி,கடந்த ஒருமாதத்திற்கு முன்னரே அழகிரியின் ஆதரவாளர்கள் வழக்கம் போல் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர். இதுதான் இப்போதைய பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகி விட்டது. மதுரையில் அழகிரியை வாழ்த்தி ஒட்டிய போஸ்டர்களில் இருந்த வாசகங்கள் ஸ்டாலினைச் சீண்டுவதாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்குக் புகார் அனுப்பினார்கள். இதனால் ஸ்டாலினும் கொதிப்படைந்தார். இதையடுத்து மதுரை திமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கியது கட்சித் தலைமை.

இதனால் அழகிரி அப்செட்டானார். ஆனாலும் எதுவும் பொறுமைக் காத்த அவரையும், கருணாநிதியையும் சந்திக்க வைக்க அவர் குடும்பத் தரப்பினரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதையொட்டி கருணாநிதி வீடு வரை வந்தும் அவரை கருணாநிதி சந்திக்கவே இல்லை. அப்போது அவரது மகள் உள்ளிட்டோ்தான் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து நடந்த முயற்சியால் சில தினங்களுக்கு முன்பு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. அப்போது சமரசம் ஏற்பட்டதாகவே செய்தி வெளியானது.
jan 24 - alagiri poster
இதற்கிடையில்தான் நேற்று மீண்டும் ஐந்து அழகிரி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இது அழகிரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியா, சிங்கப்பூர், பாங்காங் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த அழகிரி இன்று அதிகாலை 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.காலை 7 மணிக்கு கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரும் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் தயாளு அம்மாளையும் சந்தித்து பேசினார். காலை 8 மணிக்கு கோபாலபுரத்தில் இருந்து அழகிரி புறப்பட்டுச் சென்றார். கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய சில மணி நேரத்தில்.”மதுரை மாவட்டத்தை சேர்ந்த மதுரை மாவட்ட துணைச் செயலாளர் எம்.எல்.ராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை.ராஜேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.வெள்ளையன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் பி.அசோக்குமார், மேலூர் ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் எ.முத்துவேல் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று அன்பழகன் பெயரில் அறிக்கை வெளியானது.கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதால் அவர் நீக்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். அழகிரி கட்சியின் உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் மூழ்கிய அழகிரி ஆதரவாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்காத வகையில் அழகிரியே கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதையடுத்து தற்போது சென்னையிலுள்ள அழகிரி இன்று மதுரை விரைகிறார். நாளை இது குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்த போவதாக செய்திகள் வருகின்றன.

error: Content is protected !!