முடிந்தது கூட்டத்தொடர்…! சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செயல்பாடுகள் மினிப் பார்வை…!

முடிந்தது கூட்டத்தொடர்…! சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செயல்பாடுகள் மினிப் பார்வை…!

ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  இன்று மதியத் தோடு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ம் தேதி மதியம் வரை தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்திருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதான எதிர்க்கட்சியான திமுக, தேமுதிக, கம்யூ னிஸ்ட்கள் என அனைத்து எதிர்க்கட்சிகளுமே சட்ட சபை யை உடனே கூட்ட வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை பேச வேண்டும்… தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்… தமிழக முதல்வர் உடனடியாக சபையை கூட்ட வேண்டும் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டார்கள். திமுக ஒருபடி மேலே போய் தமிழக கவர்னரை சந்தித்து தமிழக சட்டசபையை கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடும்படி மனு அளித்தார்கள். இப்படி சட்டசபை கூட்டத்தொடர் நடக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் இந்த சட்டசபை கூட்டத் தொடரில் எப்படியிருந்தது… வெளியே அறிக்கைகளும், மனுக்களும் கொடுத்தவர்கள் சபைக்குள் வந்ததும் எப்படி நடந்து கொண்டார்கள்…
tn assembly sep 29
தேமுதிக பிரதான எதிர்க்கட்சி

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக உறுப்பினர்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப் பட்டிருப்பதால் இந்த கூட்டத்தொடரில் பங்கு பெற அவர்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரம் அந்த கட்சியின் தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமான விஜயகாந்த்துக்கு கூட்டத்தொடரில் பங்கு பெறும் உரிமை இருந்தும் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கு பெறவில்லை. ஆனால், ஒரு நாள் மட்டும் திடீரென சட்டசபைக்கு வந்த விஜயகாந்த் லாபியில் உள்ள வருகை பதி வேட்டில் ‘அட்டென்டென்ஸ்’ மட்டும் போட்டு விட்டு வந்த வேகத்திலேயே ஓட்டம் பிடித்தார்.

திமுக

சபை தொடங்கிய முதல் நாள் இரங்கல் தீர்மானம் மட்டும் நிறைவேறி அவை ஒத்தி வைக்கப் பட்டதால் அன்றைய தினம் மிக அமைதியாக தங்கள் கூட்டத் தொடர் பயணத்தை திமுக உறுப் பினர்கள் தொடங்கினார்கள். மறுநாள் அதாவது கூட்டத் தொடர் தொடங்கிய இரண்டாம் நாள் ஆகஸ்ட் 25ம் தேதியில் இருந்து ஒரு சில நாட்களை தவிர மற்ற நாட்களில் எல்லாம் கேள்வி நேரம் முடிந்து 110விதியின் கீழ் முதல்வரின் அறிக்கை முடிந்ததும் எழுந்து பேச அனுமதி கேட் பார்கள்… சபாநாயகர் அனுமதி மறுப்பார்… மைக் இல்லாமலேயே பேச தொடங்குவார்கள்… சபா நாயகர் எச்சரிப்பார்…உடனே திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சபாநாயகர் இருக்கைக்கு அருகே வந்து கோஷம் போடுவார்கள்… அப்போதும் சபாநாயகர் அனுமதி மறுப்பார்… சபாநாய கரை கண்டித்து அடுத்த 10வது நிமிடம் திமுக அவை யில் இருந்து திமுக வெளிநடப்பு செய்யும்… சட்டசபைக்கு வெளியே 4ம் எண் நுழை வாயில் அருகே மீடியா மன்றத்திற்கு வரு வார்கள்… வெளிநடப்பு செய்ததற்கு காரணம் சொல்லிவிட்டு சில நேரம் அவைக்குள் செல்வார் கள்… அல்லது கார் ஏறி வீட்டுக்கு போவார்கள்….

