மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் வன்முறை.. – டெல்லி போலீஸை குற்றம் சாட்டும் வீரர்கள்!

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் வன்முறை.. – டெல்லி போலீஸை குற்றம் சாட்டும் வீரர்கள்!

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.

நேற்று மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், முன்னாள் தடகள வீராங்கனையுமான பி.டி.உஷா நேரில் சந்தித்தார். அவர்களிடம் கலந்துரையாடிய அவர், போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சிறை செல்லும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

இன்று ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் தங்களை தாக்கியதாக, மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 11 நாட்களாக இவர்கள் அமைதியான போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பு அளித்த விளக்கத்தில், “ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிந்த படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார். போலீசார் தலையிட்டபோது, ​​ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவும் வேறு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குடிபோதையில் உள்ள போலீஸ்காரர்கள் தங்களை தாக்கியதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம். “குடிபோதையில் உள்ள தர்மேந்திரா என்ற போலீஸ்காரர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தாக்கி எங்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார்” என முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தம்பி துஷ்யந்த் போகத்தின் தலையை அடித்து உடைத்ததாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கீதா போகட் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டம் நடைபெற்றும் வரும் இடத்தில் மயங்கி விழுந்த வினேஷ் போகத், “இப்படி நடத்தப்படுவதற்கு நாங்கள் குற்றவாளிகள் அல்ல. நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்” என சொன்னபடி கதறி அழுதார்.

சில போலீசார் குடிபோதையில் இருந்ததாக எழுந்த புகாரை டெல்லி போலீசார் நிராகரித்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த படையையும் பயன்படுத்தவில்லை என்றும், மோதலில் 5 போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து, போராட்டம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு, ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!