பெண்களுக்கு தனிச் சலுகைகள்!ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பெண்களுக்கு தனிச் சலுகைகள்!ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
rail sep 19
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :

* கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில் மகளிருக்கென்று தனி கவுண்ட்டர் திறக்கப்படும். ஒரு ஷிப்டில் குறைந்த பட்சம் 120 டிக்கெட்டுகள் விற்பனையாகும் மையங்களில் இது அறிமுகப்படுத்தப்படும்.

* அப்படி குறைந்தபட்ச டிக்கெட் விற்பனை நடைபெறாத மையங்களில் ஏற்கனவே உள்ள மூத்த குடிமக்கள், உடல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோருக்கான கவுண்ட்டரில் மகளிருக்கான டிக்கெட் முன்பதிவுகள் அனுமதிக்கப்படும்.

* பெண்களுக்கு தனி கவுண்ட்டர் இல்லாத மையங்களிலும் கம்ப்யூட்டர் முன்பதிவு இல்லாத மையங்களிலும், பெண்களை அனைவருக்குமான பொது டிக்கெட் கவுண்ட்டரில் நிற்குமாறு வற்புறுத்தக்கூடாது. அந்த பொது டிக்கெட் கவுண்ட்டரிலேயே பெண்களுக்கான தனி வரிசையை அனுமதிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு பலகையை தெளிவாக தெரியுமாறு மையங்களில் வைக்க வேண்டும்.

* ஒட்டுமொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தல் மற்றும் இடைத்தரகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த வசதியை காலை 11.30 மணியில் இருந்து தொடங்க வேண்டும்.

* பெண்களுக்கு தனிச் சலுகை வழங்கப்படும் இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் அவர்கள் யாருக்காக டிக்கெட்டு வாங்கினாலும் அதனை அனுமதிக்க வேண்டும். ஆனால் அந்த கவுண்ட்டர்களில் பெண்களுக்காக முன்பதிவு செய்ய வரும் ஆண்களை அனுமதிக்கக் கூடாது.

* முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுண்ட்டர்களிலும் தேவையை கருதி இதே வசதியை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிராந்திய ரயில்வே நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!