திமுக சட்டசபை கட்சித்தலைவர் ஸ்டாலின்… சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதே ‘நமக்கு நாமே’ பயணத்தை அறிவித்தார்… காரணம் கேட்டால் சட்டசபையில் பேச அனுமதி மறுக்கிறார்கள் அதனால் மக்கள் மன்றத்திலேயே பேசிக் கொள் கிறேன் என்று சொல்லிவிட்டார்…

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்… சில நேரங்களில் ஆவேசம்… பல நேரங்களில் நக்கல் நையாண்டியோடு அவையில் அமர்ந்திருந்தார்… முதல்வரின் அறிவிப்பு எப்போது முடியும் என காத்திருப்பதுபோல முதல்வர் பேசி முடித்ததும் எழுந்திருப்பார்… அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் அவர் பேச முயற்சிப்பார்… சபாநாயகர் அனுமதி மறுப்பார்… பிறகு என்ன வழக்கம் போல திமுக வெளிநடப்புதான்…

கூட்டத்தொடர் முடிவதற்கு ஒரு நாள் முன்பாக வழக்கமாக வெளிநடப்பு செய்யும் திமுகவினர் அன்றைக்கு ஏனோ சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்… விஷயம் ஒன்றுமில்லை ஆலந் தூர் சட்டசபை உறுப்பினர் வெங்கட்ராமன் பேசும்போது, ‘சட்டசபையை கூட்டுங்கள் சட்டசபையை கூட்டுங்கள் என்று கூச்சல்போட்ட எதிர்க் கட்சிகள் சட்டசபையை கூட்டியதும் பேச பயந்து வெளிநடப்பு செய்கிறார்கள். அவர்களுக்கு சபையில் எப்படி பேசுவது என்பது தெரியவில்லை’ என்று பேசியதுதான் காரணம்.

‘எதிர்க்கட்சிகள்’ என்று எங்களைத்தான் உறுப்பினர் குறிப்பிடுகிறார் அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக திமுக உறுப்பினர்கள் கோஷம் போட… முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட சில திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து கோஷம்போட… சபாநாயகர் அவர்களை எச்சரிக்க… துரை முருகனை பார்த்து ‘உங்கள் உறுப்பினர்களை மரபு மீறி செயல்படவேண்டாம் கட்டுப்படுத்துங்கள் என்று சபாநாயகர் கூற… துரைமுருகனோ திமுக உறுப்பினர் களை சமாதானபடுத்த முயன்று முடியாமல் போக… சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் அவை காவலர்களை அழைத்து ‘திமுக உறுப்பினர்களை வெளியேற்றுங்கள்’ என உத்தரவிட்டார்…

திமுக உறுப்பினர் ராஜா தன் தொகுதி பிரச்னையை இன்றைக்கு பேசி சட்டசபையில் பதிவு செய்து விடவேண்டும் என காத்திருந்தார்… அவரின் பேச்சை கேட்க அவரது மனைவியும் அவை மாடத்தில் அமர்ந்திருந்தார்… ஆனால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் அவரால் பேச முடியாமல் போனது.

கடைசி நாள் அன்று காலையில் இருந்தே திமுக உறுப்பினர்கள் ரொம்பவே அமைதியாக இருந்தார் கள்… வழக்கம்போல 110விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்பு முடிந்ததும் துரைமுருகன் பேச எழுந்தார் அவருக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பார் என எதிர்பார்த்தார்கள் ஆனால் சபாநாயகர் ‘சொல்லுங்க துரைமுருகன்… என்ன பேசுங்க’ என அனுமதிக்க…மைக் வந்த குஷியில் சிரித்துக் கொண்டே துரைமுருகன் ‘முதல்வரை சந்திக்க வந்த சத்துணவு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி…’ என்று பேச ஆரம்பித்தார் மைக் ‘கட்’ ஆனது…

சபாநாயகர் குறுக்கிட்டு …. ‘இன்றைக்கு காலையிலதான் என்கிட்ட கடிதம் குடுத் தீங்க… இப்ப அதபத்தி பேசினா எப்படி… உக்காருங்க… ’என சொல்ல தொடர்ந்து துரைமுருகன் நின்றபடியே பேச முயற்சிக்க… சபாநாயகர் அடுத்த உறுப்பினரை அழைத்தார்….

