மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த இரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
22 - Rs - in vanikam
அக்கடிதத்தில் கீழ்க்கண்ட முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளார்.

1. பின் தங்கிய மாநிலங்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்தக் குழு, பின் தங்கிய மாநிலங்களை அடையாளம் காண்பதற்காக நிர்ணயித்துள்ள சில வரையறைகளின்படி நிதி ஒதுக்கீடு செய்வது தவறு. அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையம் இருக்கும்போது அதைப் புறந்தள்ளிவிட்டு இந்தக் குழுவின் ஆலோசனைப்படி செயல்படுவது தவறாகும்.

2. தேசிய வளர்ச்சிக்குழுவால் வகைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் மிகக்குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்ற புதிய பிரிவைச் சேர்க்க இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளதற்கு மத்தியத் திட்டக்குழு மற்றும் தேசிய வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் தேவை. மத்திய அரசின் பதவிக் காலம் முடிவடைய ஆறு மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அடிப்படையில் தவறானதாகும்.

3. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் தேசிய இலக்கை எய்தியுள்ளன. 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையை நிதி ஒதுக்கீட்டிற்கான அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் 1971ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை நிலவரத்தைக் கணக்கில் கொள்வது தேசிய இலக்கை எய்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களை தண்டித்துவிட்டு, இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு பரிசு வழங்குவது போலாகும்.

4. உத்தேசக் குழு பரிந்துரையின்படி கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தங்களின் சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைந்த மாநிலங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். இத்தகைய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் இந்தக் குழுவின் நிதி ஒதுக்கீட்டு நடைமுறை உள்ளது.

5. அரசியல் ரீதியில் தனக்கு வேண்டிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மறைமுக நோக்கத்துடன் இந்த அறிக்கை அவசரக் கோலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எழுப்பியுள்ள இந்த பிரச்னைகள் மத்திய-மாநில உறவில் முக்கியமானவையாகும்.

வருவாயைப் பெருக்குகின்ற வருமானவரி, நிறுவன வரிகள், சுங்க வரி, தீர்வை வரி, இரயில், வான், கடல் வழியாகச் செல்லும் பயணிகள் மற்றும் பண்டப் போக்குவரத்து ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள், பங்குச் சந்தை நடவடிக்கைகள், இரயில்வே கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் ஆகியன, மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும் வங்கிகள், பணம் அச்சிடுதல், மூலதனச் சந்தை ஆகியவையும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வேளாண்மை வருமான வரி நில வருவாய், விற்பனை வரிகள், கொள்முதல் வரிகள், செல்வ வரி, வாரிசுரிமை வரி, நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி, கலால் வரி, மின்சார வரி, பொழுது போக்கு இனங்கள் மீதான வரி, தொழில் வரிகள், ஊர்திகள் மீதான வரிகள் ஆகியன மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசோடு ஒப்பிடும்போது மாநில அரசு விதிக்கும் வரிகள் வருவாயைப் பெருக்கும் தன்மையில் இல்லை. அண்மைக்காலமாக சீரான வரி நிர்வாகம், சீர்திருத்தம் போன்ற காரணங்களைக் காட்டி மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய அரசிடம் நிதி அதிகாரங்கள் பெருமளவில் அளிக்கப்பட்டதால் மாநிலங்களின் நிதித் தேவைகளுக்கு மத்திய அரசின் வரி வருவாய் தொகுப்பிலிருந்து பிரித்துக் கொடுப்பதற்காக நிதிக்குழு ஆணையம் அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் சட்டத்தில் சொல்லப்படாத திட்டக்குழு, நாடாளுமன்ற சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசுகளுக்கு நிதி உதவியை திட்டக்குழுவும் செய்யத்தொடங்கியது. காலப்போக்கில் நிதிக்குழு ஆணையம் மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியைவிட திட்டக்குழு ஒதுக்கும் நிதி அதிகமாகிவிட்டது.

அரசியல் சட்டம் 280ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவரால் நிதிக்குழு ஆணையம் அமைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் திட்டக்குழுவும் மேற்கண்ட குழுக்களும் தலையிடுகின்றன. நிதிக்குழு ஆணையம் அரசியல் சட்ட விதிகளின்படி நடுநிலையோடு, நீதித்துறை போல செயல்படுகிறது. ஆனால் திட்டக்குழுவோ அல்லது மத்திய அரசின் பல்வேறு துறைகள் அமைத்துள்ள வேறுபல குழுக்களோ அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றன.

நிதிக்குழு ஆணையம் எவ்விதப் பரிந்துரைகளை வழங்கவேண்டும் என்பதற்கு அடிப்படையான ஆய்வு வரையறையை மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துவிடுகிறது.

இதன் விளைவாக நிதிக்குழு ஆணையத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதோடு அந்த வரையறைக்குட்பட்டு தங்களுடைய நிதித் தேவைகளை மாநிலங்கள் சுருக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக நிதிக்குழு ஆணையத்தின் சுயாட்சிப் பண்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

நடுநிலையுடன் செயல்படவேண்டிய நிதிக்குழு ஆணையத்தின் தலைவர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளது. நிதிக்குழுவும் திட்டக்குழுபோன்றே அரசியல் சார்புடையதாக மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது.

