மவுலிவாக்கத்திலுள்ள “அந்த 11 மாடி ” கட்டிடத்தையும் இடித்து தள்ளுங்க! – சுப்ரீம் ஆர்டர்

மவுலிவாக்கத்திலுள்ள   “அந்த  11 மாடி ” கட்டிடத்தையும் இடித்து தள்ளுங்க! –  சுப்ரீம் ஆர்டர்

காஞ்சீபுரம் மாவட்டம், மவுலிவாக்கத்தில் இரண்டு பலமாடி கட்டிடங்களை பிரைம் சிருஷ்டி ஹவுசிங் என்ற நிறுவனம் கட்டி வந்தது. இதில் ஒன்றான 11 மாடி கட்டிடம் கடந்த 28.6.14 அன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடிந்து தரைமட்டமானது.இந்த சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 41 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள். ஒருவர் அடையாளம் தெரியவில்லை. காயமடைந்தவர்களில் 19 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு, ஆந்திரா அல்லது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

buil may 13

11 மாடி கட்டிடம் இடிந்ததும், அதன் அருகில் கட்டப்பட்டிருந்த மற்றொரு கட்டிடம் உடனே பொதுப்பணித் துறையால் மூடி முத்திரையிடப்பட்டது. அதன் 50 மீட்டர் தொலைவில் வசித்துவந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் அருகில் இருந்த பள்ளி ஒன்றும் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை இடித்துத் தள்ளவும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கட்டட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மௌலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டடத்தை கட்டிய “பிரைம் ஸ்ருஷ்டி ஹவுசிங்’ நிறுவனம் கட்டிய மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தை இடித்துத் தள்ளவும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவின் அமலாக்கம் குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக இக்கட்டிடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைபடத்தில் 46 தூண்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு மாறாக 37 தூண்கள் மட்டுமே நிறுவப்பட்டன. அவற்றில் 22 தூண்களுக்கான சுமையின் அளவின் இறுதிநிலை, தாங்கு திறனையும் தாண்டியிருந்தது.
எல்19 என்ற தூணுக்கான அதிகபட்ச சுமைதிறன் 220 டன் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் 420 டன் அளவு சுமை இருக்க வேண்டும். பெரும்பான்மையான தூண்களின் இறுதிநிலை தாங்குதிறன், மதிப்பீடு செய்த சுமை அளவைக்காட்டிலும் கணிசமான அளவுக்கு குறைவாக இருந்தது. இதுதான் கட்டிடமும், தூண்களும் இடிந்து விழுவதற்கு வழிவகுத்தது.

அதுபோல, செங்குத்து மற்றும் கிடைமட்ட உறுதித் தன்மை குறித்த சோதனைகள், ஊசலாட்ட சோதனைகள் செய்யப்படவில்லை. கடைக்கால் அமைப்புக்கு கிடைமட்டமான வலுவை செம்மையாக்குவதற்குப் போதுமான அளவில் பற்றவைப்புப் பணியும் செய்யப்படவில்லை. இவை தணிக்கை செய்யப்படவில்லை.திட்ட வடிவமைப்பின் அடிப்படை அறிக்கை தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிட வேண்டும். அதற்கு இணக்கமான பணிகள் நடக்கவில்லை. கட்டுமான பொருட்கள், பதிவுருக்கல், வேலைப்பாடு, கட்டுமானம் ஆகியவற்றுக்கான ஆய்வு நடைமுறை பின்பற்றப்படவில்லை.

கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட கற்காரை போதிய திண்ணத்தை கொண்டிருக்கவில்லை. கற்காரை வெளியே வராமல் இருப்பதற்காக உத்திரத்தின் இருபக்கத்திலும் உள்ள கம்பி வளையங்களின் இடைவெளி 100 மி.மீ. இருக்க வேண்டும். ஆனால் இங்கு 200 மி.மீ.யாக இருந்தது. மேலும், தூண்களில் மறுவலுவூட்டல் செய்யப்படவில்லை.கீழ்ப்பகுதியில் சில இடங்களில் மடிப்புகள் அனுமதிக்கப்பட்டதால் அதிலிருந்த கம்பிகள் நழுவிவிட்டன. மடிப்புகள் அமைக்கப்பட்ட இடத்தில் கம்பிகளை இணைப்பதற்கான விதிகள் மீறப்பட்டுள்ளன.

இந்த துயர சம்பவத்துக்கு பின்னணியாக உள்ள முக்கிய காரணம், கட்டிடம் கட்டியவர் (பில்டர்) மற்றும் அவரது கூட்டாளிகளான கட்டிடக்கலை வல்லுனர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், ஆலோசகர் விஜய் பர்கோத்ரா ஆகியோராகும். இவர்கள் ஒவ்வொரு நிலையிலும், கட்டிடத்துக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட வரைபடம் மற்றும் கட்டுமான நடவடிக்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்பட்டதே காரணமாகும்.கட்டிடக் கலை வல்லுனர் சுகன்யா, சுட்டிக்காட்டிய முக்கியமான மாறுபாடுகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஒப்புதல் அளிக்கப்பட்ட அசல் திட்ட வரைபடத்தை தெரிந்தே மீறியுள்ளனர்.

கட்டுமானத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை புறந்தள்ளிவிட்டு, பெருமளவு ஆதாயம் பெறும் நோக்கத்தில் விருப்பத்துக்கு ஏற்றபடி, கட்டுமானத்தை மேற்கொண்டதுதான் கட்டிடம் தகர்ந்து விழுவதற்கு இறுதியான காரணமாக அமைந்துவிட்டது. மாறுபட்ட எண்ணம் கொண்டவர்களின் மாறுபாடான செயல் இது.கட்டிடம் கட்டியவரும், அவருடைய கூட்டாளிகளும் விதிமுறைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து, ரகசியமாக பணிகளை மேற்கொண்டதும், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டவரைபடத்துக்கு மாறாக வேறொன்றை மாற்றிய இழி செயலையும் ஒரு நபர் கமிஷன் கண்டறிந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!