மாத்ருபூமி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்!

மாத்ருபூமி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் – பிரதமர் தொடங்கி வைத்தார்!

இந்தியாவின் தலைசிறந்த 10 நாளிதழ்களில் ஒன்றாக மாத்ருபூமி திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளிதழின் நுாற்றாண்டு விழா 2023ல் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் இதற்கான ஓராண்டு கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று துவக்கி வைத்தார் . சுதந்திர போராட்டத்தில் துவங்கி நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மாத்ருபூமி நாளிதழுக்கு கேரளாவில் 10 பதிப்புகளும், மும்பை, சென்னை, பெங்களூரு, புதுடில்லியில் நான்கு பதிப்புகளும், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ஒரு பதிப்பும் உள்ளன. இவை தவிர, 11 வார, மாத இதழ்களும் வெளியாகின்றன. இப்பேர்பட்ட மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தித்தாளின் பயணத்தில் முன்னிலை வகிக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் பிரதமர் புகழாரம் சூட்டினார். “மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாத்ருபூமி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகப் பிறந்தது” என்று அவர் கூறினார். காலனி ஆட்சிக்கு எதிராக நமது நாட்டின் மக்களை ஒற்றுமைப்படுத்த இந்தியா முழுவதும் செய்தித்தாள்களையும், பருவ இதழ்களையும் தொடங்கிய புகழ்மிக்க பாரம்பரியத்தில் பதிப்புகளை அவர் முன் வைத்தார். இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காலத்தில் தங்களின் பணிக்கு செய்தித்தாளைப் பயன்படுத்தியதில் உதாரணங்களாக லோகமான்ய திலகர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, ஷியாமாஜி கிருஷ்ண வர்மா மற்றும் பலரை அவர் தெரிவித்தார். அவசரநிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடிக்க எம் பி வீரேந்திர குமாரின் முயற்சிகளைக் குறிப்பாக அவர் நினைவுகூர்ந்தார்.

சுயராஜ்ஜியத்திற்காக விடுதலைப் போராட்டக் காலத்தில் நமது உயிரைத் தியாகம் செய்யும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கவில்லை என்று கூறிய பிரதமர், “இருப்பினும் வலுவான, வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கிப் பணியாற்ற அமிர்தகாலம் நமக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றார். புதிய இந்தியாவின் இயக்கங்கள் குறித்து ஊடகத்தின் ஆக்கப்பூர்வ தாக்கம் பற்றி அவர் விவரித்தார். மிகுந்த ஈடுபாட்டோடு தூய்மை இந்தியா இயக்கத்தை ஒவ்வொரு ஊடக நிறுவனமும் மக்களிடம் எடுத்துச்சென்றதை அவர் உதாரணமாகத் தெரிவித்தார். இதேபோல் யோகா, உடல்தகுதி, பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் ஆகியவற்றைப் பிரபலப்படுத்துவதில் மிகுந்த ஊக்கமளிக்கும் பங்கினை ஊடகம் செய்துள்ளது என்றார். “இந்த விஷயங்கள் அரசியல் தளம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை ஆகும். வரும் ஆண்டுகளில் சிறந்த தேசத்தை உருவாக்குவது பற்றியவை இவை” என்று அவர் மேலும் கூறினார்.

விடுதலைப் போராட்டத்தின் நிகழ்வுகளில் மிகக் குறைவாக அறியப்பட்டவற்றை, போற்றப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களை, இந்தப் போராட்டத்தோடு தொடர்புடைய இடங்களை எடுத்துரைக்கும் முயற்சிகளை ஊடகங்கள் ஊக்கப்படுத்தலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். இதேபோல் ஊடகம் அல்லாத பின்னணியை கொண்ட வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான வழியை ஏற்படுத்தவும் மாநில மொழிகள் பேசப்படாத பகுதிகளில் அவற்றை மேம்படுத்தவும் செய்தித்தாள்களால் முடியும்.

இன்றைய நாளிலும் இந்தக் காலத்திலும் இந்தியாவிடமிருந்து உலகின் எதிர்பார்ப்பு பற்றி பேசிய பிரதமர், பெருந்தொற்றை கையாளும் திறன் இல்லை என்ற தொடக்கநிலை ஊகத்தை இந்தியா புறந்தள்ளியது என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு 80 கோடி மக்கள் விலையில்லாத ரேஷன் பெற்றனர். 180 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். “இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களால் ஊக்கம் பெற்றுள்ள நமது நாடு ஆத்மநிர்பார்த்தா அல்லது தற்சார்பை நோக்கி முன்னேறுகிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியாவைப் பொருளாதார ஆற்றல் மிக்கதாக மாற்றுவது உள்நாட்டு மற்றும் உலகளாவியத் தேவைகளை நிறைவேற்றுவதாகும்” என்று பிரதமர் கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கப்படுத்தும். உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு பல்வேறு துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் புதிய தொழில்தொடங்கும் நடைமுறை இவ்வளவு அதிகத் துடிப்புடன் ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் மேலும் கூறினார். வெறும் நான்கு ஆண்டுகளில் யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 70 மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.110 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. பிரதமரின் விரைவு சக்தி அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதோடு நிர்வாகத்தையும் தடையில்லாததாக மாற்றும் என்று மோடி குறிப்பிட்டார். “இந்தியாவின் அனைத்து கிராமங்களும் அதிவேக இணையதளத் தொடர்பை பெறுவதை உறுதி செய்ய நாங்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறோம். நமது முயற்சிகளின் வழிகாட்டும் கோட்பாடுகள், எதிர்கால தலைமுறைகளுக்கு தற்போது இருப்பதை விட சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டுவதை உறுதி செய்கின்றன” என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!