வழக்கமாக இப்படி சபாநாயகர் செயல்படும்போது திமுக உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்து சபாநாயகரை கண்டித்து கோஷம்போட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்வது வழக்கம்… இந்தமுறை ஏனோ திமுக உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்தாலும் வெளிநடப்பு ஏதும் நடைபெற வில்லை…

மானிய கோரிக்கையின் மீது திமுக உறுப்பினர் சக்கரபாணி பேசவேண்டும் என்ப தற்காக திமுக வெளிநடப்பு எதையும் கடைசி நாளில் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

மானிய கோரிக்கையின் மீது திமுக உறுப்பினர் சக்ரபாணியும் பேசினார்… அப்போது சத்துணவு அமைச்சர் வளர்மதி குறுக்கிட்டு ‘சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் என்று முந்தைய திமுக ஆட்சி யில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்’ என சொன்னதும் துரை முருகன் ஆவேசம் அடைந்து எழுந்து அந்த கருத்து தவறானது என்று சபா நாயக ரிடம் முறையிட்டார்… திமுக உறுப்பினர்களும் எழுந்து கூச்சல் போட்டனர்… கொஞ்ச நேரத்தில் அந்த கூச்சலும் அடங்கி திமுக உறுப்பினர்கள் அவர்கள் இருக் கையில் அமர்ந்திருந்தனர்… வெளிநடப்பு எதுவும் நடைபெறவில்லை. பின்னர் நேரம் செல்ல செல்ல… ஒவ்வொரு திமுக உறுப்பினர்களாக எழுந்து அவையில் இருந்து வெளியேறி னார்கள்… வெளிநடப்போ என பத்திரிகையாளர்கள் ஓடிச்சென்றால்… வெளியே சென்ற திமுக உறுப்பினர்கள் அவர்களின் அறையில் ஆலோசனை நடத்திவிட்டு அப்படியே வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

மொத்தத்தில் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் சட்ட மன்றத்தில் அதிக நேரம் பேசியதை விட மீடியா மன்றத்தில்தான் அதிக நேரம் பேசினார்கள்… வெளிநடப்பு அவர்களின் தின நிகழ்வாக இருந்தது.

இ.கம்யூ.,மா.கம்யூ.,

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை குடிநீர், மணல் கொள்ளை, இனப் படுகொலை மீதான சர்வசதேச விசாரணை, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு, கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்னை என பல பிரச்னைகளை மெல்ல முன் வைத்தார்கள்…. சில நேரங்களில் ஆவேசம் காட்டினார்கள்… பல நேரங்களில் திமுக வெளிநடப்பு செய்ததும் பின்னாலேயே இவர்களும் வெளிநடப்பு செய் தார்கள்…

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு பிரச்னையை அவையில் எழுப்ப முயன்ற மா.கம்யூ., உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவை யில் தொடர்ந்து பிரச்னையை பேச கோஷம்போட்டனர்… இதனால் அவையில் இருந்து மா.கம்யூ., உறுப்பினர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப் பட்டனர். அதே தினம் மற்ற எதிர்க்கட்சிகள் இதே பிரச்னையை எழுப்பி பேச அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்தன.

மொத்தத்தில் கூட்டத்தொடரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிமுக அரசு மென்மையான போக்கை கையாளுகிறதோ என்று எண்ணும் அளவுக்குத்தான் இருந்தது. வெளியே மேடைகளில் அதிமுக அரசை சகட்டு மேனிக்கு குற்றம் சொல்லி பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டசபையில் பெரிதாக குற்றம் சுமத்தாமல் பொத்தாம் பொதுவாக பேசியதும்… சில நேரங்களில் அரசை பாராட்டி புகழந்து தள்ளியதும் கவனிக்க வேண்டிய ஒன்று…

‘கேள்வியின் நாயகி’ விஜயதாரணி (காங்கிரஸ்)

