பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!!

பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!!

தற்போது சகல தலைமுறையினரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் டாப் லிஸ்டில் இருப்பது பேஸ்புக். ஸ்கூல், காலேஜ், வீடு, ஆபீஸ் என சமூகத்தில் யாவரும், எங்கும், கால நேரமின்றி மூழ்கித் திளைக்கும் இந்த வலைதளம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் மறந்துபோன தொடர்புகளை புதுப்பிக்கவும் பெரும் உதவி புரிகிறதுதான். ஆனால் அதன் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மறைந்திருக்கும் ஆபத்து பற்றி அடிக்கடி செய்திகள் வெளியானாலும் பலருக்கும் இது குறித்து இன்னும் தெரியவில்லை. குறிப்பாக நூதன ‘ஹேக்கிங்’ மற்றும் சூபிஷ்சிங்’ முறைகளை பயன்படுத்தி எப்பேர்ப்பட்டவரையும் கண்ணீர் விட்டு கதறி அழ வைக்கும் சக்தி கொண்ட வில்லன்கள் இணையத்தில் ஏராளம் பேர் இருக்கின்றனர்.
Facebook Privacy Flaw Exposes Private Photos
இது குறித்து மாயவரத்தான் ரமேஷ்குமார்,”ஆட்கள் தேவை மற்றும் ரத்த தானம் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களிலும், வாட்ஸப் மெசேஜ்களிலும் வந்தவுடன் உடனடியாக நண்பர்களுக்கு பரப்புகிறவர்களா நீங்கள்? கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

பள்ளிக்கூடக் குழந்தைகளுடன் வந்த வேன் விபத்துக்குள்ளாக உடனடியாக ஏராளமான ரத்தம் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட தகவல்கள் வரும். உடனடியாக பரிதாபப்பட்டு ஓடிச் சென்று ரத்த தானம் செய்ய செல்வதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் உங்களின் பரிதாபத்தைப் பயன்படுத்திக் கொண்டு உங்களின் ரத்தத்தை ஓசியில் உறிந்துக் கொண்டு, அதனை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் கொடுமைகள் நடைபெறுவதாக செய்திகள் காதில் விழுகின்றன.

அதே போல ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ விளம்பரங்களையும் கூட உங்களுக்குத் தெரிந்த நிறுவனத்தில் விளம்பரப்படுத்தியதாகவோ, அல்லது உங்களுக்கு நன்கு பழக்கமான ஆட்கள் தேவை விளம்பரங்களை வெளியிடும் இணைய தளங்களில் இருந்தோ மட்டும் அந்தத் தகவலை எடுத்துப் பகிருங்கள்.

நமக்கு யாரோ அனுப்பி வைக்கிறார்கள்.. நாமும் எல்லாருக்கும் அனுப்பி வைப்போம் என்று இஷ்டத்திற்கு அனுப்பி வைத்து உங்கள் நட்பு வட்டத்தில் யாரையும் பலிகடா ஆக்கி விடாதீர்கள். ” என்று வார்னிங் கொடுத்திருந்தார்

அதிலும் ‘ஹேக்கர்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் இணையக் குறும்பர்களுக்கு, ஒரு பேஸ்புக் கணக்கை அழித்தொழிப்பதெல்லாம், சுண்டைக்காய் வேலை. ‘பேஸ்புக்’கில் இருக்கும் படங்களை கைப்பற்றுவது, ‘மார்பிங்’ செய்து மாற்றி வெளியிடுவது, பெண்கள் படங்களை ஆபாச தளங்களில் வெளியிடுவது என்பதெல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம். இத்தகைய அபாயத்திலிருந்து, ‘பேஸ்புக்’ உரிமையாளர் மார்க் ஸக்கர்பர்க் கூட, தன்னை காத்துக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில், அவரது குடும்ப புகைப்படங்களை, நண்பர்கள் பட்டியலில் இல்லாத வேறொருவர் திருடி மார்க்கின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இதனிடையே ‘பேஸ்புக்’கில் இருக்கும் அபாயங்கள் குறித்து ஆய்வு நடத்திய கோவை மாணவி ஒருவர் கோவை பேராசிரியர் பிச்சாண்டி தலைமையில் ஒரு குழுவாக செயல்ப்பட்டு ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின் அறிக்கை, ‘குளோபல் மீடியா ஜர்னல்’ எனும் சர்வதேச இதழில் பிரசுரிக்கப்பட்டது.

ஆய்வில் கிடைத்த சில அதிர்ச்சி தகவல்கள்:

‘பேஸ்புக்’கின் ‘ப்ரைவெசி செட்டிங்ஸ்’- பயன்படுத்தி, யாரெல்லாம் தங்களது சுய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்?

ஆய்வு முடிவுகளின்படி, 37 சதவீதம் பேர், பேஸ்புக்கின் அபாயங்கள் குறித்து குறைந்த விழிப்புணர்வுடன் உள்ளனர்; 32 சதவீதம் பேர், மிகக்குறைந்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்; 13 சதவீதம் பேருக்கு பேஸ்புக்கில் தற்காப்பு வசதிகள் இருப்பதே தெரிவதில்லை.