நிதிக்குழு ஆணையத்தில் தங்களுடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென்று மாநிலங்கள் எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால் இதுவரை அமைக்கப்பட்ட பல்வேறு நிதிக்குழு ஆணையங்களில் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவே இல்லை. நிதிக்குழு ஆணையத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் மாநிலங்களுக்கிடையே எத்தகையப் பாகுபாடும் காட்டக்கூடாது. ஆனால் நடைமுறையில் மத்திய அரசு அவ்வாறு நடப்பதில்லை.

நிதிக்குழு ஆணையத்தின் பரிந்துரைகள் முழுவதையுமோ அல்லது சிலவற்றையோ நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.

மத்திய அரசின் பொறுப்பில் உள்ள கட்சி எதுவோ அந்தக் கட்சி தனது அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப அதன் திட்டங்களை வரையறுக்கிறது. உறுப்பினர்களை நியமிக்கிறது. இதன் விளைவாக அரசியல் சட்டப்படி அமைக்கப்படுகிற நிதிக்குழு ஆணையத்தின் சுயாதிக்க உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக திட்டக்குழு திகழவில்லை. ஆனால் அதனிடம் சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மாநிலங்களின் உரிமைகள் அடியோடு பறிக்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக அது விளங்கி, மாநிலங்களுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்க வேண்டும். மாநிலத் திட்டக்குழுக்களுடன் கலந்தாலோசித்து மத்தியத் திட்டக்குழு இயங்க வேண்டும். அப்போதுதான் மாநிலங்களின் சுயாதிக்கம் பாதுகாக்கப்படும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 268 முதல் 272ஆம் பிரிவு வரையும் 274, 275 மற்றும் 279 முதல் 282ஆம் பிரிவு வரையிலும் மத்திய-மாநில நிதி உறவுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இந்த அரசியல் சட்டப் பிரிவுகள், மத்திய அரசுக்கு நிதிதுறையில் வழங்கியிருக்கிற எல்லையற்ற அதிகாரம் என்பது மாநில அரசுகளை மிகப்பெரும் அளவுக்கு பாதித்துவிட்டது.

மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறுகிற உதவி என்பது நிதிக்குழு ஆணையம், திட்டக்குழு மற்றும் பல்வேறு மத்திய அமைப்புகளின் மூலம்தான் பெறவேண்டிய நிலை உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் சுயாதிக்க நிலைமையைப் பொறுத்துதான் மத்திய-மாநில நிதி உறவுகள் அமைகின்றன. ரிசர்வ் வங்கியின் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அது ஒரு சுயாதிக்க அமைப்பாக செயல்படுமேயானால் மத்திய-மாநில நிதி உறவுகளில் பல நெருக்கடிகள் எழுந்திருக்காது. ஆனால் உண்மை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயல்படவேண்டிய நிலை உருவாகிவிட்டது. மத்திய அரசின் விருப்பத்தை மீறி அது செயற்படமுடியவில்லை. மாநிலங்களுக்கு ஓவர் டிராப்டுகள் கொடுக்கக்கூடாது என மத்திய அரசு கூறினால். உடனே அதை ரிசர்வ் வங்கி செயற்படுத்துகிறது. மத்திய அரசு ஓவர் டிராப்ட் அதிகமாக வாங்குவதை ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரிசர்வ் வங்கி தனது சுயாதிக்க அந்தஸ்தை இழந்து, மத்திய அரசின் ஒரு பிரிவாகவே செயல்படவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. இது நாட்டின் பொருளாதார அமைப்பிற்கும் கூட்டாட்சி அமைப்புக்கும் விடப்பட்டிருக்கிற சவாலாகும்.

1990ஆம் ஆண்டிற்குப் பிறகு தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளை மாநில அரசுகளை கேட்காமலே மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மத்திய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு முறை மேலும் நெகிழ்ச்சியற்றதாக ஆகிவிட்டது.

இந்திய நிதியமைச்சராக இருந்த சி.டி. தேஷ்முக் மத்திய-மாநில உறவுகள் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்:

“மாநிலங்கள் நிதித்துறையில் மத்திய அரசைச் சார்ந்தே இருக்கவேண்டியிருப்பதும் மாநிலங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதும் மறுபரீசீலனை செய்யப்பட வேண்டும். அரசியல் சட்டம் வகுக்கப்பட்டபோது, இந்தப் பிரச்னை உணரப்பட்டதா என்பது ஐயத்திற்கிடமானது. மத்திய அரசிடமிருந்து மானியங்களையும் கடன்களையும் பெற்றுத் தீரவேண்டிய நிலையில் மாநிலங்கள் இருப்பதற்குப்பதில் அவற்றிற்குப் போதுமான வருவாய் கிடைப்பதற்கு வழி செய்யப்படவேண்டும். மானியங்கள், கடன்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அரசியல் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது.’

இக்கருத்தை அனைத்து அகில இந்திய கட்சிகளும் மனதில் கொண்டு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து ஆராயவேண்டிய வேளை வந்துவிட்டது. மத்திய-மாநில மோதல்கள் தீவிரமாவதை தவிர்க்க வேண்டுமானால் அரசியல் சட்டத்தை உரிய முறையில் திருத்துவதைத் தவிர வேறுவழியில்லை.

பழ. நெடுமாறன்

Related Posts

error: Content is protected !!