காங்கிரஸ் உறுப்பினர்களை பொறுத்தவரை விஜயதரணிதான் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் ‘கேள்வி நாயகி’ என்ற பட்டம் பெறும் அளவுக்கு சட்டசபை கூட்டத்தொடரை கலங்கடித்தார்…. ‘என் பெயரை சொல்லக்கூட பயமாக இருக் கிறதா’ என்று அவையில் சபாநாயகரை பார்த்து கூச்சல் போடும் துணிவு உறுப்பினர் விஜயதாரணிக்குத்தான் இருந்தது… மூத்த உறுப்பினர் துரைமுருகன் ஒருமுறை ‘மைக் இல்லாமலேயே பேசிக் கொண்டிருக்கும் அவர்களை கட்டுப் படுத்துங்கள்’ என்று விஜயதாரணி மைக் இல்லாமலேயே பேசுவதை சுட்டிக்காட்டி சபா நாயரிடம் சொல்ல… அதற்கு சபாநாயகர் ‘அந்தம்மா யாருக்கும் கட்டுப்படமாட்டாங்க… உங்க உறுப்பினர் சிவசங்கரை தொடர்ந்து பேச சொல்லுங்க’ என்று சொல்ல… ‘மைக் சத்தத்தை விட அந்தம்மா சத்தம் அதிகம் இருக்கிறது’ என்று துரைமுருகன் சொல்ல அவையே சிரிப்பலையில் மூழ்கியது… ஆனாலும், விஜயதரணி தொடர்ந்து சபா நாயகரை பார்த்து ‘என் பேரை சொல்லுங்கள்’ என்று கூச்சல் போட வேறு வழியின்றி ‘ம்… உங்க பேரை சேத்துகிட்டேன்’ என்று சபாநாயகர் அறிவிக்க… ‘இப்பவும் நான்தான் ஜெயித்தேன்’ என்று சொல்லியபடியே இருக்கையில் அமர்ந்தவர் விஜயதரணி.

மக்கள் பிரச்னைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்புகிறதோ இல்லையோ முதலில் குரல் கொடுத்து பிரச்னையை எழுப்புவது விஜயதரணிதான்… பல நேரங் களில் மைக் இல்லாமலேயே தொடர்ந்து அவையில் அவர் கருத்தை பேசிவிடுவார்… ஆனால் அவர் பேசிய கருத்துக்கள் எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது… அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. முதல்வர் அவையில் இருந்தாலும் குரல் கொடுப்பார்… சபாநாயகர் எச்சரித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசி அவையில் இருந்து வெளிநடப்பு செய்வார்…

‘பதாகை’ கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்பது போய் இந்த சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு ‘பதாகை’ கிருஷ்ணசாமி என்று பேர் மாறிவிடும்போல… அப்படி சபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டால் கையில் தயாராக மடித்து வைத்திருக்கும் பெரிய சாட் பேப்பரை எடுத்து விரித்து பிடித்து மைக் இல்லாமலேயே பேசுவார்… சபாநாயகர் பலமுறை எச்சரிப்பார்… சில நேரம் அவை காவலர் களால் வெளியேற்றப்படுவார்… பல நாட்கள் வெளிநடப்புதான்… கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் ‘சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் பேச்சுரிமையை பறிக்கிறார்’ என்று பதாகையை சட்ட சபையில் பிடிக்க… சபாநாயகர் உத்தரவுபடி சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்…

சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளில் சிலதான் மேலே படித்தது…

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானிய கோரிக்கையின் போது தங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கழுத்தில் கருப்பு துண்டு அணிந்து சபைக்கு வந்திருந்தார்கள்… ஒரு நாள் தன் எதிர்ப்பை காட்ட காங்கிரஸ் பெண் உறுப்பினர் விஜய தாரணி கருப்பு சேலை அணிந்து அவைக்கு வந்திருந்தார்…

இந்த 14வது சட்டசபையின் பதவி காலம் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலை யில் தங்கள் தொகுதி பிரச்னைகளை தீர்க்க சட்டசபை கூட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சி மறந்து பயன்படுத்திக் கொண்டார்களா என்பது அவரவர் மன சாட்சிக்கே வெளிச்சம்…!

கோடங்கி

error: Content is protected !!