காசாக்கும் பேஸ்புக்:

கணக்கு வைத்திருப்பவர்கள் பதிவு செய்யும் கருத்துக்களையும், சொந்த விவரங்களையும், விருப்பங்களையும், ‘இலக்கு விளம்பரம்’ செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்று, பேஸ்புக் வருமானம் ஈட்டுகிறது. ஆனால், இது பற்றி அறிந்திருப்பவர்கள் 37 சதவீதம் பேர் மட்டுமே; 63 சதவீதம் பேர், தங்களது விவரங்களை பேஸ்புக் விற்காது என்று நம்பியே அப்லோடு செய்கின்றனர்; 88 சதவீதம் ‘பேஸ்புக்’ கனவான்கள், தங்கள் தகவல் தொடர்பு விவரங்களை அனைவரும் காணும் வகையில் வைத்திருக்கின்றனர்.
facebook
அடிமையாக இருத்தல்:

பேஸ்புக்கில் இருப்பவர்களில் 32 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது, அதில் செலவழிக்கின்றனர். இது, பேஸ்புக்குக்கு அவர்கள் அடிமையாகிவிட்டனர் என்பதன் உளவியல் அறிகுறி. இருபது சதவீதம் பேர் பேஸ்புக் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.இப்படி பேஸ்புக்கே வாழ்வு என்று இருப்பவர்களுக்கு, அதில் ஏற்படும் பிரச்னைகள் ஒவ்வொன்றும், மன ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் இருப்பதும், இவர்கள் தங்கள் பேஸ்புக் இமேஜுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதும், மிரட்டல் பேர்வழிகளுக்கு மிகுந்த வசதியாகி விடுகிறது. மிரட்டல் விடுப்பவர் யாரென்று கண்டறிவது மிகவும் சிரமம் என்கிற நிலையில், பாதிக்கப்படுவோர் நிலை, பெரும்பாடாகி விடுகிறது.

அறிமுகம் இல்லாத நண்பர்கள்:

பேஸ்புக்கில் இருப்பவர்களில் 52 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், 101 முதல் 500 வரையிலான நண்பர்களை கொண்டிருக்கின்றனர். 23 சதவீதம் பேர், 501 முதல் 1000 வரையிலான நண்பர்களை கொண்டிருக்கின்றனர்; 87 சதவீதம் பேர், எந்த விதத்திலும் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தால்கூட ஏற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு அறிமுகமற்றவர்களை நண்பராக்கும் போது, மோசமான பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் பேஸ்புக்கில் இருக்கிறது. சர்ச்சைக்குரிய படங்களை கைப்பற்றி மிரட்டவும், பிற தவறான வழிகளில் அவற்றை பயன்படுத்தவும், நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்து விடுகிறது.

பெண்களுக்கு அதிகம் பாதிப்பு:

‘பேஸ்புக்’கில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி, புகைப்படங்களை திருடி, அதில் இருப்பவர்களை மிரட்டிய பல குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் செய்திகளாக வெளி வருகின்றன. இதில், பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாவது பெண்களே. இந்த விபரீதம் அறியாமல், பேஸ்புக்கில் இருப்பவர்களில் 9 சதவீதம் பேர், தங்கள் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். நான்கு சதவீதம் பேர், ஏற்கனவே பேஸ்புக்கில் இருப்பவர்களால் மிரட்டலுக்கு ஆளாகியும், அதை விட்டு வெளியே வர மனமின்றி, அதில் மூழ்கியிருக்கின்றனர்.

ஆபத்து நிச்சயம்:

பேஸ்புக்கில் இருப்பவர்களில் 75 சதவீதம் பேர், தங்கள் புரோபைல் பக்கத்தை அனைவரும் காணும்படி வைத்துள்ளனர். மேலும் 68 சதவீதம் பேர், தாங்கள் பதிவேற்றும் படங்களை அனைவரும் பார்க்கும்படி பாதுகாப்பின்றி விட்டு வைத்துள்ளனர்; 88 சதவீதம் பேர், நண்பர்கள் பட்டியலையும், தொடர்பு தகவல்களையும் எல்லோருக்கும் தெரியும்படியாக வைத்திருக்கின்றனர். இதனால் நீங்கள் கவனமாக இருந்தாலும், உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மூலம், உங்களை தாக்க முடியும். நிபுணர்களின் கருத்தும் இதுவே. பேஸ்புக் வில்லன்களிடம் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. ஆகவே பிரச்னையில் இருந்து விலகியிருக்க, முடிந்தளவுக்கு, ‘பிரைவசி செட்டிங்ஸ்’ என்பதில் கவனமாக இருக்க வேண்டும். யாரும் உட்புக முடியாத அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குடும்பப் படங்கள், பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை, பேஸ்புக்கில் பகிர்பவர்களுக்கு, இன்றில்லாவிட்டால், என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வகையில் ஆபத்து வரும் என்பது மட்டும் நிச்சயம்.

பேஸ்புக் கிளீ ன் – அப்:

உங்களது நண்பர் பட்டியலை நீங்களே ஆராய்ந்து பார்த்தால் அதில் எத்தனை பேர் நீங்கள் அறியாதவர்கள், சர்ச்சைக்குரியவர்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களை நீக்கிவிடலாம். போலி கணக்குகளை பேஸ்புக்கில் உருவாக்கி வாடிக்கையாளர் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் கருத்துக்களையும் நீக்கி உங்கள் பேஸ்புக் கணக்கை சுத்தமாக வைத்திருந்தால் மோசமான பின் விளைவுகளிலிருந்து தப்பலாம்.

தகவல் உதவி: தினமலர்

error: Content is protected !!