December 4, 2022

மக்கள் தொகை பெருக்கம் அவசியமானதா? கிளம்பும் புது சர்ச்சை!– ரமேஷ் கிருஷ்ணன் பாபு

டந்த மூன்று நூற்றாண்டுகளாகவே அதிகம் பேசப்படும் விஷயம் மக்கள் தொகைக் கட்டுப்பாடு. மால்தஸ் எனும் பொருளாதார அறிஞர் மக்கள்தொகை பெருக்கல் கணக்கில் அதிகரித்தால் உணவு உற்பத்தி கூட்டல் கணக்கில் அதிகரிக்கிறது; எனவே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அழிவார்கள் என்று எச்சரித்தார். அது முதல் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா நவீன அரசுகளுக்கும் தோன்றத் தொடங்கியது. ஆனாலும் மதக் கருத்தியல் அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டங்கள் ஏதும் நடைமுறையில் இல்லை. விடுதலைக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் ஊக்குவிக்கப்பட்டது. தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை 2-3% அளவிலேயே வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் சமீப காலங்களில் சில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றங்களை அணுகி மக்கள் தொகையைக் குறைக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்; சலுகைகள் கொடுக்கக் கூடாது என்றும் வழக்காடி வருகின்றனர். இதற்கு நேர் மாறாக மிசோரம் போன்ற மாநிலங்களில் குழந்தைப்பெற்றுக்கொள்ள சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். பொதுவாக மதவாத அரசியல் சாயம் பூசியே இப்பிரச்சினைக் காணப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்திற்கு எதிராக சில தொண்டு நிறுவனங்கள் பேசி வருகின்றன. அவற்றின் கவலை இப்படி கட்டுப்பாடுகள் இட்டால் பெண் மக்களின் விழுக்காடு மிகவும் வீழ்ந்துவிடும் என்றும் இப்போதே ஆண்கள் பலர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் சமூகத்திற்குள்ளேயே நிலவி வரும் பெண்களுக்கு எதிரான மனப்பாங்கு கூர்மையடைந்து பெண் சிசுக்கொலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். இரண்டு பக்கத்திலும் சில நியாயங்கள் இருக்கலாம். ஆயினும் மூன்றாவதாக சொல்லப்படும் வாதம் பிறக்கின்றவர்கள் அனைவரும் இரண்டு கைகளுடனேயே பிறக்கின்றனர். எனவே அவர்களை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? பிறந்து, உழைத்து நாட்டை வளப்படுத்தட்டுமே? என்று கேட்கின்றனர்.

இப்போது மால்தஸ் சொன்னதை மீண்டும் காண்போம். இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தையும், அடிக்கடி ஏற்படும் வெள்ளம், பஞ்சம் இவற்றின் காரணமாக தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே பேரளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்யத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக பசி, பட்டினி, பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டு, மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்பட்டதாக அரசு தகவல் சொல்கிறது. என்றாலும் கூட 2050 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றே வல்லுநர்கள் சொல்கின்றனர். இச்சூழலில் அதிக மக்கள் தொகை தேவையா எனும் கேள்வி எழுகிறது. என்னத்தான் வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அமைதி எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லையென்றால் இவற்றின் சீர்கேடு அதிகரிக்கவே செய்யும். இதை எப்படி எதிர்கொள்வது? தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வறுமை இன்னும் பரவலாகவும், ஆழமாகவும் இருக்கிறது. இப்போதைய கொரோனா நோய்த்தொற்று மக்களின் உடல் நலன் எவ்வாறு சமரசத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி விட்டது. இதுவரை 30,000 ற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அடுத்து மூன்றாவது அலை வரவிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் உயிர்ப்பலி ஏற்படக்கூடும். எனவே நாம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டால்தான் மக்களின் நல்வாழ்வை அதிகரித்து எத்தகைய நோய்த்தொற்றிலும் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும்.

பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான ஆட்கள் கிடைக்க மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்போர் அதே மக்கள் தொகையினரை வயதான காலத்தில் பராமரிக்கவும் வேண்டும் என்பதை கணக்கில் கொள்ளாமல் பேசுகின்றனர். சீனாவில் முதியோர் எண்ணிக்கைக் கூடியுள்ளது. இந்தியாவிலும் அடுத்த இருபது ஆண்டுகளில் முதியோர் எண்ணிக்கைக் கூடி விடும். எனவே அதிக மக்கள்தொகை என்பது சுமையே. அத்துடன் இல்லாமல் இயற்கை வளங்களை தொடர்ந்து வற்றாமல் பயன்படுத்த இயலாது. ஒரு விஷயத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். நமது கருத்தரிப்பு வீர்யமும் குறைந்து வருகிறது. நாம் இயற்கையை மதித்து நடக்காமல் விட்டதன் எதிரொலியாக கருத்தரிக்கும் ஆற்றல் குறைந்து வருகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். உலகின் பல நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கும் குறைந்து அங்கெல்லாம் குழந்தை பிறப்பைக் கொண்டாடும் சூழ்நிலை இருக்கிறது. அய்ரோப்பிய ஒன்றியத்தில்தான் இப்படி நிகழ்ந்து கொண்டுள்ளது. அங்கெல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்து வருகிறது. கனடா போன்ற நாடுகள் குடியேற்றத்தை வரவேற்கின்றன. அங்கு பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதால் புதியவர்களை வரவேற்கிறார்கள். ஆஃபிரிக்க, ஆசிய கண்டங்களில் இது போன்ற சிந்தனைக்கே இடமில்லை. எனவே நாம் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்வதே உசிதம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு